கலைஞர் : சமரசமில்லா சமத்துவப் போராளி - சில வார்த்தைகள்
திமுக தலைவர் கலைஞர் அவர்கள் உடல் "நலம் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார் என்ற செய்தியையும் அவர் காரில் அழைத்துச் செல்லப்படும் புகைப்படத்தையும் பார்த்தபின்னர் அன்றிரவு முழுவதும் என்னால் உறங்கமுடியவில்லை. நானும் எமது தலைவரும் மருத்துவமனைக்குச் சென்று அவரது உடல் நலம் குறித்து விசாரித்தோம். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்ததால் அவரை நேரில் பார்க்க இயலவில்லை. அதனிடையே அவரது உடல் நலம் குறித்து ஏராளமான வதந்திகள் பரப்பப்பட்டன. அப்போது சில பத்திரிகையாளர்கள் வெளிப்படுத்திய கருத்துகளில் தொனித்த காழ்ப்புணர்வு, கலைஞரின் பணி இன்னும் தேவைப்படுகிறது என்பதை எனக்கு உணர்த்தியது.
தலைவர் கலைஞரை சந்த்துவிட்டு வந்த அனுபவத்தை ஒரு கட்டுரையாக எழுதித் தருமாறு மின்னம்பலம் திரு காமராஜ் அவர்கள் கேட்டார். அந்தக் கட்டுரையை எழுதிய நேரத்தில் கலைஞர் என்னும் ஆளுமையில் நான் அறிந்த பரிமாணங்கள் சிலவற்றை சட்டமன்ற உறுப்பினராகப் பணி யாற்றிய எனது அனுபவத்தின் அடிப்படையில் எழுதவேண்டும் என எனக்குத் தோன்றியது.
இந்த நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளில் சில மின்னம்பலம் தளத்தில் வெளியானவை. அவற்றை வெளியிட்ட திரு. காமராஜ் அவர்களுக்கு நன்றி. அந்தக் கட்டுரைகளைப் படித்துவிட்டு தனது கருத்துகளை எனக்கு அவ்வப்போது தெரிவித்தவர் முன்னாள் அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்கள். அவர் இந்த நூலுக்கு முன்னுரை ஒன்றையும் தந்திருக்கிறார்.
நான் சார்ந்திருக்கும் கட்சி வேறு, எனது கருத்தியல் வேறு என்றபோதிலும் பாகுபாடுகளுக்கு எதிராக அவருள் குமைந்துகொண்டிருக்கும் உணர்வுகள் எனக்கு நெருக்கமானவை.
இது கலைஞரைப் பற்றிய ஆய்வு நூல் அல்ல, தமிழக அரசியலில் முக்கியமான ஆளுமையாகத் திகழும் அவரது நற்பணிகளில் எனக்குத் தெரிந்த சிலவற்றையேனும் பதிவு செய்துவிடவேண்டும் என்ற ஆசையின் வெளிப்பாடு.
ரவிக்குமார்
23.05.201