சுற்றியுள்ளவை கற்றுத் தருபவை
வாழ்வியல் சிந்தனை வழங்குவதில் இது வேறுபட்ட, சுவையான, விரும்பி அறியும் புதிய முறை.
நூறு சிந்தனைகள். எடுத்துக்காட்டாக,“புளியை அன்றாட உணவில் பயன்படுத்துகின்ற அனைவரும், புளியம்பழத்தைப் பார்த்திருப்பார்கள் என்று சொல்ல முடியாது. புளியம்பழம் ஓடு உடைய கனி. ஓட்டை உடைத்தால் உள்ளே புளியம் பழச் சுளை இருக்கும்.
புளி, பழமாக இருக்கும்போது ஓடும் சுளையும் ஒட்டாமல் விலகி இருக்கும். ஆனால் புளி பிஞ்சாக காயாக இருக்கும் போது ஓடுசுளையுடன் ஒட்டிக் கொண்டிருக்கும்.
புளியங்காய் முற்ற முற்ற அதிலுள்ள ஒடு மெல்ல மெல்ல விலகி, பழமானதும், சுளையோடு தொடர்பே இல்லாமல் விலகி விடும். ஆனால், விலகி நின்று புளியஞ்சுளையைக் காக்கும்.
பெற்றோர்கள் என்போர் இந்தப் புளியம் பழத்தைப் பார்த்து பாடம் கற்க வேண்டும்.
பிள்ளைகள் குழந்தையாக இருக்கும்போது நெருக்கமாக ஒட்டியிருந்து பாதுகாக்க வேண்டும். பிள்ளை வளர வளர, அதற்கு முதிர்ச்சி ஏற்பட, முதிர்ச்சி ஏற்பட பெற்றோர்கள் சிறுகச் சிறுக விலகி வரவேண்டும். பிள்ளைகள் பெரியவர்களானதும் விலகி நிற்க வேண்டும். புளியம்பழ ஓடு எப்படி விலகி நின்று பாதுகாக்கிறதோ, அப்படி பெற்றோர்கள் விலகி நின்று பாதுகாப்பில் பிள்ளைகளை வைக்க வேண்டும்.’’