Skip to content
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000

மகாத்மா ஜோதிராவ் புலே

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
முன்னுரை

இந்திய அரசியல் சட்டத்தின் முக்கிய நிறுவனரான டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்கள் மகாத்மா ஜோதிராவ் புலேயின் வாழ்க்கை வரலாற்றை நூலாக எழுதத் திட்டமிட்டிருந்தார். 1954 இல் எனக்கு அம்பேத்கார் அளித்த ஒரு நேர்முகத்தில் தனக்கு மகாத்மா ஜோதிராவ் புலேயின் வாழ்க்கை பற்றி ஒரு நூல் எழுதும் நோக்கம் இருப்பதாகச் சொல்லியிருந்தார். இந்தியாவின் மாபெரும் சமூகச் சீர்திருத்தவாதி என்று ஜோதிராவை அவர் வர்ணித்தார். புத்தர், கபீரைப் போலவே ஜோதிராவையும் தன் தலைவராக அவர் மதித்து வந்தார். ஆனால் அம்பேத்கரின் உடல்நிலை மோசமானதால் இந்நூல் பணி நடந்தேறுமா என அவர் அய்யம் தெரிவித்தார். அவரால் இப்பணியைச் செய்ய இயலவில்லையென்றால் தன்னால் அப்பணியைச் செய்ய இயலும் என நான் அவரிடம் சொன்னேன்.

உண்மையில் இப்பொழுது நான் அப்பணியை முடித்துவிட்டதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். சாதாரண மனிதன், தொழிலாளி, புறக்கணிக்கப்பட்ட மனிதன், இந்தியப் பெண் ஆகியோருக்கு இனியொரு விடியல் வரவிருக்கிறது என்று நவீன இந்தியாவில் உரத்துக்கூவிய முதல் இந்தியரான ஜோதிராவ் புலேயின் வாழ்க்கை வரலாற்று நூலைப் பொதுமக்கள் முன்வைக்கிறேன்.

தீண்டத்தகாதவர்களுக்காகவும், பெண்களுக்காகவும் மகாராட்டிர மாநிலத்தில் பள்ளிகளைத் துவக்கிய முதல் இந்தியர் ஜோதிராவ் தான். சூத்திரர்கள், ஆதிசூத்திரர்கள், பெண்கள் ஆகியோர் மத்தியில் நிலவி வந்த அறியாமையையும், மூடநம்பிக்கையையும் அகற்றவும், அவர்களின் அடிமை விலங்குகளை உடைத்தெறியவும் இவர் விரும்பினார். ஆகவே அடித்தள சாதி மக்களுக்கும், பெண்களுக்கும் அறிவுக் கதவுகளை இவர் தீரத்தோடு திறந்துவிட்டார். சமூகச் சமத்துவம், நீதி, பகுத்தறிவு ஆகியவற்றின் அடிப்படையில் சமூக ஒழுங்கை மறுநிர்மாணம் செய்வதே இவரின் இலட்சியமாக இருந்தது.

ஜோதிராவ் காலத்தில் மகாராட்டிரத்தில் இருந்த எழுத்தாளர்களும், ஆசிரியர்களும் பெரும்பாலும் பார்ப்பனர்களாகவே இருந்தனர். ஆகவே இயல்பாகவே அவர்களின் எதிர்ப்பையும் புறக்கணிப்பையும் இவர் எதிர்கொள்ள நேரிட்டது. ஜோதிராவ் தொடங்கி வைத்த சமூக நீதிக்கான போராட்டம், கல்வி வாய்ப்பிற்கான போராட்டம் போன்ற போராட்டங்களை முன்னெடுத்துச் சென்றவர்களே கூட, இவரது வாழ்க்கை வரலாற்றை எழுத முன்வராத நிலை இருந்து வந்தது. ஏனென்றால், பார்ப்பனச் சாதி எதிரிகள் காட்டி வந்த வெறுப்பு மிகத் தீவிரமாக இருந்தது; இவரின் பெயரை அவர்கள் முழுக்கவே புறக்கணித்து வந்தார்கள்.

1927-ஆம் ஆண்டு பண்டரிநாத் பாட்டீல் என்பவர் தனக்கென ஒரு பாணியில் ஜோதிராவ் வரலாற்று நூலை எழுத முயற்சித்தார். அந்த வகையில் சிறு, சிறு வெளியீடுகள் வெளிவந்தன. நவீன வாழ்க்கை வரலாறு எழுதப்படும் அணுகுமுறை, ஆய்வு முயற்சிகளின்படி இதுவரை ஜோதிராவின் வரலாறு எழுதப்படவில்லை. பாட்டீல் எழுதிய வெளியீடுகளிலிருந்து நான் பெற்ற தகவல்களுக்காக அவருக்கு எனது நன்றி. திரு. பாட்டீலுடனும், வேறு சில ஆய்வாளர்களுடன் நான் நடத்திய உரையாடல்களிலிருந்து எனக்குச் சில தகவல்கள் கிடைத்தன. எனக்கு முந்தைய ஜோதிராவ் வரலாற்று ஆசிரியர்கள் யாருக்கும் கிடைக்காத அல்லது அவர்களால் சரிபார்க்கப்படாத தகவல்களைத் தேடி அலைந்தேன். இவ்வாறு நான் தேடியெடுத்த மதிப்பு வாய்ந்த தகவல்களை உங்கள் முன் வைத்துள்ளேன்.

1927, டிசம்பரில் பம்பாய் தலைமைச் செயலகப் பதிவு அதிகாரி அளித்த ஓர் அறிக்கையில் ஜோதிராவுக்கு ஒரு ஜோடி சால்வை ஏனென்றால், சமூகச் சமத்துவத்தை நிலைநாட்டாமல் பொருளாதாரச் சமத்துவத்தை நிலைநிறுத்துவது மிகமிகக் கடினம். ஜோதிராவின் வாழ்க்கையையும் அவரது இயக்கத்தையும் புரிந்து கொள்ளாத அரசியல்வாதிகள் மகாராட்டிரத்தில் பரிதாபகரமான தோல்வியைச் சந்தித்திருக்கிறார்கள். லோகித்வாடி தேஷ்முக், எம்.ஜி. ரானடே, வீரசாவர்க்கர் ஆகியோரின் சமூகத் தத்துவங்களுக்கு இவர்கள் மதிப்பளித்திருந்தால் ஜோதிராவின் வாழ்க்கையையும், அவரின் இலட்சியத்தையும் இவர்களால் புரிந்து கொண்டிருக்க முடியும்.

பெரும்பாலும் மேல்சாதிகளிலிருந்து வந்த இந்திய சோசலிஸ்ட் தலைவர்கள் தடம் புரண்டோ , சமூகப் புரட்சியைப் புரிந்து கொள்ளாமலோ அரசியல், பொருளாதாரச் சமத்துவத்திற்கே முக்கியத்துவம் தந்து வந்தனர். இந்த சோசலிஸ்டுகளும், சோசலிசச் சமூக அமைப்பு முறையை உயர்த்திப் பிடித்தவர்களும் ஆண்டுக்கு ஒரு முறை சாதியத்தைக் கண்டனம் செய்துவந்தனர். ஆனால், இவர்களில் பெரும்பாலானோர் தனி வாழ்க்கையிலும், தேர்தல்களிலும் சுயநலத்திற்காகச் சாதியத்தை இறுக்கமாகப் பின்பற்றி வந்தனர்.

ஒரு முறை கங்கைக் கரையில் பொதுமக்கள் முன்னிலையில் இந்தியாவின் குடியரசுத்தலைவர் பார்ப்பனப் பண்டிதர்களின் கால்களைக் கழுவிவிட்டார். பார்ப்பனர்கள் அறிவாற்றலும், நற்குணங்களும், மனிதநேயமும் கொண்டவர்கள் என்ற அடிப்படையிலோ, சாதி, இன் வேறுபாடின்றி மரியாதை செய்யத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்ற முறையிலோ இவர் அந்த மரியாதையைச் செய்யவில்லை; மாறாக, அவர்கள் பார்ப்பனச் சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதற்காகவே அதைச் செய்திருந்தார். இது பார்ப்பனச் சாதிக்குப் புனிதம் தரும் வேலை என்பதைத் தவிர வேறொன்றுமில்லை. ஆனால், இந்தியக் குடியரசின் இலட்சியமோசாதியத்தை ஒழிப்பதாகும் (!). ஜோதிராவ் மேற்கொள் காட்டிய ஒரு புராணக் கதையில் பார்ப்பன முனிவரான பிருகு என்பவர் கடவுள் விஷ்ணுவின் நெஞ்சில் உதைத்தார் எனக் குறிப்பிடப்பட்டிருக்கும் ஒரு செய்தி முக்கியத்துவமற்றது என ஒருவராவது மறுக்க முடியுமா?

சாதியத்தின் முக்கிய அடித்தளமான பார்ப்பனியத்தை ஜோதிராவ் ஈவிரக்கமின்றித் தாக்கினார். வகுப்புவாதத்தைவிடச் சாதியம் அபாயகரமானது. ஏனென்றால், வகுப்புவாதத்தின் புயல் மையங்களை எளிதாகக் கண்காணித்து அதன் தீமைகளை இரக்கமின்றி வேரறுத்துவிடலாம். ஆனால் சாதியமோ தலைவர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள், வணிகர்கள் ஆகியோர் மத்தியில் கண்ணுக்குத் தெரியாத வகையில் ஊடுருவி நிற்கிறது. ஆனால் சாதி உணர்வோ 'தகுதி' என்ற போர்வையின் கீழ் வாழ்ந்து வருகிறது. பொறியியல், மருத்துவம், தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆகியவற்றில் மாணவர் சேர்க்கை என்ற பிரச்னை எழும்போதெல்லாம், காலங்காலமாகக் கல்வியறிவு பெற்று வந்த தலைமுறையில் பிறந்த பார்ப்பன மாணவனை தலைமுறை, தலைமுறையாகக் கல்வியிலிருந்து விலக்கிவைக்கப்பட்டிருந்த சாதிகளைச் சேர்ந்த மாணவனோடு ஒப்பிட வேண்டுமென 'தகுதி' மிக நுட்பமாக வாதம் செய்யும். தரைப்படை, விமானப்படை, கப்பற்படை ஆகியவற்றில் கண்டிப்பாக தகுதி பின்பற்றப்பட வேண்டும். ஆனால், ஏனைய துறைகளில் அடித்தள சாதி மக்களுக்கு முன்னுரிமை அளிக்கவில்லையென்றால், அவர்களின் வாழ்க்கைத்தரம் உயரவில்லையென்றால் நாட்டின் வலிமையும், ஒற்றுமையும் பாதிப்பிற்குள்ளாகும்.

தன் காலத்திய காங்கிரஸ் கட்சியின் மீது ஜோதிராவ் தொடுத்த தாக்குதல்களைப் பெரிதுபடுத்திப் பேச வேண்டிய அவசியமில்லை. இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி நிரந்தரமாக இருக்க வேண்டுமென்று தொடக்ககால காங்கிரஸ் தலைவர்கள் வெளிப்படையாகவே பேசிவந்தனர். கவர்னர் - ஜெனரல் பூனா நகராட்சிக்கு வருகை தந்தபோது, அவர் வருகைக்காக நகரை அழகுபடுத்துவதையும், அவருக்கு வரவேற்புத் தருவதையும் எதிர்த்த ஜோதிராவ், ஏதேனும் ஒரு நாளில் ஆங்கிலேய ஆட்சி முடிவுக்கு வந்துவிடுமென நம்பிக்கை தெரிவித்தார். விவசா யிகளோடும், தொழிலாளிகளோடும், தீண்டத்தகாதவர்களோடும் உறவு கொள்ள காங்கிரஸ் தலைவர்கள் அக்கறை கொள்ளாததால் ஜோதிராவ் காங்கிரசோடு எந்த உறவும் வைத்துக் கொள்ளவில்லை. தனது சக மனிதர்களின் கௌரவத்தையும், மனித உரிமைகளையும் மதிக்காத இந்தத் தலைவர்களைத் தேசபக்தர்களாகக் கருத இவர் தயாராக இல்லை . அந்த அளவிற்கு இவரின் தேசபக்தி உயர்வானதாக இருந்தது.

உணர்வுப்பூர்வமான ஒருமைப்பாட்டையே உண்மையான இலட்சியமாகக் கொண்டவர்களுக்கும், இந்திய விடுதலைக்கு ஒரு மனிதநேயச் சமூகப் பொருளாதார உள்ளடக்கம் தந்தவர்களுக்கும் ஜோதிராவின் வாழ்க்கை நிச்சயம் எழுச்சியைத் தரும்.

தனஞ்செய் கீர்

 

தொடர்புடைய மற்ற பதிவுகள்:

மகாத்மா ஜோதிராவ் புலே - உள்ளடக்கம்

Previous article திராவிடர் இயக்கப் பார்வையில் பாரதியார் - ஆசிரியர் குறிப்பு