மெக்கன்சி சுவடிகளில் தமிழகப் பழங்குடி மக்கள்
பாறையிலும் பிற பொருள்களிலும் எழுதிவந்த தமிழர்கள் பிற்காலத்தில் பனையோலையைப் பயன்படுத்தத் தொடங்கியது தொழிற்நுட்பம் மிக்க ஒரு கலையின் காலம். அவ்வாறு எழுதப்பட்டவை எழுத்தோலைகள் அல்லது சுவடிகள் என அழைக்கப்படுகின்றன.
ஆங்கிலேயக் கிழக்கிந்திய நிறுவனத்தில் பணியாற்றிய இராணுவ அதிகாரி காலின் மெக்கன்சி. தொல்பொருள் சேகரிப்பிலும் கீழ்த்திசை ஆய்விலும் ஆர்வம் மிக்கவர். அவருடைய திரட்டுகள் இந்திய வரலாற்றைப் பற்றி அறிந்துகொள்ள இன்றியமையாத சான்றுகளாகத் திகழ்கின்றன. மெக்கன்சியின் முயற்சியால் தொகுக்கப்பட்ட சுவடிகளில் 1534 தமிழ்நாட்டைச் சேர்ந்தவை. இவற்றில் இலக்கியம், வரலாறு, பண்பாடு, வாழ்க்கைமுறை எனப் பல்வேறு செய்திகள் இடம்பெறுகின்றன.
இந்த நூலில் ம. ராசேந்திரன் மெக்கன்சியின் வாழ்க்கை வரலாற்றில் தொடங்கி அவர் சேகரித்த ஆவணங்களின் வகைதொகையுடன் பழங்குடி மக்கள் பற்றிய ஆய்வை, தமிழகப் பழங்குடி மக்கள் வரலாற்றுடன் விவரிக்கிறார். அத்துடன் மெக்கன்சி தொகுத்தவற்றுள் 16 சுவடிகளைத் தேர்ந்தெடுத்து, அதில் குறும்பர், வேடர், இருளர், ஏனாதியர், குறவர், வில்லியர், கரையர், பட்டணவர், லம்பாடியர், மலையரசர், குண்ணுவர் போன்ற தமிழகப் பழங்குடி மக்கள் குறித்த செய்திகளையும், இவற்றைக் கொண்டு கள ஆய்வு மூலம் சேகரித்த விவரங்களையும் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.
குறிப்பாக, குறும்பர்களின் வரலாற்றுப் பின்னணி, தொழில், திருமண முறை, சடங்குகள், வழிபாடுகள், மொழி என அவர்களின் இன்றைய நிலை, வரலாற்றுச் சின்னங்கள் பற்றிய செய்திகளை விவரித்துச் செல்வது ஆர்வமூட்டுவதாய் இருக்கின்றன. நூலின் இறுதியில் சுவடிகளின் சுருக்கமும் இடம்பெறுகிறது. இதன்மூலம் இந்த நூல் சுவடிகளில் பழங்குடி மக்கள் குறித்த பதிவுகளைக் கவனப்படுத்தும் முதலாவது நூல் மட்டுமல்ல, அவர்களை ஆராய்வதற்கான பல்வேறு ஆய்வுக் களத்தையும் அறிவதற்கு உதவுகிறது. அத்துடன் திராவிடர் குறித்த கருத்தாக்கத்தை வரலாற்று ரீதியாக அணுகுவதற்கும் வழிவகைச் செய்கிறது.
மானிடவியல், பழங்குடிமக்கள், திராவிடம் குறித்து ஆர்வமுள்ளவர்கள் படிக்க வேண்டிய புத்தகம்.