மானுடம் வெல்லும்
எல்லா நெருப்பும் சுடும்
ஆங்கிலேயர்கள் இந்தியாவில் காலூன்றி ஆதிக்க சக்தியாக வளர்ந்த காலத்தில், பிரஞ்சுக்காரர்களும் இங்கே பல பகுதிகளில் அதிகாரம் செலுத்துபவர்களாகத் தங்களை வளர்த்துக் கொண் டார்கள். 1673 பிப்ரவரி 4 ஆம் நாள், முதல் பிரஞ்ச் வணிகன், புதுச்சேரி மண்ணில் காலடி வைத்தான். ஒரு கட்டத்தில், தமிழகத்தின் ஒரு பகுதியாக இருந்த புதுச்சேரி, மலையாளப் பகுதியான மாகி, ஆந்திரப் பகுதியான ஏனாம், வங்காளப் பகுதி யான சந்திர நாகூர் ஆகியவை பிரஞ்சுக்காரர்கள் அதிகாரம் செலுத்தும் பகுதிகளாக மாறின. ஆங்கிலேயர்களின் நேரிடையான ' ஆட்சி, 1947 இல் முடிவுக்கு வந்தது. அடம்பிடித்து பிரஞ்சுக் காரர்களை, வீரம் செறிந்த விடுதலைப் போராட்டத்தின் மூலம், புதுச்சேரி மக்கள் 1954 ஆம் ஆண்டு நவம்பர் முதல் தேதி, வங்கக் கடலில் வீசி எறிந்தார்கள்.
சுமார் 300 ஆண்டு காலம், பிரஞ்ச் ஆதிக்கத்தின் கீழ் நாங்கள் (புதுச்சேரிக்காரர்கள்) இருந்தோம். நிறைய இழந்தோம். நிறைய போராடினோம். நிறைய அனுபவம் பெற்றோம். ஆதிக்க சக்தி களிடம் இருந்து நிறைய கற்கவும் செய்தோம். பலர் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். ஆங்கிலேயர்களை விடவும் பிரஞ்சுக்காரர்கள் சற்று மேலானவர்கள் இல்லையோ? கலை, பண்பாடு அறிந்தவர் களாயிற்றே? ஆதிக்கக் கொடுமை, ஆங்கிலேயர்களை விடவும் . குறைவாக இருந்திருக்குமே?
இல்லை. ஆதிக்கங்கள் எந்தப் பெயரில் வந்தாலும், ஆதிக்கமே ஆகும். இங்கிலாந்து நெருப்பு, பிரான்சின் நெருப்பு இரண்டுமே சுடும். ஆதிக்கங்கள், ஆதிக்கம் செய்யப்பட்ட நாட்டுக்கும் மக்களுக் கும் எதிராகவே இயங்கும். எல்லா ஆதிக்க சக்திகளும் சுதேசிப் பண்பாட்டையும், நாகரிகத்தையும் அழிக்கவே துணை போகும். பிரான்சில் இருந்துதானே சமத்துவம், சகோதரத்துவம், சகவாழ்வு போன்ற மானுட குலத்தின் ஒப்பற்ற சிந்தனைகள் அரசியல் வடிவெடுத்தன என்று நீங்கள் கேட்கலாம்.
உண்மைதான். துரதிருஷ்டம் என்னவென்றால், அந்த மூன்று அற்புதக் கோட்பாடுகளைப் பிரஞ்சுக்காரர்கள் தங்கள் நாட்டிலேயே பெட்டியில் வைத்துப் பூட்டிவிட்டே, சாவியை இடுப்பில் சொருகிக் கொண்டே , கப்பல் ஏறினார்கள். பிரஞ்சு அரசியலாளர்கள், ஆட்சி யாளர்கள் தங்கள் புகழ் பெற்ற, பிரஞ்சுப் புரட்சியின் (1789) பெறும் பேறான அந்த மூன்று மானுடப் பிரகடனங்களைத் தங்கள் காலனிகளில் அமல்படுத்தியதே இல்லை . உலக வரலாறும் இதுதான்.
காலனியம், அடிமைப்படுத்தப்பட்ட தேசத்தின், நாட்டின் பண்பாடு பற்றியே கவலைப்படுகிறது. எல்லா இனமும், அதற் கென்றே சில விழுமியங்களும் பண்பாட்டுச் சிறப்பையும் கொண்டே இருக்கின்றன. அந்தப் பண்பாட்டின் இருப்புகளில் இருந்தே காலனிய எதிர்ப்பு விதை ஒளிந்திருக்கிறது. அது பற்றியே காலனியம் அஞ்சுகிறது. காலனியம் எந்த நாட்டில் கால் வைத்தாலும், மூன்று வகையான மக்கள் உருவாகிறார்கள் அல்லது உருவாக்கப்படு கிறார்கள், என்கிறார் ஃபனான்.
முதல் வகையினர் பிழைக்கத் தெரிந்தவர்கள். காலனியம் பற்றிய இரண்டாம் அல்லது மூன்றாம் தலைமுறை, காலனியத்தின் மொழியைக் கற்கிறது. உத்தியோக பீடத்தில், ஆட்சியாளர் பக்கத்தில் அமர்வதில் சொர்க்க சுகம் காண்கிறது. ஆட்சியாளர் தருகிற பட்டங்கள், கெளரவங்களைப் பெறுகிறது அல்லது வாங்குகிறது. தன் வாழ்க்கையைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறது. இந்த வர்க்கத்தி லிருந்துதான் அபாயகரமான அறிவாளிகள் உருவாகிறார்கள். ஒரு சமூகம் தோற்றுவிக்கும் மோசமான ஈனர்கள் இந்த அறிவாளிகள் அல்லது எழுத்தாளர்கள்தான். இவர்கள் சுதந்திர சக்திகளை இழிவுபடுத்துவார்கள் அல்லது பலகீனப்படுத்துவார்கள்; அல்லது காட்டிக் கொடுப்பார்கள். சச்சிதானந்தன் சுகிர்தராஜாவின் (பண் பாட்டுப் பொற்கனிகள்) நூலில் ஓர் அழகான உதாரணம் தரப் படுகிறது. குருகுகதாச பிள்ளை எழுதிய வரலாற்றில் கும்பினியாரை எதிர்த்த கட்டபொம்மனையும் புலித்தேவனையும் ராஜதுரோகிகள் என்கிறார். ஆஷ் என்கிறவனைச் சுட்ட வாஞ்சிநாதனை 'பாதகன்' என்கிறார். வ.உ.சி. கைதை எதிர்த்துத் திரண்ட மக்களை நோக்கித் துப்பாக்கிச் சூடு நிகழ்த்திய கொலைகாரர்களை நியாயம்' என்கிறார். ஆங்கிலேய ஆட்சி நிலைத்து நீடூழி வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறது, அவருடைய புத்தகம். பிரஞ்சு அரசு பாடப் புத்தகங்களில் ராஜாவை வாழ்த்தும் பகுதியை மாணவர்கள் படித்தார்கள்.
காலனியம், அதன் கர்ப்பத்துக்குள்ளேயே அதன் எதிரிகளை வைத்திருந்து, காலம் கனியும்போது பிரசவிக்கிறது. ஒரு சிறு பகுதி மக்கள் சர்வபரித் தியாகங்கள் செய்து, விடுதலைப் போராட்டங் களை முன் எடுக்கிறார்கள். அவர்களே மனித குலத்துக்கு வெளிச்சம் தருபவர்களாக இருக்கிறார்கள்.
புதுச்சேரி விடுதலை பெற்று, பிரஞ்சுக் கொடி கீழே இறக்கப்பட்டு இந்தியத் தேசியக் கொடி மேலேறிய அந்தக் கணத்தில், அந்த நிகழ்வில் நான் பார்வையாளனாக இருந்தேன். அப்பாவுடன், அவர் வெகு காலம் வைத்திருந்த பிரஞ்சு சைக்கிளில் ஏறிக்கொண்டு நானும் போனேன். நான் ஒன்பது வயது சிறுவன். என்னைச் சுற்றி நின்ற பல பெரியவர்கள் கண்ணீரை நான் பார்த்தேன். என் அப்பாவின் கண்களிலும், கண்ணீரின் அர்த்தம் அப்போது எனக்கு விளங்கவில்லை. ஏதோ ஒரு பிறந்த நாளின்போது அப்பா, எனக்குப் பிறந்த நாள் பரிசாக ஆனந்த ரங்கரின் டயரிக்குறிப்புகள் - புத்தகங்களைப் பரிசாகத் தந்தார். முதல் வாசிப்பில் அவை எனக்குப் புரியவில்லை . பிறகு, என் வாசிப்பு வளர்ந்தது. உலக இலக்கியங்கள், விடுதலை இயக்கங்கள், அவை பற்றிய வரலாற்று நூல்கள் என்று என் படிப்பு வளர்ச்சியுற்றபோது, எனக்கு என் மண்ணின் வரலாற்றின் மேல் கவனம் குவிந்தது. புதுச்சேரி வரலாறு, தமிழக வரலாறு, மராட்டிய வரலாறு, டில்லி சுல்தானிய வரலாறு, பிரான்ஸ் தேச வரலாறு என்று பல வரலாறுகள் கற்ற பிறகே, நான் எழுதத் தொடங்கினேன்.
கல்லின் அற்புதங்கள் என்று சொல்லத்தக்க சிற்பங்கள் உருவான இடம் தமிழ்நாடு. அந்த நாடு தெருமுனைகள் தோறும் மிக ஆபாச - சிலைகளை - எந்தக் கலைச் சிறப்பும் அற்ற சிலை களை - எப்படிச் சகித்துக் கொள்கிறது? மிகச் சிறந்த இலக்கியப் புனைவுகள், இசை மாலைகள், வாழ்க்கையிலிருந்து வடிவம் கொண்ட விழுமியங்கள், நடனங்கள், நாட்டியங்கள், கூத்துகள் எல்லாம் கொண்ட நாடு தமிழ்நாடு. ஆனால் மிக இழிந்த ரசனை யும், மிக இழிந்த நேசிப்பும், மிக இழிந்த அரசியலையும் கொண்டவர் களாக, மனிதப்பகை கொண்டவர்களாக, குழந்தைகள் பெண்கள் மேல் வன்முறை பிரயோகிப்பவர்களாக, மதக் காழ்ப்பு மிக்கவர் களாக, சாதி இன வெறி கொண்டலையும் பைத்தியக்காரர்களாக, தமிழ் இனத்தின் வாழ்க்கைக் கண்ணோட்டம் எப்படி சரிந்து போக முடிகிறது?
வரலாறுதான் இதற்கு விடை அளிக்கும் என்று நம்புகிறேன். வரலாற்றில்தான் விடை தேடுகிறேன்.
இன்றைய மதக் கலவரத்தில் 40 இந்துக்களும் 50 முஸ்லிம் களும் கொல்லப்பட்டார்கள் என்ற செய்திக்கு எதிராக சதத் ஹசன் மண்ட்டோ எழுதியது நினைவுக்கு வருகிறது:
'முட்டாள்களே! இன்றைய கலவரத்தில் 90 மனிதர்கள் கொல்லப்பட்டார்கள் என்று சொல்லுங்கள்.'
நண்பர் யுகனுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
இவ்வளவு அழகாக இந்தப் புத்தகத்தைக் கொண்டு வந்தமைக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கும், அறியாமையிலிருந்து ஞானத்துக்கும் நாம் செல்வோமாகுக.
பிரபஞ்சன்
25.3.2013
சென்னை
(நற்றிணையின் மகத்தான நாவல் வரிசைக்காக எழுதப்பட்ட முன்னுரை)