சுயமரியாதைத் திருமணம்- தத்துவமும் வரலாறும்
https://periyarbooks.com/products/suyamariyathai-thirumanam-thathuvamum-varalaarum
தந்தை பெரியார் அவர்களால் 1925 இல் துவக்கப்பட்ட சுயமரியாதை இயக்கம் என்ற சமுதாயப்புரட்சி இயக்கம் ஒரு கட்சி (Party) அல்ல; மாறாக, ஓர் இயக்கம் (Movement) அதன்பணி தொடர்பணி - சமூக மாற்றத்தைக் குறி வைத்த சளைக்காத, சலிக்காத பணியாகும்.
பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பினால் ஜாதி, தீண்டாமை, சனாதனம், மூடப் பழக்கவழக்கங்கள், பெண்ணடிமைத்தனம் போன்றவை தழைத்த சமுதாயத்தை தலைகீழாக்கி, மனிதநேயத்திற்கு 'மானமும் அறிவும் தான் மனிதர்க்கு அழகு' என்ற ஒரு புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சி, அறியாமை இருட்டை அகல் வைத்த 'சுயமரியாதைச் சூரியன்' தந்தை பெரியார் அவர்கள் எதிர் நீச்சலடித்து பெரு வெற்றியை தனது வாழ்நாளிலேயே கண்டு, சுவைத்து மகிழ்ந்தவர் ஆவார்!
ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்புகளால் 'கன்னிகாதானம்', 'விவாக சுபமுகூர்த்தம்' 'தாரா முகூர்த்தம்' என்று அறியப்படும் ஆரிய திருமண முறையாக மாறிய நிலை. எதிர்ப்புக் காட்டினால் மட்டும் போதாது; ஆக்கப் பூர்வமான மாற்று தேவை என்று அறிந்து சுயமரியாதைத் திருமண முறையை 90 ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கி, தொடர்ந்து நடத்தினார்; எதிர்ப்புக்கு அஞ்சாது வெற்றி பெற்றார்!
முதலில் சுயமரியாதைத் திருமணத்தை சமுகம் எதிர்த்தது;
அடுத்து சட்டம் உயர்நீதிமன்றம் செல்லாது என்று கூறியது!
என்றாலும், அதன் பின்னரும் பல்லாயிரக்கணக்கில் சுயமரியாதைத் திருமணங்கள் தொடர்ந்தன.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் திமுக ஆட்சி 1967இல் அரியணை ஏறிய பின், "அந்த அமைச்சரவையையே தனது தலைவர் தந்தை பெரியாருக்குக் காணிக்கை" ஆக்கிய முதல் அமைச்சர் அறிஞர் அண்ணா (சி.என். அண்ணாதுரை) அவர்கள் அவ்வாறு பிரகடனப் படுத்தியதோடு சட்ட வலிமையுடன், தந்தை பெரியார் கூறிய திருத்தத்தையும் ஏற்று, சட்டத் திருத்தம் மூலம் சுயமரியாதைத் திருமணங்களைச் செல்லுபடியாக்கினார்; பின்னோக்கிய காலத்தில் நடைபெற்ற சுயமரியாதைத் திருமணங்களும் செல்லுபடியாகும் என்று கூறி, தமிழர்களுக்கு இருந்த சூத்திர இழிவினை' சட்டபூர்வமாகவே ஒழித்தார்!
தன்னால் உருவாக்கப்பட்ட சீடர்களே ஆட்சிக்கு வந்து இப்படி ஒரு மவுனப்புரட்சியை செய்தது - அரிய சரித்திர சாதனை அல்லவா!
அதற்கு 50 ஆண்டுகள் கழித்து, அதே சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த சுயமரியாதைத் திருமணச் சட்டத்தை செல்லாது என்று அறிவிக்கக் கோரிய ஒரு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது, சுயமரியாதைத் திருமண முறை செல்லும் என்ற தீர்ப்பும் வந்தது. இன்று இதனை சமுதாயம், சட்டம் இரண்டுமே ஏற்றுக் கொண்ட நிலை உருவாயிற்று!
அது உலக முழுவதும் பரவி வருகிறது! சிங்கப்பூர், மியான்மர் (பர்மா), மலேசியா, அமெரிக்கா போன்ற வெளிநாடுகளிலும் இம்முறை நடைமுறைக்கு வந்ததன் மூலம் பெரியார்தம் கொள்கை, கோட்பாடு உலக மனித குலச் சொத்தாகி உள்ளது. அதனை அறிய உதவும் இந்த வரலாற்று நூலைப் படித்து, பரப்புங்கள் - பயன் அடையுங்கள்!
சென்னை
கி.வீரமணி
19.02.2019
தலைவர், திராவிடர் கழகம்
தொடர்புடைய மற்ற பதிவுகள்: