Skip to content
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000

பெண்ணதிகாரம் - நூல் விமர்சனம்

புத்தகத்தை இங்கே வாங்கலாம்: https://zurl.co/p9uk

கலை இலக்கியத்தின் மீதான விரிந்த விவாதிப்பை முன்னெடுத்த இளைஞர்களின் படைக்குழு ஒன்று உருவாகியிருந்தது திருவண்ணாமலையில்.

எப்போதும் இப்படியானவர்களை கவனத்தில் கொண்டு தான் சார்ந்த அமைப்புகளுக்கானவர்களாக இருத்திக் கொள்ள வேண்டும் என்பதே பலரின் பேரவாவாக இருக்கும்... அப்படியாக மிகப்பெரும் கவனத்தை ஈர்த்த இளைஞர் அணியின் முன்னத்தி ஏர் கு.ஜெயபிரகாஷ்...

நிறைய வாசிப்பின் ஊடே அவரின் எழுத்து பணி அவரை எழுத்தாளராக உருமாற்றியிருந்தது.. அதே சமயம் சிறகன் சல்மான் பறவை ஆர்வலராக,ஆய்வாளராக எழுத்தாளராக மாற்றமடைந்திருந்தார். தளபதி சல்மான் கட்டுரையாளராக வியப்பில் ஆழ்த்துகிறார்... இந்த மூவரின் அடுத்த நகர்வாக புழுதி எனும் இணைய இதழை கண்டடடைந்து அதற்கான களப்பணியில் சோர்வின்றி பரபரக்கிறார்கள்...

பல்வேறான தலைப்புகளில் உருவாக்கி் வெளியிட்டுக் கொண்டிருந்த புழுதி இணைய இதழ் பெண்ணதிகாரம் என்ற இணைய வெளியீட்டை அச்சு வடிவமாக்கி புழுதி பதிப்பக வெளியீடாக வெளியிட்டிருக்கிறார்கள்...

பெண்ணதிகாரம் புத்தகம் படித்து முடித்திருந்தேன்...இந்த புத்தகத்தின் தொகுப்பாசிரியர் எழுத்தாளர் பத்மா அமர்நாத் பெண் ஆளுமைகளிடம் தலைசிறந்த தொழில் முனைவோரிடம் நேர்காணலுக்கான மெனக்கெடல் வியக்க வைக்கிறது...

சித்ரா சிவகுமார்

கல்லூரி பள்ளி நாட்களில் பல தொழிலதிபர்களை சந்தித்தின் விளைவு தொழில் சார்ந்த வாழ்க்கை மட்டும் அமையக்கூடாது என்பதின் தீவிரத் தன்மை காலம் சூழ்ச்சி செய்திருந்தது...ஆனால் காலச்சூழல் அவரை ஒரு பெண் தொழில் முனைவோராக உருமாறி இருந்தது... டாட்டாவின் டைட்டன் டானிஷ்க் கிளை நிறுவனங்களின் 14 ஷோரூம்களை நடத்தி வருவதும்,கிட்டதட்ட 250 பேரின் வாழ்வாதார சூழலை உருவாக்கியிருப்பது மனிதநேயத்தின் படிகற்கள் தானே...

அர்ச்சனா ஸ்டாலின்

சென்னையில் மை ஹார்வெஸ்ட் ஃபார்ம்ஸ் என்ற இயற்கை விவசாய நிறுவனத்தை நடத்தி வருகிறார் ஒரு ஆரோக்கியமான உணவுக்காக அடிகோலிட்டிருக்கிறார்... அதற்கான விலை தன் கார்ப்பரேட் பணியை விட்டு தன் கணவரோடு இந்த சீரிய பணியை செய்து வருகிறார்.. சொந்தமாக நிலம் இல்லாத போதும் தேடல் அவர்களுக்கான வாய்ப்பை உருவாக்கி கொடுத்தது... அந்த தேடலின் வெற்றி விவசாயிகளும் இயற்கை விவசாயம் செய்ய முடியும் என்ற நிலையை இந்த உலகிற்கு உதாரணம் ஆக்கியிருக்கிறது...

பர்வீன் சுல்தானா

பேராசிரியர், பேச்சாளர், இலக்கியவாதி, பெண்ணியவாதி என்கிற அடையாளத்தை விட என்னுடைய கல்வி தகுதியை தகுதியாக பார்க்கிறேன் என்கிற வாழ்வின் வெளிச்சத்தை பாதை போட்டு காட்டுகிறார்.. இளைய சமுதாயத்திடம் குறிப்பாக பெண்களிடம் இவரின் பேச்சுக்கள் பெரும் விழிப்புணர்வையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் அறிவு சார் உரையாடல்கள்... பாரதிக்கு வள்ளலாரை தெரியும், கம்பனை தெரியும் வள்ளுவனையும் தெரியும்...ஆனாலும் பாரதி புதுமையை பேசுகிறான் என்பதாகட்டும்.... பெண்களுக்கு சிரமங்கள், வலி என்பது தவிர்க்க முடியாதது.. ஆனால் துன்பப்பட வேண்டுமா? இல்லையா? என்பது அவர் அவருடைய தேர்வு என்பதாகட்டும்.. பெண்களே உணருங்கள் துன்புறாதீர்கள் என்பதாகட்டும் பர்வீன் சுல்தானா அவர்களால் தான் சொல்ல முடியும்...

ஏ.எஸ். குமாரி

தமிழக மகளிர் ஆணையத்தின் தலைவர்... தமிழகம் முழுமையும் சுற்றுப்பயணம் செய்து பெண்களின் பிரச்சனைகளை தன் பதவி மூலம் எப்படி சீர் செய்ய முடியும் என்கிற ஒரு பெரும் வேள்விக்காராய் இருக்கிறார்... பெண்களே அதிகாரத்தை யாரும் வந்து உங்க கைல கொடுக்க போறது இல்ல... அறிவையும் தெளிவையும் பயன்படுத்தி உங்க நிலையை பலப்படுத்திக் கொள்ளுங்க என்பதை இறுகப் பற்றிக் கொள்வதே மிகச்சிறந்த போதனை...

ஜெயந்தி ஸ்ரீ பாலகிருஷ்ணன்

ஆசிரியராக இருந்தாலும் பல நாடுகளுக்கு பயணம் செய்து நம் மண்ணின் பெருமையை, நம் மண்ணின் பண்பாட்டை, பெண்களின் பாதுகாப்பை கொண்டாடி மகிழ்ந்து கொண்டிருக்கிறார்... உடனடியாக எனக்கு இன்பம் தரக்கூடியது புத்தகம் தான் நான் எந்த பரிசையும் உடனே பிரித்து பார்க்க மாட்டேன்... ஒரு புத்தகத்தை கொடுத்தால் அது மேடையாக இருந்தாலும் அவசரமாக அங்கே பிரித்து பார்ப்பேன்... அது எனக்கு போதை தான் என்கிறார்... அவ்வளவு முதிர்ச்சியாகவும் அழுத்தமாகவும் பேசுவதற்கான காரணி அவரின் கணவர் என்பதாகட்டும்.. அடுத்த பிறவியிலும் அவரே கணவராக வரவேண்டும் என்பதாகட்டும்... வியக்க வைக்கிறார்...

மீரா சுந்தர்ராஜன்

வளர்ச்சி நிறுவனங்கள் தொண்டு நிறுவனங்களின் பணியாற்றினாலும் பல மாநிலங்களில் வேலை செய்திருக்கிறார்... பாலின வேறுபாட்டை ஒழிக்க வேண்டும் என்றால் பெண்கள் ஆண்களுடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும்.. இருவரின் மனநிலை அதற்கேற்றவாறு மாற வேண்டும்... ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னால் பெண் இருப்பது போல... ஒவ்வொரு பெண்ணும் வெற்றிக்கு பின்னே ஆண் இருக்க வேண்டும்.. அது தந்தையாக இருக்கலாம்.. கணவராக இருக்கலாம்.. மகனாக இருக்கலாம்..என்ற இனக்கமான வாழ்க்கை முறைமையை சொல்வது அபாரம்...

அனிதா, காட்டுயிர் புகைப்பட கலைஞர்

இயற்கை என்பது ஆசீர்வாதம் என்கிறார்.. மன அழுத்தத்திற்கு மருந்தாக கணவர் கொடுத்த கேமரா இன்று என்னை ஒளிபடக் கலைஞராக்கி இருக்கிறது... எனக்காக ஒரு இடத்தை கொடுத்திருக்கிறது என்று சொல்லும் அனிதா இந்தத் துறை கடல் மாதிரி என்பதாகட்டும்... இயற்கை பெண்களுக்கு மிக நெருக்கமானதாக இருக்கிறது என்பதாகட்டும்... பெண்களுக்கு அனைத்து நிலையிலும் அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதாகட்டும்.. எந்த துறையிலும் பெண்கள் பேசு பொருளாக மாற வேண்டும் என்ற திண்ணமான எண்ணத்தை நம்மில் விதைத்து இருக்கிறார்..

வெண்ணிலா

தமிழ்நாடு ஆவண காப்பகங்கள் மற்றும் வரலாற்று ஆய்வுத்துறை துணை பதிப்பு ஆசிரியர் கவிஞர் சிறுகதை எழுத்தாளர் நாவலாசிரியர் என்ற பன்முகம் கொண்டவர் கணவரும் ஒரு எழுத்தாளர் எனக்கு பலம் என்பதும் தொடர்ந்து தான் எழுதுவதற்கு கணவரும் ஒரு எழுத்தாளராக இருப்பதால் இலகுவாக இருப்பதாக சொல்கிறார்... சமகால பெண் சமூகம் நிறைய வளர்ச்சி அடைந்திருக்கு ஆனா இன்னும் வரணும்.. தெரியாத இடங்களை நிறைய பெண்கள் வழிகாட்ட ஆட்கள் இல்லாமல் இருக்கிறார்கள்... சரியான பாதையை புரிந்து கொள்ளக்கூடிய கல்வியோ பொருளாதார சூழ்நிலை இல்லாத பெண்கள் இன்னும் எங்கெங்கோ இருட்டுக்குள்ள தான் இருக்காங்க.. அவர்கள் எல்லோருக்குமான உலகமா? நம்ம உலகம் மாறனும் என்ற ஒரு பெரும் கனவை நம்முள் விதைக்கிறார்..

திலகவதி ஐ.பி.எஸ்

ஒரு பெண் முதலில் மனதளவில் தைரியத்தை வரவழைத்துக் கொள்ள வேண்டும் தன்னால் முடியும் என்ற நம்பிக்கை அவசியம்... பெண் தன்னைத்தானே காத்துக் கொள்ள வேண்டும்... எந்த ஊர் ராஜாவும் வெள்ளைக் குதிரையில் இருந்து உங்களை காப்பாற்ற மாட்டார்... நீயேதான் உனக்கு காவல் என்று துணிச்சலான எண்ண ஓட்டத்தையும்.. பெண் புத்தக வாயிலாக ஒரு திடமான நம்பிக்கையையும் பணத்திற்காக , பொருளாதாரத்திற்காக யாரையும் எதிர்பார்க்கக் கூடாது... நம் தேவைகளை நாமே பார்த்துக் கொள்ளும் அளவிற்கான திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்.. யாரையும் சார்ந்து வாழக்கூடாது உங்களுக்கென்று ஒரு வருமானம் அவசியம் என்பதை ஒரு பெண்ணாக அவர் கூறுவது அனைத்தும் வைராக்கிய வரிகள்...

நிவேதிதா லூயிஸ்

அறியப்படாத கிறித்துவம் என்கிற புத்தகத்திற்காக பல ஆய்வுகளை மேற்கொண்டு இருக்கிறார் யார் வீட்டிலும் தங்க, தூங்க முடியாத சூழலில் ஒரு சர்ச் வாசலில் துப்பட்டா போட்டு படுத்து உறங்கி இருக்கிறார்... இப்படியாக ஒரு ஆய்விற்கான பயணத்தை சிரமம் பார்க்காமல் எழுதியது ஒரு மாற்றத்தை ஏற்படுத்தாதா என்கிற ஒரு எதிர்பார்ப்பு அவர் மனதில் இன்னும் கனத்த சோகத்தோடு தான் இருக்கிறது என்பதை தொகுப்பு ஆசிரியர் பத்மா அமர்நாத் அவர்கள் குறிப்பிட்டுள்ளது நெகிழ்ச்சியின் உச்சம்...

திருமதி ரோகிணி

பெண்கள் தைரியமா இருக்கணும் அடுத்து நிறைய வாசிக்கணும் வாசிப்பு என்றால் புத்தகங்களை மட்டும் இன்றி மனிதர்களையும் வாழ்க்கையும் வாசிக்க வேண்டும்.. மூன்றாவதாக உள்ளே, வெளியே நமக்கு நாம்தான் முதல் பிரண்ட் நம்மை நேசிக்கும் முதல் நண்பராக நாம் இருக்க வேண்டும் அப்படி இருந்தால் மற்ற எல்லாவற்றையும் சமாளித்து விடலாம் என்கிற அனுபவ பாடத்தை நம்மோடு பகிர்கிறார்... குழந்தை பெற்றுக் கொள்வதாக இருக்கட்டும் எப்போது பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதாகட்டும் அதை பெண்கள் தீர்மானிக்கும் நிலைக்கு வர வேண்டும் என்ற வாழ்வியல் சூழ்நிலையும் நமக்கானதே... நீங்கள் பார்க்கலாம் கேட்கலாம் பேசலாம் தீர்மானம் எடுக்கும் எல்லா உரிமையும் உங்களுக்கு உண்டு... வீரத்திற்கு பெண்களை யாரும் ஒப்பிடுவதில்லையே ஏன்? என்ற கேள்வியோடு சமுதாயத்தில் பெண்கள் உயர்வின் உன்னதத்தை பேசுகிறார்...

மது சரண்வேல்

குரலற்ற பல பெண்களின் குரலாக இருக்க விரும்புகிறேன்.. அவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு அமைத்து தர வேண்டும் என்பதே என் ஆசை கனவு என்கிறார்.. சுயமரியாதை ரொம்ப முக்கியம் அது அவர்களுடைய வீட்டில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்... தன் சுயமரியாதை இழந்தால் அது எப்படி எதிர்கொள்வாய்...சுய நிர்ணய உரிமை பெற்ற வாழ்வு என்பது பொருளாதாரம் சார்ந்த விஷயம் மட்டுமல்ல.. அது ஒரு பெண்ணாக எப்படி ஒவ்வொரு விஷயத்தையும் தைரியமாக அணுகி முடிவு எடுக்க வேண்டும் என்பது குறித்த கனவுகளையும் லட்சியங்களையும் நம்மை உணர வைக்கிறார்.....

லீனா குமரவேல்

பெண்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை திறம்பட செய்யக் கூடியவர்கள்.. வீட்டையும் வேலையும் சரியாக நிர்வகிக்கும் திறமை கொண்டவர்கள்.. அதையும் தாண்டி நம்மை சுற்றியுள்ள மனிதர்களை சரியான முறையில் பெண்களாகிய நாம் கையாளுகிறோம்.. பிறரை வரவேற்ப்பதாகட்டும், கவனித்துக் கொள்வதாகட்டும், பணிவிடை செய்வதாகட்டும் பெண்களுக்கு இது ஒரு கை தேர்ந்த கலை... அதற்கும் மேலாக பெண்கள் சமநிலையுடன் இருக்கக்கூடியவர்கள்.. தன்னுடைய நேச்சுரல்ஸ் நிறுவனம் வளர்ச்சி என்பது எல்லா அழகு நிலையத்திலும் சேவை ஏறத்தாழ ஒரே விதமாகத்தான் இருக்கும்... ஆனால் எங்களுடைய நேச்சுரல்ஸ் பொறுத்தவரை வாடிக்கையாளர்களுடன் நல்ல தொடர்பில் இருப்பதை உறுதி செய்து கொள்வோம்... அடுத்த முக்கியமான விஷயம் சுத்தம், சுகாதாரம் இதில் எந்த சமரசத்திற்கும் இடமில்லை... உபயோகப்படுத்தும் பொருட்களின் தரத்தில் கவனம் செலுத்துவோம் என்கின்ற ஒரு தாரக மந்திரத்தை நம்மோடு பகிர்கிறார்...

சுபாஷினி கனகசுந்தரம்

பொத்தாம் பொதுவாக ஆண்கள் பொல்லாதவங்கன்னு பேச வேண்டாம்... நம்மை தூண்டும் சில விஷயங்கள்னு இருக்கு..அது விலங்குகள் கிட்டயும் இருக்கு... உடை அணிவது பற்றி நான் பேசவில்லை... பெண் எப்படி உடை அணிந்தால் உனக்கென்ன எவ்வளவு மோசமாக இருந்தாலும் வன்புணர்வு செய்வது தவறு தான்.. ஜஸ்டிஃபை பண்ண முடியாது... இதை தவிர பெண்களின் வேறு நடவடிக்கைகள் குறித்து மெசேஜ் பண்ணிட்டு இருக்கேன்... ஆக நம்முடைய ஒழுக்கத்தை நாம் பார்வையாலேயும், செயலாலேயும் ஆற்றினால் சமூகம் நம்மை கரெக்டா ஒரு நண்பரா ஒரு தோழரா தான் பார்க்கும்.. நான் இவ்வளவு ஆண்களோடு பழகுகிறேன் எப்படி முடியுது? நம்முடைய பார்வை,செயல் நாம் காட்டும் மரியாதை இது மூன்றும் சரியா இருக்கணும்... தோழர் என்கிற வார்த்தை ஒரு அருமையான வார்த்தை இந்த சமூகத்தில் ஆணும் பெண்ணும் சேர்ந்துதான் வாழுறோம்...இருவரும் சேர்ந்துதான் சமூக மாற்றத்தை உருவாக்கணும் என்கிற கண்ணோட்டம் பாராட்டுக்குரியதே...

ப்ரித்தி சீனுவாசன்

சோல் ஃப்ரீ என்ற ஒரு அறக்கட்டளை நிறுவி முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டெடுத்து அவர்களுக்கான மறுவாழ்வு அளித்து வருகிறார்... பத்தொன்பது வயதுக்குட்பட்ட தமிழக பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைவியாக அங்கம் வகித்திருந்த இவர் ஒரு விபத்துக்கு பிறகு தன்னை போல் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு மறுவாழ்வு மையத்தை நிறுவி அதை இன்று சிறப்புற செய்து வருகிறார்.... விபத்துக்கு பிறகும் சென்னை பல்கலைக்கழகத்தில் மருத்துவ சமூகவியலில் இளங்கலை பட்டம் பெற்றிருக்கிறார். இவர் இசை, கலை திரைப்படங்கள் மற்றும் இலக்கியம் ஆகியவற்றிலும் ஆர்வம் கொண்டவராக திகழ்கிறார்... பல விருதுகளை பெற்று இருக்கும் இவர் இந்த உலகின் மிகப் பெரும் தன்னம்பிக்கை மிளிரும் ஒரு சக்தியாக ஒளிர்கிறார்... சுதந்திரம் கொடுக்கிற அம்மா எல்லோருக்கும் கிடைக்கனும்னு என்கிற இவரின் வேண்டுதலே மனிதநேயத்தின் உச்சம்..

இன்னும் பிற ஆளுமைகளான பாரதி ஸ்ரீதர், நீனா ரெட்டி, நந்தினி ஜெயபாரதி ஆகியோரும் நம்மிடம் உரைப்பதெல்லாம் பெண்களே வெற்றி என்ற எண்ணம் மட்டும் நம்மை உயர்த்தி விடாது.. புரட்சிக்கான பாதையில் கிடைக்கும் தடைகளை அகற்றி தயக்கங்களை விரட்டி முதல் அடியை எடுத்து வைத்தால் மட்டும் நம்மால் இலக்கை அடைய முடியும்...வெற்றிவாகை சூட முடியும் என்பதும்..

பெண்களுக்கென்று ஒரு குணம் உண்டு எதுவுமே இல்லாமல் நிற்கதியாக நின்றால் கூட எதையாவது செய்து பெண்கள் சமாளித்து வந்து விடுவார்கள் என்கின்ற வைராக்கிய வரிகளாட்டும்... இன்றைய பொழுது நம் கையில் உண்டு எதிர்காலத்தை நாம் நிகழ்காலத்தில் தீர்மானிக்கும் வாழ்க்கை நகர்ந்து கொண்டே தான் இருக்கும் நமக்காக ஒருபோதும் நிற்காது... அதேசமயம் நமக்காக வேறொரு வேலை செய்ய முடியாது என்று சொல்லும் நீனா ரெட்டியும் இந்த பூவுலகின் சிங்கப்பெண்களே...

இந்த தொகுப்பை மிகச் சிறப்பாக முன்னெடுத்து உருவாக்கி பெண்ணதிகாரம் என்ற பெண் ஆளுமைகளின் நேர்காணல்களை நம் கையில் புத்தகமாக கொடுத்திருக்கும் திருமதி பத்மா அமர்நாத் அவர்களின் முயற்சி வரலாற்றில் பெண்களின் வளர்ச்சி படிநிலைகளை கொண்டாடும் மிகப்பெரிய ஆவணம்... இந்த சமூகத்தில் பெண்களின் ஆற்றலை இப்படியானவர்கள் எடுத்துச் சொல்லும் பொழுது தான் அதன் மகிமையும் மேன்மையும் புரிந்து கொண்டு நல்ல மனித நேயர்களாக.. சமத்துவத்தை பேணுபவர்களாக நம்மை வாழ கற்றுக் கொடுத்திருக்கிறது இந்த பெண்ணதிகாரம் என்ற வரலாற்று பதிவு..

வாழ்த்துக்கள் தோழர் பத்மா அமர்நாத்.. வாழ்த்துக்கள் புழுதி பதிப்பக ஆசிரியர் குழுமத்திற்கு...

க.காதர்ஷா, பொதுச்செயலாளர் திருவண்ணாமலை தமிழ்ச் சங்கம்

ஆன்லைனில் வாங்க: https://zurl.co/p9uk

Previous article இந்திய இலக்கியச் சிற்பிகள்: கலைஞர் மு. கருணாநிதி
Next article சிந்து முதல் கங்கை வரை - புத்தகம் பற்றி...,