ராகுல்ஜியின் சுயசரிதை - முன்னுரை
முன்னுரை
என் 'சுயசரிதை' யை நான் ஏன் எழுதினேன்? வாழ்க்கைப் பாதையில் பயணம் செய்த யாத்ரீகர்கள் தம் வாழ்க்கைப் பயணத்தை - சுயசரிதையை - எழுதிச் சென்றிருந்தால், எனக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருக்குமென்று நான் அடிக்கடி எண்ணிப் பார்ப்பதுண்டு. உலக அறிவைப் பெறும் நோக்கத்துடன் மட்டுமல்லாமல், காலத்தின் பெருமையைக் கணக்கிலெடுத்தும் அப்படி எண்ணிப் பார்ப்பதுண்டு. இரண்டு பேரின் வாழ்க்கைப் பயணங்கள் முற்றிலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆயினும், எல்லோருடைய வாழ்க்கைகளும் உள்ளும் புறமும் பரந்து விரிந்திருக்கிற இவ்வுலகத்து அலைகளின் மீதே நீந்த வேண்டியுள்ளன.
நான் என் வாழ்க்கை 'யை எழுதாமல், 'வாழ்க்கைப் பயணத்தை எழுதுகிறேன். ஏன்? இதற்குரிய விடையை வாசகர்கள் நூலைப் படித்து முடித்த பிறகுதான் பெற முடியும். நமது மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் அறிய முடியாத உலகின் பலவித விஷயங்களை, விசித்திரங்களை என் எழுதுகோலால் எழுத்தோவியமாகத் தீட்ட நான் முயற்சி செய்திருக்கிறேன். மற்ற விஷயங்களைக் குறித்து எழுதுவதற்கு முன்பாக, நான் எழுதுகோலை முறையாகப் பயன்படுத்தக் கற்றுத் தேறாததைப் போலவே, சுயசரிதை எழுதும் கலையும் நான் இதுவரை கற்று உணர்ந்தவனல்ல. உண்மையில் கல்வியின் பெருமை எல்லை யற்றதாயினும், துரதிருஷ்டவசமாக எனக்குக் கல்வியை முறையாகக் கற்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
இதற்கு முன்பும் பல நண்பர்கள் என்னைச் சுயசரிதை எழுதுமாறு வற்புறுத்தினர். ஆனால், நான் சுயசரிதை எழுத இன்னும் காலம் இருக்கிறது என்று எண்ணியிருந்தேன். 1940 மார்ச் 14-ந் தேதியன்று சர்க்கார் என்னைக் கைது செய்து ஹஜாரிபாக் சிறையில் அடைத்தனர். 29 மாதங்களுக்குப் பிறகு, நான் சிறையிலிருந்து விடுதலையாவேன் என்று முன்னதாகவே தெரிந்துகொள்ள என்னிடம் அற்புத சக்தி ஒன்றுமில்லை. ஆயினும் பல வருடங்கள் இச்சிறைச் சுவர்களுக்கிடையே அடைபட்டுக் கிடக்க நான் இங்கே வந்துள்ளேன் என்பதை உணர்ந்துகொண்டேன். அப்பொழுது எனக்கு எவ்வளவோ ஓய்வு இருந்தது.
ஹஜாரிபாக்கில் நாங்கள் இருவர் மட்டுமே அடைப்பட்டிருந்தோம். எங்களிடம் புத்தகங்களும் இல்லை. அடுத்தபடியாக ஏதாவதொரு புத்தகம் எழுதவேண்டுமென்ற எண்ணமும் இல்லை. எனினும் பொழுது போக வேண்டுமே! எனவே பழைய நினைவுகளையாவது எழுதுவோம் என்று முடிவு செய்தேன். 1940 ஏப்ரல் 16லிருந்து எழுதத் தொடங்கி, ஜூன் 14 வரை எழுதினேன். இந்த இரண்டு மாதங்களில் நான் 1893லிருந்து 1934 வரையிலான என் வாழ்க்கைப் பயணத்தை நினைவிருந்த வரையில் எழுதினேன். நான் 1940 வரையிலும் எழுதியிருப்பேன்! ஆனால் 1926லிருந்து ஒவ்வொரு வருடக் குறிப்பேடும் என்னிடமிருந்ததால், என் பேனா வேகமாகச் செல்லத் தயங்கிற்று. நினைவிலிருப்பதை எழுதி வைத்தால், நான் எழுதியவைகளுக்கும் குறிப்பேடுகளிலிருக்கும் விஷயங்களுக்கும் முரண்பாடு ஏற்படலாம் என்று அஞ்சினேன். அந்நிலையில் குறிப்பேடுகளை அனுசரித்து என் சுயசரிதையையே மாற்ற வேண்டிவரும் அல்லவா? 1942 ஜூலை 23-இல் நான் சிறையிலிருந்து விடுதலையாகி வெளியே வந்ததும் நண்பர்கள் சிலர் என் வாழ்க்கைப் பயணத்தை அச்சிட வேண்டுமென வற்புறுத்தினர். ஆனால், நான் சிறையில் எழுதிய மற்ற ஆறு புத்தகங்கள் முதலில் வெளிவர வேண்டுமெனக் கருதினேன். எனவே 'உலகத்தின் உருவக்கோடு', 'மனித சமுதாயம்', தத்துவ விளக்கம்', 'விஞ்ஞான லோகாயதவாதம், சிந்து முதல் கங்கை வரை' 'வால்காவிலிருந்து கங்கை வரை' ஆகியவை பிரசுரிக்கப்பட்ட பிறகே என் வாழ்க்கைப் பயணமான 'ராகுல்ஜியின் சுயசரிதை' என்னும் இந்நூல் வாசகர்களின் கரங்களுக்கு இப்போது வந்திருக்கிறது.
இரண்டாம் பாகத்தை உடனே எழுத வாய்ப்பு கிடைக்குமென்று நான் கருதவில்லை. சோவியத் யூனியனுக்கு மூன்றாம் முறையாகப் பயணம் செல்ல முடிவு செய்து, பாரசீக அரசின் அனுமதியை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறேன். யுத்தத்திற்கு முன்பு இப்படிப்பட்ட அனுமதியை ('வீஸாவை) ஒரு மணி நேரத்திற்குள் பெற்றுவிடலாம். ஆனால் இன்றோ, அனுமதி கேட்டு எழுதி ஐந்து மாதங்களாகியும், அது எப்பொழுது கிடைக்குமென்று தெரியவில்லை. அனுமதிக்காக வழிமேல் விழி வைத்து எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் காலத்தை இரண்டாம் பாகம் எழுதுவதில் செலவிட எண்ணி யிருக்கிறேன்.
ராகுல் சாங்கிருத்யாயன்
அலகாபாத்,
2, செப்டம்பர் 1944