கடவுளும் பிரபஞ்சமும்
சென்ற வருடம் நமது தோழர் ஈ.வெ. ராமசாமி அவர்கள், “குடி அரசு” க்கு மத சம்பந்தமாகச் செய்துள்ள விஞ்ஞான ஆராய்ச்சிகளின் முடிவினைச் சில வியாசமாக எழுதக் கேட்டுக் கொண்டார். நமது அசவுக்கியத்தினிமித்தம் , அவர் வேண்டு கோளுக்கிணங்க முடியாமற் போயிற்று. சென்ற இரண்டொரு வருடங்களில் பிரபஞ்சத்தைப்பற்றிச் சில நவீன நூல்கள் பிரசுரிக்கப்பட்டன. “கடவுளும் பிரபஞ்சமும்” என்ற ஓர் நூல், பகுத்தறிவுச் சங்கத்தைச் சேர்ந்தவராகிய "கோகன்” என்ற பெரியார், மத அனுகூலமாக எழுதின சில விஞ்ஞான நிபுணர்களைக் கண்டித்து எழுதியுள்ளார். இந்த நூலில், மதங்களுக்கு விஞ்ஞான விசாரணையின்படி ஆதரவு கிடைக்க வழியில்லையென்று பொதுவாகக் காட்டியுள்ளதேயொழிய, விஞ்ஞான விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்ட உறுதியான விஷயங்களைக் கொண்டு, மதங்களுக்கு ஆதாரச் சொல்லாகிய கடவுளை விசாரிக்கப் புகுந்தாரில்லை. பல நாத்திக வாதங்களும், கேவல (Abstract) வாதங்களாகவே இருந்து வருகின்றன. இந்த சமயத்தில் பிரபஞ்சத்தைப்பற்றிப் பலவித ஆராய்ச்சிகளின் பலனாக சிற்சில விருத்தாந்தங்கள் புதிதாக தெரியவந்தன. இந்த விருத்தாந்தங்களைக் கொண்டு, கடவுள் இருப்பை விசாரிக்கத் தொடங்கி, அதன் முடிவுகளை "கடவுளும் பிரபஞ்சமும்” என மகுடமிட்டு “குடி அரசில்” எழுதி வந்தோம். இந்தக் கட்டுரை களைப் புத்தக ரூபமாக அமைக்கும்படி எயமரியாதைத் தோழர்கள் செய்த ஏற்பாடு மிகவும் கவனிக்கத்தக்கதே. “குடி அரசு” பிரசுரங்களில் ஒன்றாக இச் சிறு புத்தகத்தைப் பதிப்பிக்கச் செய்தது போற்றத்தக்கதாகும். இச் சிறிய நூலுக்கு ஆதாரமாகக் கொண்ட நூல்களில் சிலவற்றைக் கடைசியில் கண்டுள்ளோம். இந்த வாதங்களை முற்றிலும் அறிய வேண்டியவர்கள், இதன் ஆதார நூல்களை ஆங்கிலத்திலாகிலும், அல்லது மொழி பெயர்ப்புகளிலாகிலும் தொடர்ந்து படிக்கலாம்.