Skip to content
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000

கலைஞர் : சமரசமில்லா சமத்துவப் போராளி - முன்னுரை

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
முன்னுரை

கலைஞர் என்னும் மகத்தான ஆளுமை குறித்து எனது இனிய நண்பர் ரவிக்குமார் அவர்கள் உருவாக்கியுள்ள இந்த நூலுக்கு முன்னுரை ஒன்றினை நான் வழங்கிட வேண்டுமென அவர் தெரிவித்தபோது நான் மலைத்துப் போனேன். தலைவர் கலைஞர் அவர்களது வரிகளையே கடன் வாங்கிச் சொல்லவேண்டுமென்றால், “இமயத்துக்குப் பொன்னாடை போர்த்தும் முயற்சி” இது என்பதை நான் நன்கறிவேன். அவரது பேரன்பின் காரணமாகவும் இந்த நூலில் காணப்படும் பல கட்டுரைகள் மின்னம்பலம்.காம் தளத்தில் வெளிவந்தபோது அவற்றைப் படித்துப் பகிர்ந்துகொண்டவன் என்ற முறையிலும், அவர் குறிப்பிடும் பல்வேறு சட்டபேரவை நிகழ்வுகளை நானும் உடனிருந்து காணக்கூடிய வாய்ப்பினைப் பெற்றவன் என்ற வகையிலும் இந்த முன்னுரையை ஒருவாறாக எழுதத் துணிந்தேன்.

தமிழ்ச் சமுதாயத்திற்கு தலைவர் கலைஞர் அவர்கள் என்ன செய்துவிட்டார் என்று கேட்பது இப்போதெல்லாம் சிலருக்கு வாடிக்கையாகப் போய்விட்ட நிலையில் தமிழுக்கும் தமிழர்தம் உயர்வுக்கும் அவர் என்னதான் செய்யவில்லை என்ற மறு வினாவினை பதிலாகச் சொல்லும் நூலாகவே இதை நான் கண்கிறேன். தலைவர் கலைஞர் அவர்கள் தனது எண்பத்து நான்கு ஆண்டுகாலப் பொது வாழ்வில் இரண்டு நூற்றாண்டுகளை சந்தித்து அரசியல், கலை, இலக்கிய, சமூகப் பண்பாட்டுத் தளங்களில் பல்வேறு சாதனைகளைப் புரிந்தவர். அவற்றில் மிக முக்கியமானவையாகத் தான் கண்டவற்றை நண்பர் ரவிக்குமார் சிறப்பாகத் தொகுத்து வழங்கியிருக்கின்றார்.

2006ஆம் ஆண்டு ரவிக்குமார் அவர்கள் முதன்முறையாக சட்டப்பேரவைக்குள் அடியெடுத்து வைக்கும்போது தலைவர் கலைஞர் அவர்கள் பேரவையில் தனது பொன்விழாவை நெருங்கிக்கொண்டிருந்தார். இருப்பினும் ரவிக்குமார் பேசுகின்றபோதெல்லாம் அவரது உரையினை மிகவும் கூர்ந்து கவனிப்பதோடு, சில சமயம் தனது மேசைமீது இருக்கும் தாளில் முக்கியமான விஷயங்களை தலைவர் கலைஞர் அவர்கள் குறித்துக்கொள்வதை நான் கண்டிருக்கிறேன். அதற்குக் காரணம் அவரது பேச்சில் இருக்கும் கருத்துச் செறிவும் அதை அவர் அவை முன்னர் வைக்கும் பாங்கும் என்பதை நான் குறிப்பிட்டே ஆகவேண்டும். ஆர்ப்பாட்டமில்லாத, அமைதியான, தெள்ளிய நீரோடை போன்ற தனது பேச்சில் ஆதாரங்களையும் புள்ளி விபரங்களையும் தேவைப்பட்ட இடங்களில் தெரிவிப்பதுடன் அடித்தட்டு மக்களின் அவலத்தை உள்ளது உள்ளபடியே படம் பிடித்துக் காட்டுவதும் நண்பர் ரவிக்குமாரிடம் கவனிக்கத்தக்க அம்சங்களாகும். கூர்த்த மதி படைத்த கலைஞரின் கவனத்தை ஈர்க்க இதுவே போதுமானதாக இருந்தது.

ஈழத் தமிழ் அகதிகளின் நிலைகுறித்து அவரது ஆனந்தவிகடன் கட்டுரைக்குப் பிறகு அன்றைக்கு அமைச்சர்களாக இருந்த எங்களையெல்லாம் உடனடியாக அந்த முகாம்களைப் பார்வையிட்டு அறிக்கை தரச் சொல்லிய தலைவர் அவர்கள் பேரவையிலேயே நண்பர் ரவிக்குமாரின் பல்வேறு கோரிக்கை களை ஏற்று அறிவிப்புச்செய்து ஆணையாக்கி நடைமுறைப் படுத்தியதை மறக்க முடியாது.

இந்நூலில் குறிப்பிடப்படும் செய்திகள் தலைவர் கலைஞர் அவர்களின் பன்முக ஆற்றலை ஒவ்வொரு தளத்திலும் வெளிப் படுத்துகின்றன. குறிப்பாக திருக்குறளுக்கு அவர் எழுதிய உரையில் "அறவாழி அந்தணன்” எனும் சொல்லுக்கு "சான்றோர்” என உரை பகர்ந்திருப்பது பற்றிச் சொல்லும் ரவிக்குமார் அச்சொல்லுக்கு பரிமேலழகரும், அயோத்திதாசப் பண்டிதரும், மு.வரதராசனாரும் எவ்வாறெல்லாம் பொருள் கொண்டிருக்கிறார்கள் என்பதை ஒப்புநோக்கி இந்தச் சொல்லுக்கு "அறிவு நிலையில் நின்ற சான்றோர்” என்று பொருளுரைக்க முனைந்தது தலைவர் கலைஞர் ஒருவரே என்ற கருத்தாழம் மிக்க செய்தியைச் சொல்லுகின்றார்.

உள்ளாட்சித் தேர்தலை நடத்தவே முடியாது என்றெண்ணி இருந்த பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், கொட்டக் காச்சியேந்தல் ஊராட்சிகளில் வெற்றிகரமாகத் தேர்தலை நடத்தி தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினரை ஊராட்சிமன்றத் தலைவர் களாகத் தேர்ந்தெடுக்கச் செய்ததன் மூலம் சமத்துவம் என்ற கோட்பாட்டில் சமரசம் செய்துகொள்ளாமல் ஜன நாயகத்தைக் காத்த பெருமை கலைஞருக்கு உண்டு என்பதையும், அது தமிழகத்தின் சமூகநீதி வரலாற்றில் பொன்னெழுத்துக்களில் பொறிக்கப்படவேண்டிய செய்தி என்பதையும் பதிவு செய்திருக்கின்றார்.

இப்படி தொடர்ந்து சொல்லக்கூடிய விஷயங்கள் இந்த நூலில் ஏராளம். புதிரை வண்ணார் நலவாரியம், நரிக்குறவர் நலவாரியம், கலைஞர் வீடு வழங்கும் திட்டம், மருத்துவ காப்பீட்டுத் திட்டம் என கலைஞர் அரசின் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களுக்குப் பின்னால் நண்பர் ரவிக்குமாரின் அழுத்தமான பங்களிப்பு இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. மகிழ்ச்சிக்குரிய செய்தி.

மாநில சுயாட்சி போன்ற நுட்பமான விஷயங்களில் காணப்படும் ஆழ்ந்த கருத்துகளையும், சட்ட மேலவையில் இட ஒதுக்கீடு குறித்த அரசியல் அமைப்புச் சட்ட சிக்கல்களையும் எளிதாகப் புரியும் வகையில் ரவிக்குமார் எடுத்துரைத்துள்ளது தனிச்சிறப்பானதொன்று. இவ்வளவு காத்திரமான விஷயங் களுக்கு நடுவில் "இப்போதெல்லாம் நாட்டில் நரிகள் மனிதர் களாகிவிட்டனவோ” என வினவும் ரவிக்குமாரின் நகைச்சுவை உணர்வு மெலிதான புன்னகையை வரவழைக்கத் தவறவில்லை.

தலைவர் கலைஞர் குறித்த எவ்வளவோ புதிய செய்திகளைச் சொல்லும் இந்நூலினைப் படிக்கின்ற ஒவ்வொருவரின் மனதிலும் தேக்கிவைத்துக்கொள்ள வேண்டியவை பின்வரும் வைர வரிகளாகும்:

"அவரது கருத்தியலின் ஆழத்தில் வகுப்புவாதத்தோடு சமரசம் செய்து கொள்ளாத பகுத்தறிவு கங்கு கனன்று கொண்டிருப்பதை எனக்குக் காட்டியது. அவரது பேச்சில் எரிமலை உமிழ்வாக அவ்வப்போது அந்தக் கனல் வந்து விழுவதுண்டு. அதனால் அவர் அரசியல் தளத்தில் எதிர்கொண்டுவரும் நெருக்கடிகள் ஏராளம். ஆனால் அந்த இடையூறுகளையெல்லாம் தாண்டி கலைஞரைத் தமிழின் மிக முக்கியமான ஆளுமைகளில் ஒருவராய் அடையாளப்படுத்திக்கொண்டிருப்பது அந்த அடியாழத்து நெருப்புதான்."

அந்த நெருப்புதான் தலைவர் கலைஞரின் போர்க்குரல் ஒலிக்காதா என்ற ஏக்கத்தையும் எதிர்பார்ப்பையும் மீண்டும் மீண்டும் நம்முள் எழுப்புகின்றது.

தலைவர் கலைஞர் அவர்களுக்கு எனது வணக்கமும், நண்பர் ரவிக்குமார் அவர்களுக்கு எனது வாழ்த்துகளும்!

தங்கம் தென்னரசு

மல்லாங்கிணர், 29.05.2017

 

தொடர்புடைய மற்ற பதிவுகள்:

Previous article திராவிடர் இயக்கப் பார்வையில் பாரதியார் - ஆசிரியர் குறிப்பு