தமிழ்க் கலை
தண்டமிழ்ப் பெரியார், சாந்த சீலர், ஒழுக்க ஒளி திரு.வி.க. அவர்களின், உயர்வெண்ணும் உள்ளத்தினின்றும் வெளிப்பட்ட ஒப்பற்ற கருத்தோடைகளிற் சில, ஈண்டு தொகுக்கப்பெற்றுள்ளன. தமிழ் நாட்டின் மேடைகள் அனைத்தும், கட்சிகள் யாவும், சமயக் குழுக்கள் எல்லாம், அவரது பொன்னுரையால் பொலிவு பெற்றது மறக்க வியலாது. தமிழும் தமிழரும் அவரது கருத்தோடையில் திளைத்து மறுமலர்ச்சி எய்தியுள்ளதையும் நாமறிவோம். அத்தகு பெரியாரின் உரை ஒவ்வொன்றும், நிகழ்ந்தபின் தொகுக்கப்பட்டு அச்சியற்றப் பெற்றிருத்தல் வேண்டும். அதனால், தமிழகம், காலத்திற்கும் பெறும் பயன் அளவிடற் பாற்றோ!மாறாக, முயற்சி கெட்டு, ஊக்கங்குன்றி, எழுச்சியற்ற இந்நாட்டில், அவரது பொன்னுரைகள் முற்றும் காக்கப்படவில்லை. காதிற்குப்புலனான பலவற்றுள் சிலவே கண்ணுக்குப் புலனாகும் வடிவு பெறுவனவாயுள்ளன. எனவே, அவற்றையேனும் ஏற்றுப் போற்றிப் பயன்பெறுவது தமிழர் கடனேயன்றோ ?
அத்தகு நோக்கத்தாலேயே, 'தமிழ்க் கலை' வெளியிடப்படுகின்றது. 'தமிழ்க் கலை' என்று ஒன்றைக் குறிப்பிடுவதற்கே இடமில்லாதபடி, அதன் 'தனிமை' மறைக்கப்பட்டிருந்தது ஒரு காலம். தமிழ்க் கலை இகழப் பட்டது பிறிதொரு காலம். தமிழ் கலை தமிழகத்திலேயே இடம் பெறாது தவிக்கிறது இந்நாள் வரை. ஆனால், தமிழ்க் கலையின் தனிமையும், உயர்வும், உலகிற்கே வழிகாட்டி யாகும் ஆற்றலும், தனித்தனியான உரைகளில் விளக்கப் பட்டுள்ளன.