தீப்பற்றிய பாதங்கள்
பெருநகரப் பல்கலைக்கழகங்களின் கல்விப்புல இருக்கைகளுக்குப் பின்னால் அமர்ந்துகொண்டு ‘ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்கள்’ சார்பாகக் கீழிறங்கிவந்து பேசுகிறேன் என்று பெருமிதம்கொள்ளாததாக இருக்கிறது நாகராஜின் குரல். இது ஒதுக்கப்பட்டவரின் சுயவெளிப்பாட்டு முறையாகவும், தன்னாட்சி கொண்ட குரலாகவும் இருக்கிறது. இது அவர்களுக்கான உலகத்துக்குள் இருந்து பேசி நமக்கான, நம் உலகத்துக்கான ஒரு கோட்பாட்டை உருவாக்கிக்கொடுக்க முயல்கிறது. நாகராஜின் உலகத்தில் உடமையிழந்தவர்களும் அதிகாரமற்றவர்களும் நம்முடைய இரக்கத்துக்குக் கொஞ்சமும் இடம்கொடுப்பதில்லை; நம்முடைய பரிதாபங்களுக்காகப் பொறுமையாகக் காத்திருப்பதுமில்லை. அவர்களிடம் திடமான, ஏறக்குறைய உக்கிரமான, தன்னம்பிக்கை காணப்படுகிறது.
செவ்வியலுக்கும் வெகுஜனத்துக்கும், பிராந்தியத்துக்கும் உலகளாவியதற்கும், மரபுக்கும் நவீனத்துக்கும் இடையே ஓர் உரையாடலைத் தொடங்குகிறார் நாகராஜ். ஒருசமயத்தில், நம் காலத்துக்குப் பொருந்தக்கூடிய அரசியல்ரீதியான, கோட்பாட்டுரீதியான புலங்களுக்கான தேடலாக இருந்தது, பின்பு பரந்த தளத்தில் மீளிணக்கத்துக்கான தத்துவார்த்த தேடலாகக் கொஞ்சங்கொஞ்சமாக மாற்றம்கொள்கிறது. இதுவே, தலித்துகளுக்கான அதிகாரப்பகிர்வையும் உயர்சாதிகளைத் தீண்டாமை என்ற சாபத்திலிருந்து விடுவிப்பதையும் தன் வாழ்க்கைத் திட்டமாகக் கொண்டிருந்த காந்திக்கு நெருக்கமாக நாகராஜைக் கொண்டுவருகிறது.