நெஞ்சுக்கு நீதி பாகம் - 3 - முன்னுரை
"நெஞ்சுக்குநீதி" மூன்றாவதுபாகம் உங்கள் கரங்களில் தவழுகிறது.
முதற்பாகம், நான் பிறந்த 1924 ஆம் ஆண்டு முதல் 1969 வரையிலான என் வாழ்க்கை வரலாற்றையும் என் வாழ்க்கையுடன் இரண்டறக் கலந்த இயக்க வரலாற்றை யும், மற்றும் உலக வரலாற்றுக் குறிப்புக்களையும் உங்களுக்குச் சுட்டிக்காட்டுவதாகும்.
1969 முதல் 1976 வரை ஏழாண்டுக்கால வரலாற்றுக் குறிப்புகளையும், என் வாழ்க்கைக் குறிப்புக்களையும் தொகுத்தளிப்பதுதான் “நெஞ்சுக்குநீதி'' இரண்டாம் பாகமாகும்.
1976க்குப் பிறகு 1991 வரையிலான 15 ஆண்டுக்கால சரித்திர நிகழ்வுகளை நினைவூட்டுவதுதான் நெஞ்சுக்கு நீதியின் மூன்றாம் பாகமாகும்.
அதாவது என் வாழ்வில் 67 ஆண்டுகள் என்னைப் பொறுத்தும், என் நினைவுடன் கலந்த பலதிசை வரலாற்று நிகழ்ச்சிகள் குறித்தும் உள்ள தொகுப்புக்களே இந்த மூன்று அத்தியாயங்களுமாகும்.
1991ல் 67வது வயதில் நிறைவுறும் இந்த மூன்றா வது பாகத்திற்குப்பிறகு, நான்காவது பாகம் எழுதுவதற் கும் வாய்ப்பாக என் ஆயுள் இப்போது மேலும் ஏழாண்டுகள் நீண்டு 74வது வயதில் ஊருக்கும் உலகிற்கும் உழைத்துக் கொண்டிருக்கிறேன்.
நான்காவது பாகம் "நெஞ்சுக்கு நீதி" எழுதத் தொடங்க வேண்டும் என்று பலரும், பதிப்பகத்தாரும் அன்புக் கட்டளையிட்டுக் கொண்டுள்ளனர்.
நாடாளும் பொறுப்பை, மக்கள் மீண்டும் நாலா வது முறையாக என்னிடம் வழங்கியுள்ள நிலையில் - நாலாவது பாகத்தை நானே எழுதுவேனா? அல்லது நான் எழுதாமலே நாட்டு மக்கள் இதயத்தில் இந்த வரலாற்றுக் குறிப்புகள், வரிகளாக வடிவங்கொள்ளுமோ, என்பதை நிர்ணயிக்கப்போவது இயற்கைதானே!
அதனால் அதனை இயற்கைக்கே விட்டுவிட்டு கடமையாற்று வதில் கண்ணும் கருத்துமாக ஈடுபடுவேன் என்ற உறுதியுடன்; மூன்று பாகங்களையும் செம்மையாக வெளியிட்டு என்னை மகிழ்வித்துள்ள திருமகள் நிலையத் தாருக்கு நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புள்ள,
மு.கருணாநிதி