Skip to content
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000

புரட்சியாளர் பெரியார் (தமிழ்க் குடியரசு பதிப்பகம்) - நூன்முகம்

நூன்முகம்

பெரியது; உலகம் பெரியது: நாம் வாழும் உலகம் பெரியது. இதன் வயது என்ன? சில நூறு ஆண்டுகளா? இல்லை; அதற்கு மேலும், சில ஆயிரம் ஆண்டுகளா? அதுவும் குறைந்த மதிப்பீடு நில உலகின் வயதை ஆயிரக்கணக்கில் அல்ல; பல இலட்சக்கணக்கில் மதிப்பிடுகிறார்கள். எத்தனை இலட்சம் என்பதில் அறிஞர்களுக் கிடையே உடன்பாடு இல்லை. உலகம் தொன்மையானது என்பது நமக்குப் போதும்.

தொன்மையான உலகில் உயிர் வாழும் வகைகள் சிலவா? இல்லை. பலவா? இல்லை. எத்தனையோ! புல்லாய், பூடாய், புழுவாய் தலை நீட்டிய உயிர்வகைகள், பரிணமித்து, பரிணமித்து, மக்கள் நிலைக்கு வந்துள்ளதைக் காண்கிறோம் புல் பூண்டுகள் ஓரறிவோடு கிடக்க, மாக்கள் ஐந்தறிவோடு இருக்க, மனித இனம் மட்டுமே, ஆறறிவு நிலைக்கு வளர்ந்துள்ளது. விலங்குகளுக் கிடையில் விலங்காக வாழ்ந்த மனிதன். மனித இறைச்சியையும் உண்டு பிழைத்த காட்டுமிராண்டி, விலங்குகளை வேட்டையாடி பச்சையூணைத் தின்று கிடந்த விலங்கின் பங்காளி, இன்று எவ்வளவிற்கு வளர்ந்திருக்கிறான் என்பதை நொடிப்பொழுது நினைவுகூர்வோம்.

அருள் ஏதும் பெறாத சாதாரண மனிதர்கள் இருவர் - சோவியத் விண்வெளி வீரர்கள் இருவர் எதைச் சாதித்துக் காட்டினார்கள்? விண்வெளியில், தொடர்ந்து நூற்று நாற்பது நாட்கள், விண்கலத்தில் சுற்றி வந்து ஆய்வுகளைப் பதிந்து கொண்ட பிறகு, பத்திரமாக, சோவியத் மண்ணில் வந்து இறங்கினார்கள். மானுட அறிவும் நுண்திறனும் ஆண்மையும் ஆற்றலும் சோர்வு படாமையும் எத்தகைய அற்புதச் சாதனையைக் கொடுத்துள்ளது பார்த்தீர்களா? மானுடம் புல் அல்ல' என்று பாவேந்தர், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடினது மிகையல்ல.

மிருக நிலையிலிருந்து வானோர் நிலைக்கு வளர, மக்கள் இனம் எடுத்துக்கொண்ட காலம் குறுகியது அல்ல; நீண்டது; மிக மிக நீண்டது. பல இலட்சம் ஆண்டுகள் என்று அறிஞர்கள் வாதிடுகின்றார்கள்.

இந்த இலட்சக்கணக்கான ஆண்டுகளில், உலகில் பிறந்தவர்கள் எத்தனையோ ஆயிரம் கோடி பேர்கள் ஆவார். மறைந்தவர்களும் கணக்கில் அடங்கார். இன்று இருப்போர் 400 கோடி பேர்களாவார்.

எண்ணி முடியாத கோடி கோடி மக்கள் பிறந்து, இருந்து, மறைந்தார்களே! அவர்களுடைய கதை என்ன? ஒன்றுமில்லை; ஆம், சொல்ல ஒன்றுமில்லை, யார் வயிற்றிலோ பிறந்தார்கள்; எவர் உழைப்பிலோ பிழைத்தார்கள்; எப்படியோ எங்கேயோ மறைந் தார்கள். வெறும் வேடிக்கை மனிதர்கள் எத்தனையோ கோடி. அவர்கள் இருந்ததால் உலகுக்கு நன்மை இல்லை; மறைந்ததால் இழப்பும் இல்லை.

மனித மா கடலின் நடுவே, சிலர் மட்டுமே ஒளியோடு வாழ்ந்து, ஒரு விந்தை; சிறப்பாக வாழ்ந்தார்கள்; சிந்தனையைப் பயன் படுத்தி வாழ்ந்தார்கள்; அத்தகையோர் சிந்தனையை தன்பால் குவிக்காமல், சுற்றி வாழும் மக்கள் பால் பாய்ச்சினார்கள். அவர்கள் நிலையை உணர்ந்தார்கள். பிறர் நோயை தன்னோ யாகக் கொண் டார்கள். நோய் நாடி, நோய் முதல் நாடி, அது தணிக்கும் வாய்நாடி தொண்டாற்றினார்கள். பிறர்க்கென வாழும் தொண்டில், பருவம் நாடிக் காத்திராமல், சுகம் தேடிச் சோம்பி யிராமல், ஏச்சையும் பேச்சையும் துச்சமாகத் தள்ளிவிட்டு, கருமமே கண்ணாயிருந்து, செயற்கரிய செய்த பெரியார் சிலரையே மக்கள் இன வரலாற்றில் காணலாம். அத்தகைய, தனக்கென முயலாது, பிறர்க்கென முயலுனர் உண்மையால் உண்டாலம்ம இவ்வுலகம் என்னும் பழந்தமிழ் பாடல், மாற்றுக்குறையாத உண்மை செயற்கரிய செய்த பெரியோர், மறைந்தும் மறையாது. எண்ணற்றோர் உள்ளங்களில், உணர்வு களில், கருத்தோட்டங்களில் இரண்டறக் கலந்து வாழ்கிறார்கள்.

எப்போதோ ஓர் முறை, எங்கோ ஓரிடத்தில், தோன்றும் வழி காட்டிகளில் ஒருவர், நம்மிடையே தோன்றினார்; நீண்ட நெடிய வாழ்வு வாழ்ந்தார்; தொண்டு நிறைந்த, இடையறாத தொண்டு செறிந்த, வாழ்நாள் முழுவதும் எதிர்நீச்சல் தொண்டில் திளைத்த, பெருவாழ்வு வாழ்ந்தார். தொண்டு செய்து பழுத்த பழமாக விளங்கிய நம் தந்தை, அறிவில் வயதில் பெரியார்; வாய்மைப் போருக்கு என்றும் இளையார் என்பது உலகறிந்த உண்மை. அவர் மண்டைச் சுரப்பை உலகம் தொழும்' என்பதும் உண்மை; வெறும் புகழ்ச்சியில்லை.

தந்தை பெரியார் ஈ. வே. ராமசாமி நம்மோடு வாழ்ந்தவர். நம்மில் ஒருவராக வாழ்ந்தவர்; நம்மிலிருந்து விலகி உயர அமர்ந்து வாழ மறுத்தவர். நம்மில் கோடானு கோடி மாந்தர் புனிதமாகக் கருதும் பலவற்றைச் சாடிச்சாடி வாழ்ந்தவர் அதனால் ஏற்பட்ட எரிச்சல் காரணமாக, 'பெரியார் நமக்காகவே வாழ்ந்தவர்'; அவர் தன்னுடைய ஆதாயத்திற்காக எதையும் உடைக்காத, 'பொதுநலப் புரட்சியாளர்' என்பதை பலர் மறந்துவிட்டிருக்கலாம்; பல்லாயிரவர் பெரியாரின் பெருமையினையும் அருமையினையும் இன்று முழுமையாக உணராமல் இருக்கலாம். இருப்பினும், மக்கள் இன நோய்களுக்கு மாமருந்துகளாக பெரியாரின் கருத்துகளும் அறிவுரைகளும் பயன்படும் என்பது காலம் காட்டக் காத்திருக்கும் உண்மை ஆகும்.

'தந்தை பெரியார். ஈ. வே. ராமசாமியைப் போன்ற ஒரு மாமனிதர், நம்மிடையே வாழ்ந்தார்; தொண்ணுற்று அய்ந்து வயது வரை வாழ்ந்தார்; கடைசி மூச்சுவரை, சூறாவளியெனச் சுற்றி வந்து, புரட்சிச் சிந்தனைகளை பேராறுகளாகப் பாய்ச்சி வந்தார்; வாழ்க்கையின் பல கூறுகளுக்கும் பாடம் சொல்லித் தந்த பேரா சானாக விளங்கினார்' என்பதை இனி வரப்போகும் தலை முறைகள் நம்ப மறுத்தால், வியப்பில்லை. அத்தனைப் பெரிய சிந்தனையாளராகவும் சாதனையாளராகவும் இரண்டிற்கும் மேலான பண்பாளராகவும் வாழ்ந்த, பகுத்தறிவுப் பகலவன், தன்மான இயக்கத் தந்தை, சமத்துவச் சுடரொளி, பெரியார் ஈ. வே. ராமசாமியின் நூற்றாண்டு விழாவினை இப்போது கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். எந்த தலைவருக்கும் கிடைக்காத சிறப்பினை பெரியாருக்குச் செய்ய தமிழ்நாடு அரசு முன் வந்துள்ளது. ஓர் ஆண்டு முழுவதும் பெரியாருக்கு நூற்றாண்டு விழா எடுக்க முடிவு செய்து, ஒவ்வொரு திங்கள் ஒவ்வோர் மாவட்டத் தலைநகரில் சிறப்பாக விழா எடுக்கிறர்கள். அந்த வரலாற்றுச் சிறப்புடைய ஆண்டில் பெரியார் அறக்கட்டளைச் சொற்பொழிவின் முதல் தொடரினைத் தொடங்கி வைக்கும் பெரும் பேற்றினை, சென்னைப் பல்கலைக் கழகம், எனக்கு வழங்கியுள்ளது. இச்சிறப்பிளை நல்கிய என்னுடைய தாய்ப் பல்கலைக் கழகத்திற்கு என் உளமார்ந்த நன்றியினைப் படைக்கிறேன்.

'ஆண்டுதோறும் சென்னைப் பல்கலைக் கழகத்தில் பெரியார் அறக்கட்டளை சொற்பொழிவுகள்' நிகழ்த்துவதற்கு மூலதனமாக, பத்தாயிரம் ரூபாய் கொடுப்பதென்று சுயமரியாதைப் பிரசார நிறுவனம் முடிவு செய்தது. திராவிடர் கழகப் பொதுச் செயலாளரும், 'விடுதலை' நாளிதழின் ஆசிரியருமான, மதிப்பிற்குரிய தோழர் கி. வீரமணி அதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்.

சென்னைப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக இருந்த நான், 17-9-1973 அன்று சென்னை பெரியார் திடலில் நடந்த பெரியார் பிறந்தநாள் விழாவின்போது, தந்தை பெரியாரிடமிருந்து பத்தாயிரம் ரூபாய்களுக்கான காசோலையை நேரில் பெற்றேன்.

என் துணை வேந்தர் பதவிக் காலத்தில் ஏற்பட்ட பல்வேறு அறக்கட்டளைகளின் விதிமுறைகளைப் போல், இவ்வறக்கட்டளை யின் விதிகளும் அமைவதில் சிறிது தயக்கம் ஏற்பட்டது. அதனால் தாமதம் ஏற்பட்டது. இல்லையேல், பெரியார் தொடர் சொற் பொழிவுகள், என் பதவிக் காலத்திலேயே தொடங்கியிருக்கும். அந்நிலையில், இச்சொற்பொழிவின் முதல் பொழிவை நான் ஏற்றுக்கொண்டிருக்க முடியாது. இப்பெருமை, மற்றோர் தக்காரைச் சேர்ந்திருக்கும், பொழிவு ஆங்கில மொழியில் அமைந்திருக்கவும் கூடும்.

விதிமுறைகள் பற்றி எப்படியோ முளைத்த தயக்கமும் தவக்கமும் பெரியார் சொற்பொழிவுத் தொடக்கத்தை அம் மாமனிதரின் நூற்றாண்டு விழாவோடு இணைத்துவிட்டது.

பள்ளியறியாத சிறிய பட்டிக்காட்டில் பிறந்த எனக்கு கல்லூரிப் படிப்பின் மேல் நாட்டமும் ஆர்வமும் ஊட்டி வெற்றி பெறச் செய்தவர், தந்தை பெரியார். என்னை மட்டுமா படிப்பாளி யாக்கினார்? இலட்சக்கணக்கான மக்களை பெரும் பட்டங்கள் பெறும் அளவிற்கு உந்தியவர், பள்ளிப் படிப்பையும் முடிக்காத பெரியார் ராமசாமியே ஆவார்.

ஆறுபது வயதுவாக்கில் வாழும் நாம் அனைவரும் பிறந்தது எந்தச் சூழலில்? எட்டி இருந்து, இணையாது வாழ்ந்த, தனித் தனிச் சாதிப்பற்று சூழலில் வளர வேண்டியவர்களாக இருந்தோம். பெரிய சாதி என்னும் உணர்வில் முன்னணியில் இருந்த சிறிய தொரு பிரிவில் பிறந்து வளர்ந்தவன் நான். அப்படிப்பட்ட என்னை இளமைப் பருவத்திற்கு முன்பே ஆட்கொண்டு, புதிய மனிதனாக்கி விட்டார். எந்த அளவு புதிய மனிதனாக்கிவிட்டார், தந்தை பெரியாரே கூறட்டும்.

சாதியில் சைவராயிருந்தும் எந்தத் துறையிலும் எந்தச் சந்தர்ப் பத்திலும் சாதி உணர்ச்சியைக் காட்டினார் என்று சொல்ல முடியாத அளவுக்கு நடந்து வந்திருக்கிறார்' என்றும் நான் சொல்லக்கூடும்.

அறிவுத்துறையில் பெரும் பகுத்தறிவு வாதியாகவும் சமுதாயத் துறையில் உண்மையாகவே சமதர்ம வாதியாகவும் இருந்து வந்திருக்கிறார்.''

இப்படி 1972 இல் பாராட்டுவதற்கு ஆறு ஆண்டுகள் முன்ன தாகவே, பெரியார், ஈரோடு சிக்கையா கல்லூரியில், நெ. து. சுந்தரவடிவேலு பகுத்தறிவுப் போட்டிப் பரிசுகள் வழங்க அறக் கட்டளையை நிறுவினார். இச்சிறப்பினை என் ஒருவனுக்கே பெரியார் செய்துள்ளார் என்பதை இப்போது சொல்லாமல் எப்போது சொல்வது?

நெ.து. சுந்தரவடிவேலு. பகுத்தறிவு வாதியாகவும், உண்மை யான சமதர்ம வாதியாகவும் வாழ்வதன் பெருமை எனக்கா உரியது? இல்லை. தந்தை பெரியாருக்கும் அவருடைய தன்மான இயக்கத்திற்கும் உரியதாகும்.

தன்மான இயக்கத்தின் முதல் தலைமுறையினன் என்னும் உரிமையாலும், கட்சி தாவாத தன்மான இயக்கத்தவன் என்னும் தகுதியாலும் நான் சொல்லிக்கொள்ள விரும்புவது ஒன்றே ஒன்று. அது என்ன? தொடக்க கால சுயமரியாதை இயக்கத்தின் சாதாரணத் தொண்டரின் கனவிலும் சாதிப்பற்று எந்நேரத்திலும் பளிச்சிட்ட தில்லை. மனித இனத்தைச் சேர்ந்தவர்கள், பகுத்தறிவுப் பெருங் குடும்பத்தவர்கள், என்னும் உணர்வே எங்கள் மூச்சாகும்.

'ஓர் புரட்சியாளரின் மலர்ச்சி' என்ற தலைப்பில், 2, 3, 4-4 79 நாட்களில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் அறக்கட்டளைச் சொற்பொழிவுகளை நிகழ்த்தினேன். முதல் நாள் சொற்பொழி விற்குத் துணை வேந்தர் பேராசிரியர்ஜி. ஆர். தாமோதரன் தலைமை தாங்கிச் சிறப்பித்தார். அவருக்கு நன்றியுடையேன். அடுத்த இரு நாட்களும் தலைமை தாங்கிய பேராசிரியர் சி.ஏ. பெருமாள் எனது நன்றிக்கு உரியவர். சொற்பொழிவுக் கூட்டங்களுக்கு வேண்டிய ஏற்பாடு செய்த பதிவாளர் திரு. C.K. குமாரசாமிக்கும் நன்றி. அதை வெளியிட்டுக்கொள்ள உரிமை தந்த சென்னைப் பல்கலைக் கழகத்திற்கு நன்றியுடையேன்.

அச்சொற்பொழிவுகளின் அடிப்படையில் உருவானது 'புரட்சியாளர் பெரியார்' என்னும் இந்நூல். இந்நூலை நன்முறையில் வெளியிட முன்வந்த எஸ். சந்த் அண்டு கம்பெனியாருக்கும் அதன் நிர்வாகி திரு. M. D. கோபாலகிஷ்ணனுக்கும் தமிழ் மக்களும் நானும் பெரிதும் நன்றியுடையவர்கள் ஆவோம்.

இந்நூலுக்கான குறிப்புகளை, தகவல்களை, செய்திகளைச் சேகரிக்க உதவியது சென்னை பெரியார் திடலில் அமைந்துள்ள பெரியார் ஆராய்ச்சி நூலகமாகும். வேண்டிய உதவிகளைத் தாராளமாகக் கொடுக்கும்படி ஆணையிட்ட திராவிடக் கழகப் பொதுச் செயலாளர் திரு. கி. வீரமணிக்கு பெரிதும் நன்றியுடையேன்.

உரிய செய்திகள் இங்கிங்கே உள்ளன என்று அடிக்கடி சுட்டிக் காட்டி உதவிய திரு. நா. சு. சம்பந்தம் நன்றிக்குரியவர்.

நூலகர், திரு. தமிழ்த்துரை, தன்னுடைய சொற்பொழிவுக்கு ஆயத்தஞ் செய்வதுபோல, குறிப்பெடுத்துக் கொடுத்து உதவினார். அவருடைய உதவி என் பணியை விரைவுபடுத்தியது. அவருக்கும் நன்றி. திரு கலிபூங்குன்றன் அவ்வப்போது செய்த உதவியையும் மறக்க இயலாது. அவருக்கும் நன்றி சொல்லுகிறேன்.

தட்டச்சுப்படிகள் முழுவதையும் பொறுமையாக இரண்டு மூன்று முறை படித்துப் பார்த்து, எதை எதை எங்கெங்கே, பகுத்து இணைக்கலாம் என்று சிந்தித்து, ஆலோசனை கூறி, இந்நூல் இவ்வுருவில் அமைய பல நாள் உடனிருந்து உதவிய திரு உ. அய்யாசாமிக்கு எப்படி நன்றி தெரிவிப்பது? செய்தி, கருத்துக் குவியல்களை முறைப்படுத்தி, ஒழுங்காக அமைத்து நல்லுருக் கொடுத்த அவருக்குப் பெரிதும் நன்றியுடையேன்; படிப்போர் நன்றியும் உரியதாகும். சென்னைப் பல்கலைக் கழகத் துணை வேந்தரும் என்னுடைய நெடுநாளைய நண்பருமான பேராசியார் ஜி. ஆர். தாமோதரன் அவர்கள் இந் நூலுக்கு சிறந்ததொரு அணிந்துரையை வழங்கிப் பெருமைப்படுத்தியதற்கு நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.

இந்நூலை பெரியாரின் முழுமையான நீண்ட வாழ்க்கை வரலாறாகக் கொள்ளற்க. அப்புரட்சியாளரின் மலர்ச்சியை மக்களுக்கு விளக்கும் முயற்சியாக மட்டும் ஏற்கும்படிக் கோருகிறேன்.

சென்னை

600030

நெ.து. சுந்தரவடிவேலு

 

தொடர்புடைய மற்ற பதிவுகள்:

Previous article திராவிடர் இயக்கப் பார்வையில் பாரதியார் - ஆசிரியர் குறிப்பு