கோவை ஞானி - தமிழ் மார்க்சியர்
‘கோவை ஞானி’ என எல்லோராலும் செல்லமாக அழைக்கப்பெற்ற அய்யா கி.பழனிச்சாமி இன்று நம்மிடம் இல்லை. அவர், நம்மீது செலுத்திய அன்பால் அக்கறையால் நம்மனத்துள் வாழ்கிறார்.இது போன்று தமிழ் மண்மீதும் தமிழ் மக்கள்மீதும் அவர் கொண்டிருந்த பேர் அக்கறையால் தொடர்ந்து இம்மண்ணில் வாழ்வார். தமிழ் மண் தமிழ் மக்கள் என்ற இச் சொல்லாடல்களின் எல்லையை உலகம் மானுடம் என மாற்றி அமைத்துக்கொள்ள நமக்கு ஞானியின் கருத்தியல் இடமளிக்கின்றது. இக்கருத்தியலை அவர்தம் ஒட்டுமொத்த எழுத்துக்களிலிருந்து நாம் வருவித்துக் கொள்ளலாம்.குறிப்பாக ‘மார்க்சிய அழகியல்’ என்ற குறுநூல் மானுடச் சமதர்மத்தை அடைவதற்கான செயல் திட்டங்களைப் பதிவிட்டுள்ளதாகக் கருதலாம். பொதுவாக, மார்க்சியம் கம்னியூசம் பெரியாரியம் என்ற அடிப்படைகளில் அமைகின்ற எழுத்துக்களில் எல்லாம் ‘கருத்துக்கள்’ ஆதிக்கம் செலுத்தும்.