மதுரை அரசியல்
பெருமையோடும் பூரிப்போடும் வாசிக்கவேண்டிய ஒரு வரலாற்றுப் பதிவு இது !
தமிழ்நாட்டின் எந்தவொரு அரசியல் வரலாற்று நிகழ்வையும் மதுரையோடு இணைத்துவிட முடியும். அரசியல் நிகழ்வுகள் ஒன்று மதுரையில் நிகழ்கின்றன அல்லது மதுரையைச் சுற்றி அல்லது மதுரையை முன்வைத்து நிகழ்கின்றன. ஆலய நுழைவு, சுதந்திரப் போராட்டம், மொழிப்போராட்டம், கம்யூனிஸ்டுகளின் போராட்டம் என்று உதாரணங்கள் அநேகம். அவை அனைத்திலும் மதுரை மண்ணின் வாசம் இருக்கவே செய்யும்.
தமிழ அரசியல் களத்தில் உச்சம் தொட்ட பி.டி.ராஜனையும் கக்கனையும் ஈன்றெடுத்தது மதுரை. அரசியல் களத்தில் தவிர்க்கமுடியாத சக்தியாகப் பரிணமித்த மதுரை முத்து, பழ.நெடுமாறன், காளிமுத்து, ஆண்டித்தேவர் என்று பலரும் பிறந்தது மதுரையில்தான்.
மதுரையில் பிறந்தவர்களுக்கு மட்டுமல்ல, அங்கே வளர்ந்தவர்களுக்கும் கூட அரசியல் களம் அமைத்துக்கொடுத்திருக்கிறது மதுரை. பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் அரசியல் பயணத்தில் மதுரை நீக்கமற நிறைந்திருந்தது. கருணாநிதியின் எதிர்க்கட்சி அரசியலை உறுதிசெய்த நீதிகேட்டு நெடும்பயணம் நடந்தது மதுரையை நோக்கித்தான். ரசிகர் மன்ற மாநாடோ, உலகத்தமிழ் மாநாடோ, எதுவாக இருந்தாலும் தனக்குப் பெயர் சொல்லும் நிகழ்வு என்றால் அதில் எம்.ஜி.ஆரின் தனிவிருப்பமாக இருந்தது மதுரை.
அத்தனை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மதுரையைப் பற்றி மூத்த பத்திரிகையாளர் ப.திருமலை செய்திருக்கும் இந்தப் பதிவு மதுரையை நேசிக்கும் ஒவ்வொருவரும் நேசிக்க வேண்டிய பதிவு. அரசியலை சுவாசிக்கும் அனைவரும் வாசிக்கவேண்டிய புத்தகம்.