கறுப்பு மை குறிப்புகள்
இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் 2010 - 2015
ஆண்டுகளில் எழுதப்பட்டவை. இந்த காலக்கட்டம் முக்கியமான வரலாற்று நிகழ்வுகள் நடந்தேறிய தருணம். பரமக்குடி துப்பாக்கி குடு, தலித் என்ற பெயரை பள்ளர் சமுதாயத்தினரில் ஒரு பகுதியினர் துறக்க முடிவு செய்தமை, கூடங்கு(ம் அணுமின் நிலையத்துக்கு எதிராக நடந்த போராட்டம், மாற்று பாலினத்தவர் அல்லது பால்புதுமையினர் என்ற அடைவுக்குள் நாம் நிறுத்துவோரின் உரிமைகள் குறித்து பொது வெளியில் நடந்த விவாதங்கள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்த பால்புதுமையினர் மேற்கொண்ட செயல்பாடுகள், நம் அனைவரையும் அதிர்ச்சியிலும் துயரத்திலும் ஆழ்த்திய திவ்யா-இளவரசன் ஆகியோருக்கு நேர்ந்த அவலம், இளவரசனின் மரணம், பொது புத்தியை தூய்மைத் தொழிலாளர் பக்கம் திருப்பிய அவர்களின் போராட்டம், சாதி வெறியை வளர்க்கும் முகமாக மேற்கு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட அரசியல் செயல்பாடுகள், குறிப்பாக பெருமாள் முருகனின் மாதொருபாகன் புதினத்தை முன்வைத்து நடந்த சம்பவங்கள்... இவை குறித்த முக்கியமான அவதானிப்புகளை ஜெயராணி முன்வைக்கிறார்.
ஜெயராணியின் அக்கறைகள், எழுத்து வன்மை, சிந்தனை தெளிவு ஆகியன வாசிப்பு அனுபவத்தை சுவையானதாக ஆக்குகின்றன.கட்டுரைகள் பேசும் விஷயங்கள் படித்து முடித்து விட்ட பிற்பாடு நம்மை யோசிக்க வைப்பதுடன், மனதை விட்டு லேசில் அகலுவதில்லை. சில பகுதிகளை திரும்ப திரும்ப நாம் வாசிக்க வேண்டியுள்ளது. அவரின் சொல்லாட்சியும் அபூர்வமானதாக உள்ளதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும் - பகுத்தறிவு மரபு ஈன்றளித்துள்ள தெளிவான சிந்தனை, அம்பேத்கரிய மரபுக்குரிய சிந்தனையார்ந்த கோபாவேசம் ஆகிய இரண்டும் இணைந்து அவரின் எழுத்துக்கு வல்லமையை வழங்கியுள்ளன.
வ.கீதா
எழுத்தாளர், பெண்ணியவாதி
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.