கேரளாவில் பெரியார்
கேரளாவில் பெரியார் என்றதும் வைக்கம் போராட்டமும் வைக்கம் வீரர் என்று பெரியார் அழைக்கப்படுவதும் நினைவுக்கு வரும். கேரளாவில் பெரியாரின் பங்களிப்பு வைக்கம் போராட்டத்துடன் மட்டும் நிறைவு பெற்றுவிடவில்லை. கேரளாவின் அன்றைய பகுதியான திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு உட்பட்ட சுசீந்திரத்தில் நடந்த கோவில் நுழைவுப் போராட்டத்திலும் பெரியாரின் தலையீடு இருந்தது. சுசீந்திரம் சத்தியாக்கிரத்தையும் வெற்றிகரமாக நடத்தி முடிக்க பெரியார் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார்.
பாலக்காடு அருகிலுள்ள கல்பாத்தி என்ற ஊரில் பொதுத்தெருவில் தாழ்த்தப்பட்ட மக்கள் நடப்பதற்கு இருந்த தடைகளை அகற்றி பொது உரிமையை அனைத்து சமூகங்களுக்கும் பொதுவாக்கும் போராட்டத்திற்கு ஆதரவாக இருந்தார்.
கேரள மக்களின் சமூக, அரசியல் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளில் பார்ப்பன ஆதிக்கத்தையும் ஜாதி இந்துக்களின் ஜாதிக் கொடுமைகளையும் எதிர்த்து குரலெழுப்பி வந்தார்.
1924 ஆம் ஆண்டு நடைபெற்ற வைக்கம் போராட்டத்திற்குப் பிறகு 1937ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டு அரசியலோடு கேரள மாநிலத்தின் அரசியலையும் பேசி வந்தார். கேரளாவையும் தன்னுடைய செயல்பாடுகளின் எல்லையாகக் கொண்டிருந்தார்.
நான் ஓர் இந்துவாகச் சாக மாட்டேன், இந்து மதத்தை விட்டு வெளியேறி விடுவேன் என்று 1935ஆம் ஆண்டு டாக்டர் அம்பேத்கர் அறிவித்தபோது, அண்ணலின் முடிவிற்கு ஆதரவு தெரிவித்து இருக்கு அனுப்பிய தந்தியில்,
தாங்கள் புத்திசாலித்தனமான முடிவுக்கு வந்தது பற்றி வாழ்த்து கூறுகின்றேன். தங்களது முடிவை எக்காரணத்தாலும் மாற்ற வேண்டாம் என்று கூறிவிட்டு மலையாளம் உட்பட தென்னிந்தியா தங்களது முடிவுக்கு பலத்த ஆதரவு அளிக்கும் என்று பெரியார் குறிப்பிட்டிருக்கிறார்.
தமிழ்நாடு மட்டுமின்றி கேரளாவும் தன் செயல்பாட்டுத் தளம் என்பதை இதன்மூலம் தந்தை பெரியார் வெளிப்படுத்துகிறார்.
கேரளத்தில் நடந்த பொதுக்கூட்டங்கள். மாநாடுகளில் பெரியார் பங்கெடுத்துக் கொண்டு அம்மக்களிடம் செய்த சுயமரியாதைப் பிரச்சாரத்தையும் அப்பிரச்சாரத்தின் விளைவாக நிகழ்ந்த மாற்றங்கள் குறித்தும் குடி அரசு இதழில் வெளியான செய்திகளைத் தொகுத்து வெளியிடுகிறோம்.
தொடர்புடைய மற்ற பதிவுகள்: