திருக்குறளும் பரிமேலழகரும்
பரிமேலழகர் உரையிலுள்ள அயற் கருத்துக்கள் முழுவதையும் ஆராயப்புகின், மணற் சோற்றில் கல்லாய்வதனோடொக்கும். ஆனால், தமிழர் தனிச் சொத்தாகிய இன்பத்துப்பாலில் அவர் கையை வைக்கவில்லை. பொருட்பாலினும் அறத்துப் பாலிலேயே ஆரிய நஞ்சு அத்தனையுங் கலந்துவிட்டார். அதுதானே பிற்காலத் தமிழர்களை ஏமாற்ற வழி? திருக்குறள் அறத்துப்பாலில் கூறும் அறங்கள் தமிழர் அறங்கள் அல்ல. அவை ஆரியர் அறங்கள். ஆரியர் அறங்களையே வள்ளுவர் நூலாக்கி வைத்துள்ளார். ஆரியர் அறங்கள் தமிழர் அறங்களிலும் மேலானவை. அதனாலேயே பழந்தமிழர் அவற்றை மேற்கொண்டனர் எனப் பிற்காலத் தமிழர் நம்பினாற்றானே தமிழ்ப் பற்றின்றி ஆரியத்துக் கடிமையாகமுடியும்? அப்போது தானே ஆரிய மக்கள் நல்வாழ்வு வாழலாம். பரிமேலழகரின் இனப்பற்றே பற்று! அது தானே தமிழர்க்கில்லை! இச்சிறு ஆராய்ச்சி நூல் தமிழர்க்கு அதை உண்டாக்குமாக. பரிமேலழகரின் மயக்க மருந்துண்டு மயங்காமல், தனித்தமிழ் முப்பாலுண்டு தமிழ் வாழ்வு வாழ்வார்களாக.