பெரியார் கொட்டிய போர் முரசு
நுழையுமுன்
பழி சொல்லுவதிலும், அபாண்டமாகப் பேசுவதிலும், எழுதுவதிலும், ஆதாரமில்லாமல் அவதூறுகளை அள்ளி வீசுவதிலும் தேர்ந்த புத்தி இந்தப் பார்ப்பனர் கூட்டத்தின் டி.என்.ஏ.வி.லேயே இருக்கிறது போலும்!
"பெரியார் தமிழை காட்டுமிராண்டி மொழி என்றும், கடவுளை வணங்குகிறவர்கள் காட்டுமிராண்டிகள் என்றும் ஒரு முறை அல்ல, பலமுறை கூறினார். தமிழ் இலக்கியங்களைத் தூற்றினார். தமிழர்கள் இன்று போற்றும் புலவர்களைப் பொய்யர்கள் என்றார். தமிழ்நாட்டைத் தமிழர்தான் ஆள வேண்டும் என்று சொல்பவர்கள், முதலில் பெரியாரைக் கைவிட வேண்டும். மாறாக, அவர்கள் பெரியாரைப் போற்றுகிறார்கள். அப்படியானால் அவர்கள் பெரியார் அகராதிப்படி தமிழகத்தை காட்டுமிராண்டிகள் ஆள வேண்டும் என்றுதானே சொல்கிறார்கள்."
'துக்ளக்' 12.7.2017 பக்கம் 17
ஒரு தலைவரைப் பற்றிச் சொல்லும் பொழுது அவர் எங்கு சொன்னார்? எப்பொழுது சொன்னார்? என்று எழுதாமல் சாராயம் குடித்தவன் சகட்டு மேனிக்குப் பேசுவது போல் உளறுவது உகந்தது தானா?
குடந்தை நிலக்கிழார் ஒருவர் விருதுநகர் மாவட்டம் நின்ற நாராயணப் பெருமாள் கோவிலுக்கு வந்து குளப் படிக்கட்டில் வழுக்கி விழுந்தது குறித்து தகவல் தெரிவிக்க தன் பணியாளரிடம் பின்வருமாறு சொல்லி அனுப்பினார்.
திருக்குடந்தை திரு லோக தாத்தாச்சாரியார் திருத்தங்கள் திருநின்ற நாராயணப் பெருமாள் திருமுகம் சேவிக்க, திருக்கோயிலுக்கு வந்து, திருக்கோயில் வளாகத்தில் இருக்கக் கூடிய திருப் படிக்கட்டுகளில் இறங்கி திருத்துழாய் பிடுங்கிறச்சே, திருக்குளத்துப்படிப் பாசிகள் வழுக்கி, திருக்குளத்தில் விழுந்து திருக்காலில் ஹீனமடைந்தார்னு சொல்லிடு. இரண்டு முறை கேட்டு கேட்டுப் பார்த்த பணியாளரிடம் எப்படிச் சொல்லுவாய் சொல் என்றார் அந்த நிலக்கிழார்! சொல்லிடுறேன், சொல்லிடுறேன் என்று சொன்ன பணியாள் சொல்லிக் காட்டினான் பின்வருமாறு: கும்பகோணத்து பார்ப்பான் குட்டையிலே விழுந்தான்னு சொல்லிடுறேன் சாமி என்றானே பார்க்கலாம். பார்ப்பான் சுத்தி சுத்தி சொன்னாலும் கடைசியில் அவன் கதை இப்படித்தான் முடியும் - அவன் சரக்குதான் குப்புத்துப் படுத்துக் கிடக்கும்.
தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று தந்தை பெரியார் சொன்னது உண்மைதான். எதற்காக அப்படி சொன்னார்? தமிழை இழிவுப்படுத்துவதற்காகவா? தமிழை மேன்மைப்படுத்துவதற்காகவா?
தமிழ்பற்றி தந்தை பெரியாரின் கருத்தென்ன? இதோ பெரியார் எழுதுகிறார்:
"எனக்குத் தமிழ் மீது வெறுப்பு இல்லை . நான் வீட்டிலும், வெளியிலும் பேசுவது தமிழ். படிப்பது தமிழ், எழுதுவதும் தமிழ், தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் செய்ய வேண்டுமென்று, சில முறைகளைப் புகுத்தியவனும் நான்தான். தமிழ் வளர்ச்சி அடையாத பழங்கால மொழியாக அப்படியே இருந்து வருகிறது. விஞ்ஞான மொழியாகவும், பகுத்தறிவு மொழியாகவும் ஆகவில்லை. ஆகையால் தமிழில் பயிற்சி மொழியாக எடுத்துப் படிக்கும் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பில் சலுகை தருவதாக அரசு கூற வேண்டியதாகிறது - இது வரவேற்கத்தக்கதே!
(விடுதலை 1.12.1970)
இதற்கு மேல் என்ன விளக்கம் தேவை? பெரும்பாலும் புராணங்களும், மூடநம்பிக்கைகளும் மிகுந்து காணப்படுவது - ஒரு மொழிக்கான சிறப்பாகாது. ஏதோ எந்தக் காலத்தில் கிறுக்கப்பட்டவை என்றால், தொலைத்து விட்டு புதுமைகளையும், அறிவியலையும் குருதியாகச் செலுத்தினால்தானே ஒரு மொழி வளர்ச்சித் திசையில் வானோங்கி நிற்க முடியும்.
சமயம் என்னும் சூளையில் தமிழ் நட்டால் முளையாது! என்று புரட்சிக் கவிஞர் பாடியதும் இந்தப் பொருளில் தானே!
தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு எழுத்துச் சீர்திருத்தம் கொண்டு வந்தவர் யார்? தமிழ்நாட்டையும், தமிழர்களையும், தமிழையும் சூறையாட வந்த இந்தியை, சமஸ்கிருதத்தை எதிர்த்துப் போர்க் கொடி தூக்கி விரட்டிய கை எந்தக் கை?
நமஸ்காரம் போய் வணக்கம் வந்ததும், அக்ராசனாதிபதி போய் தலைவர் ஆனதும், வந்தனோபசாரம் நன்றி என்றானதும், மகாராஜஸ்ரீ, சிரஞ்சீவிகள் இருந்த இடம் தெரியாமல் போனதும், ஸ்ரீ போய் திரு பிறந்ததும் எந்தக் கால கட்டத்தில்? 1937 ஆம் ஆண்டில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தினை தலைமை தாங்கி தந்தை பெரியார் நடத்தியதன் தாக்கம்தானே - இல்லை என்று மறுக்க முடியுமா?
நாராயணசாமி நெடுஞ்செழியன் ஆனதும், இராமையன் அன்பழகன் ஆனதும், சோமசுந்தரம் மதியழகன் ஆனதும், கோதண்டபாணி வில்லாளன் ஆனதும், அரங்கசாமி அரங்கண்ணல் ஆனதும், சீனிவாசன் செழியன் - ஆனதும் எல்லாம் தமிழ் வளர்ச்சிக்குத் தந்தை பெரியார் அளித்த அருட்கொடையல்லவா!
தொடர் வண்டி நிலையங்களில் ஊர்ப் பெயர்ப் பலகைகளில் முதலில் இந்தி என்றிருந்த நிலையை நிர்மூலம் செய்து முதலிடத்தில் தமிழ் இடம் பெற்று இருக்கிறதே - இந்த நிலை எப்படி வந்தது - எப்பொழுது வந்தது?
1952, 1953, 1954 ஆண்டுகளில் தார் கொண்டு இந்தி எழுத்துக்களை அழிக்கும் போராட்டத்தைத் தந்தை பெரியார் நடத்தியதன் விளைச்சல் அல்லவா இது!
தமிழன் வீட்டு நிகழ்ச்சிகள் (குறிப்பாக திருமணம் தமிழன் தலைமையில் நடப்பதும், தமிழில் நடப்பதும் எப்படி வந்தது - யாரால் வந்தது? தமிழர் பண்பாட்டு விழாவாக பொங்கலை பரவலாக்கியது யார்? எந்த இயக்கம்? தமிழ், தமிழர், தமிழ்நாடு என்ற தடத்தில், அவற்றின் வளர்ச்சியில் தந்தை பெரியார் முத்திரை பதிக்காத துறை உண்டா? தமிழர்களைக் கண்டித்ததும், தமிழ் மீதான குறைகளை எடுத்துக் கூறியதும் அவற்றின் வளர்ச்சி நலன் கருதியே என்பது -
ஆசாபாசம் இல்லாமல் அறிவைச் செலுத்தும் எவருக்குமே எளிதில் புலனாகுமே. தமிழ்மீது அக்கறை செலுத்துவதாக கிளிசரின் கண்ணீர் வடிக்கும் குருமூர்த்தி வகையறாக்களான பார்ப்பனர்கள் தமிழில் பெயர் சூட்டிக் கொள்ளாதது ஏன்? இந்தத் திசையில் பரிதிமாற் கலைஞர் (சூரிய நாராயண சாஸ்திரி) ஒருவரைத் தவிர அடுத்த வரை எடுத்துக்காட்ட விரலை மடக்க முடியாதது ஏன்? ஏன்?
திராவிடர் இயக்கம் எத்தனை எத்தனை எழுத்தாளர்களை, படைப்பாளிகளை உருவாக்கியது! மயிலை சுப்பிரமணியன் பற்றி துதிப் பாடல்களை எழுதிய ஒரு கனகசுப்புரத்தினத்தை புரட்சிக் கவிஞனாக - பகுத்தறிவுப் பாவலராக வடித்தது யார்? எந்த இயக்கம்? புரட்சிக் கவிஞரின் படைப்புகள் தமிழ்மொழிக்கு அணிவிக்கப் பட்ட விலை மதிக்க முடியாத நவமணி அல்லவா!
தமிழுக்குச் செம்மொழி தகுதி - சென்னை மாநிலத்துக்குத் 'தமிழ்நாடு' என்று பெயர் மாற்றம் வந்ததெல்லாம் எப்படி? வாய்ப் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று உளறலாமா?
தந்தை பெரியார் தமிழை காட்டுமிராண்டி என்று சொன்னது தமிழை இழிவுபடுத்த அல்ல! காட்டுமிராண்டித்தன மூடச் சகதியிலிருந்து அறிவியல் பகுத்தறிவு மொழியாக வளம் பெற வேண்டும், வளர்க்க வேண்டும் என்ற நன்னோக்கத்தோடு!
- 'விடுதலை ' ஞாயிறுமலர், 15.07.2017
தொடர்புடைய மற்ற பதிவுகள்: