இவர்தான் கலைஞர்
தென்னிந்தியாவிலேயே மிகப்பெரிய கட்சியாக விளங்கும் தி.மு.க. விற்கு 45ஆவது வயதில் தலைவராக வருவது சாதாரண காரியமல்ல. குடிப்பெருமை, குலப்பெருமை இல்லாத கலைஞர் தி.மு.க. விற்குத் தலைவராக வந்தது அவரது உழைப்பினாலேயேயன்றி வேறு எந்தக் கருணையினாலும் அல்ல. கட்சித் தொண்டராக இருந்து கட்சித் தலைவராக வந்தவர்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய மிகச் சிலர் தான். தென்னகத்தில் காமராஜர் ஒருவரைத்தான் குறிப்பிட முடியும். அடுத்தபடியாக நமக்குத் தெரிந்தவர் கலைஞர்தான். சில வேளைகளில் எதிர்பாராமல் சிலருக்குத் தலைமை ஸ்தானம் கிடைத்து விடுவதுண்டு. ஆனால் அவர்களால் அந்தப் பொறுப்பைத் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. அவர்களெல்லாம் ஏதோ ஒரு சூழ்நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவராகச் சில காலம் இருக்கலாமே தவிர, நிரந்தரத் தலைவராகத் திகழ முடியாது. இவரைத் தவிர, கட்சியை நடத்திச்செல்ல நமக்கு வேறு தகுதியான தலைவர் இல்லையே என்று தொண்டர்களின் உள்ளொளி யாரை உணர்த்துகிறதோ அவர்தான் நிரந்தர தலைவராக ஒரு இயக்கத்திற்கு வரமுடியும் தகுதியில்லாமல் வேறு ஏதாவது ஒரு பலத்தின் மூலம் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறவர்கள் குறிப்பிட்ட ஒரு காலக் கட்டத்திற்குள் தலைமைப் பொறுப்பை இழந்து விடுவார்கள்.