வகுப்புரிமைப் போராட்டத்தின் வரலாறு: கல்வித்துறையில் ‘வகுப்புரிமை அரசாணை’ அல்லது ‘கம்யூனல் ஜி.ஒ.’ (Communal G.O./communal government order) என்று அறியப்பட்ட, சமூகநீதிக்கான இடவொதுக்கீடு நோக்கில் உருவாக்கப்பட்ட அரச ஆணை சட்டப்படி செல்லாது, அது இந்திய அரசியல் அமைப்புச் சட்டவரைவுக்கு எதிரானது என்று கூறப்பட்ட உயர் நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு எழுதப்பட்ட நூல் இது. 1950 ஜூலை 27இல் தமிழக சமூகநீதிப் போராளிகளை உலுக்கியசட்டத் தீர்ப்பு குறித்த நிகழ்வுடன் நூல் தொடங்குகிறது. பாலுமகேந்திராவின் திரைப்படத்தில் இந்து டீச்சர் மறைந்துவிட்டார் என்ற கடிதச் செய்தியைப் படித்த பிறகு நாயகனின் நினைவுகள் பின்னோக்கி ஓடும் வகையில் துவங்கும் பாணியில் நூல் அமைகிறது. தமிழக வரலாற்றில் நீதிக்கட்சி என்ற ஒரு கட்சி துவக்கப்பட்டதே வகுப்புரிமை என்ற சமூகநீதியை நடைமுறைக்குக் கொண்டு வரும் நோக்கில்தான். அதற்காகக் காலம் காலமாகப் போராடிய சமூகநீதி நோக்கம் கொண்டோருக்கு இத்தீர்ப்பு அதிர்ச்சியை அளித்தது. ஆனால்… ‘கம்யூனல் ஜி.ஒ.’ எதிர்த்தோர் எல்லையற்ற மகிழ்ச்சியடைந்தனர். இத்தீர்ப்பிற்குப் பிறகு கல்லூரியில், அரசு அலுவலகத்தில், செய்தி நிறுவன அலுவலகத்தில், இசையரங்கில், மகளிர் சங்கத்தில்எனப் பல இடங்களில் பார்ப்பன பின்புலம் கொண்டோர் தீர்ப்பு குறித்து மகிழ்ச்சியாக உரையாடுவதான கற்பனைக் காட்சிகளுடன்நூலின் முதல் அத்தியாயம் துவங்குகிறது. இதில் ஆசிரியர் கொடுக்கும் இடங்கள் யாவும் அக்காலத்தில் பார்ப்பனகுல மக்களின் கட்டுப்பாட்டின் கீழிருந்த இடங்கள். இதை ஆசிரியர் நேரடியாகக் குறிப்பிடவில்லை. ஆனால் வரலாறு புரிந்தவருக்கு அது புரியாமல் போகாது. உரையாடல்கள் அவர்கள் குலவழக்கின்படியும், சமஸ்கிருதமும் ஆங்கிலமும் கலந்த நடையில் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் ஆசிரியர் சுட்டிக் காட்ட விரும்பியது, இந்த தீர்ப்பு ஆதிக்க நிலையில் இருந்தவர்களுக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சியை அளித்தாலும் அதை வெளிப்படையாகக் கொண்டாட முடியாத இக்கட்டான சூழல் அன்று தமிழகத்தில் நிலவியது. அடைந்த மகிழ்ச்சியை அடக்கி வாசிக்கும் நிலையிலிருந்தார்கள் அவர்கள் என்பதைப் படிப்போருக்கு உணர்த்துகிறார் அன்பழகன். இதைத் தொடர்ந்து வகுப்பு நீதி வளர்ந்த விதம் குறித்த தமிழக வரலாற்றுப் பின்னணியைக் கொடுக்கிறார். வகுப்புரிமைப் போராட்டம் என்பதில் உள்ள ‘உரிமை’ என்பதை ஏற்றுக்கொள்ளாது, அது ஒரு வகுப்புவாத அல்லது வகுப்புபேத திட்டம், அதன் நோக்கம் திறமையையும் தகுதியையும் மதிக்காது ஒரு சிலரின் அடிப்படை உரிமையைப் பறிக்கும் திட்டம் என்ற வகையிலேயே பலகாலம் கல்வியையும் அதனால் பலனையும் பெற்றிருந்த ஆதிக்க பிரிவினரால் இத்திட்டம் குறித்துக் குற்றம் சாட்டப்பட்டது. இதனை மறுத்து வகுப்புரிமையின் தேவையை விளக்குகிறார் அன்பழகன். ஒரு கல்லூரிப் பேராசிரியர் நாட்டின் கல்வி அமைப்பு மற்றும் நடைமுறை குறித்து எழுதுவது பொருத்தம் ஆகும். நூல் முழுவதும் பல உவமை மூலம் அவர் விளக்கும் விதம் சிறப்பு. காலம் காலமாகக் கல்வியைத் தனக்கென ஒதுக்கிக் கொண்ட ஆதிக்கப்பிரிவினர் ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் இந்தியா வந்த பொழுது; அப்பொழுதும் தங்களின் கல்வித்தகுதியின் அடிப்படையில் அனைத்து அரசு வேலைகளிலும் நீக்கமற நிறைந்துவிட்டனர். பார்ப்பனர் அல்லாதோரில் (அதாவது; பார்ப்பனர் அல்லாத இந்துக்கள், ஆதிதிராவிடர், இஸ்லாமியர், கிறித்துவர்களாகிய தமிழக மக்கள்) கல்வி கற்றிருந்த ஒரு சிலர் அரசுப்பணிகளில் நுழைய இடம் விடாமல் அவர்கள் கூட்டத்தின் உள்தொடர்பு முறையில் கட்டுப்படுத்திக் கொண்டிருந்ததில் 20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் அரசுப்பணிகளில் இருந்தோர் குறித்த புள்ளிவிவரங்களின் படி எங்கும் எதிலும் அவர்களே நீக்கமற நிறைந்திருந்தனர். பிறர் அரசின் ஓர் உதவியை எதிர்பார்ப்பது என்றாலும் கூட அது பார்ப்பனர் கருணையைப் பெற்றாலே இயலும் என்ற அளவில் நிலைமை அவர்கள் கட்டுப்பாட்டிலிருந்தது. இதே நிலை கல்வித்துறையிலும் இருந்தது. அதனால் நல்ல கல்வி அதன் மூலம் ஒரு நல்ல பணி என்பதிலிருந்த பாதையை அவர்களின் கைவசம் வைத்துக் கொண்டு அதை மற்றவர் அடையாமல் கட்டுப்படுத்துதல் அவர்களுக்கு எளிதாயிற்று. இதனைப் பார்ப்பனர்களின் இனப்பற்று ஆதிக்கவெறி ஆகியவற்றின் விளைவாகப் புரிந்து கொள்ளலாம். ஆகவே நடைமுறையில் மறுவகையில் ஆங்கிலேயர் ஆட்சியிலும் வருணாசிரம முறை மீண்டும் நடைமுறையிலிருந்தது என்றே சொல்ல வேண்டும்.