காவிரி - அரசியலும் வரலாறும்
வேறெந்த அடைமொழியைக் காட்டிலும், 'தமிழ்நாட்டின் உயிர்நாடி ' என்பதுதான் காவிரிக்குப் பொருத்தமானது. காரணம், காவிரியை நம்பியே தமிழகத்தின் பெரும்பகுதி விவசாயம் இருக்கிறது. அதன் வழியே கிடைக்கும் அரிசி உள்ளிட்ட தானியங்களை நம்பியே தமிழக மக்கள் இருக்கிறார்கள். தமிழகத்தின் குடிநீர்த் தேவையைப் பெருமளவு பூர்த்தி செய்வதும் காவிரிதான். அத்தகைய உயிர்நாடிக்கு ஆபத்து வரும்போது தமிழகம் தவிக்கிறது, பதறுகிறது. பிரச்னைகள் தீவிரமடையும்போது போராட்டம் வெடிக்கிறது.
சிறு பொறியாக எழுந்து, பெரு நெருப்பாக வெடிப்பதும், மழை வந்ததும் அடங்குவதும், வறட்சி வந்ததும் வெகுண்டெழுவதும் அரை நூற்றாண்டாக அரங்கேறிவரும் அவல நிகழ்வுகள். இடைப் பட்ட காலங்களில் எத்தனையெத்தனைப் போராட்டங்கள், பேச்சு வார்த்தைகள், ஒப்பந்தங்கள், வழக்குகள், தீர்ப்புகள், ஆணையங்கள், தீர்ப்பாயங்கள்! எல்லாம் இருந்தும் எந்தத் தீர்வும் இது வரை எட்டப்படவில்லை .
இத்தனைக்கும் இந்தியாவின் சர்வ வல்லமை பொருந்திய ஆட்சியாளர் தொடங்கி நான்கு மாநிலங்களின் மக்கள் சக்தி மிகுந்த தலைவர்கள் வரை பலரும் கையாண்ட பிரச்னை இது. குறிப்பாக, முப்பதாண்டுகளுக்கும் மேலாக உச்ச நீதிமன்றத்தின் நேரடி கவனத்தில் இருக்கும் பிரச்னை. ஆனாலும், தீர்வுக்கான முகாந்திரம் இன்றளவும் தென்படாதது ஏன்? இந்தக் கேள்விக்கான விடைதேடும் முயற்சியே இந்தப் புத்தகம்.
தமிழக மக்களின் உணர்வோடு கலந்திருக்கும் பிரச்னைகள் குறித்த விரிவான பதிவுகளைச் செய்யவேண்டும் என்பது என்னுடைய
விருப்பம். காவிரி டெல்டா பகுதியைச் சேர்ந்தவன் என்ற முறையில் எனது முதல் தேர்வும் காவிரி பிரச்னை குறித்த புத்தகம்தான். நான் பத்தாம் வகுப்பு படித்த போது, காவிரிப் பிரச்னைக்காக அன்றைய முதல்வர் ஜெயலலிதா உண்ணாவிரதம் இருந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காவிரி குறித்து என் மனத்தில் பதிந்த முதல் செய்தி அதுவே. இதழியல் துறைக்குள் வந்த பிறகு காவிரி தொடர்பான எந்தவொரு செய்தி, கட்டுரை, புத்தகம் கிடைத்தாலும், அதைச் சேகரிப்பதையும் நகல் எடுத்துப் பாதுகாப்பதையும் வழக்கம் மாக்கிக் கொண்டேன்.
திராவிட இயக்க வரலாறு, தமிழக அரசியல் வரலாறு உள்ளிட்ட எனது முந்தைய புத்தகங்களுக்கான தகவல் சேகரிப்பில் ஈடுபட்டபோது காவிரி குறித்த ஏராளமான குறிப்புகள் கிடைத்தன. மூத்த அரசியல் தலைவர்கள், ஓய்வு பெற்ற அதிகாரிகளோடு உரையாடிச் சேகரித்த குறிப்புகள் பலவும் ஏராளமான செய்திகளைச் சுமந்தபடி காத்திருந் தன. காவிரி ஒப்பந்த நகல்களும் துறைசார் நிபுணர்கள் எழுதிய கட்டுரைகளும் என்னுடைய சேகரத்தில் சேர்ந்தபடி இருந்தன. காவிரி பிரச்னை வேகமெடுக்கும்போதெல்லாம் புத்தகத்தை எழுத நினைப்பேன். குறிப்பாக, காவிரி நதிநீர்த் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு வெளியானபோது எழுத விரும்பினேன். ஆனால் கைவசம் இருக்கும் தகவல்கள், அவற்றின் போதாமை, மேலதிக விவரங்களின் தேவை ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு, எழுதுவதைத் தவிர்த்து, தேடலைத் தீவிரப்படுத்தினேன். இணையத்தின் துணையோடும், நண்பர்களின் உதவியோடும் ' ஏராளமான கட்டுரைகளும் புத்தகங்களும் கிடைத்தன.
கன்னிமரா நூலகம், பெரியார் திடல் ஆய்வு நூலகம், தேவேநேயப் பாவாணர் நூலகம், ரோஜா முத்தையா நூலகம், அண்ணா அறிவாலயம் பேராசிரியர் ஆய்வு நூலகம், திருவல்லிக்கேணி கஸ்தூரி சீனிவாசன் நூலகம் என்று எங்கெல்லாம் செல்கிறேனோ அங்கெல்லாம் காவிரி குறித்த குறிப்புகளை எடுக்கத் தவறியதில்லை. அவற்றை வாசிக்க, வாசிக்க துணைக்கேள்விகள் எழும்புவதையும் தவிர்க்க முடியவில்லை .
காவிரி நதிநீர்த் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியான போதுதான் புத்தகத்துக்கான அத்தியாயக் கட்டமைப்பை இறுதி செய்தேன். அந்தச் சமயத்தில்தான் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக உச்சநீதிமன்றத்துக்கும் மத்திய அரசுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் வெடித்தன. அப்போது தி இந்து தமிழ் நாளிதழில் 'காவிரி மேலாண்மை வாரியம் : அதிகாரங்களும் போதாமைகளும் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினேன்.
அந்தக் கட்டுரைக்கு வந்த வரவேற்பும் எதிர்வினையும் தேடல் பாதையைத் துவக்கமாக்கின. தொலைக்காட்சி விவாதங்களில் எனது கட்டுரை மேற்கோள் காட்டப்பட்டது. காவிரி குறித்து கட்டுரை எழுதுமாறு தமிழின் முன்னணிப் பத்திரிகைகள் கோரின. வெவ்வேறு கோணங்களில் கட்டுரைகள் எழுதிக்கொடுத்தேன். தொலைக்காட்சி நெறியாளர்கள் தொடங்கி சக கருத்தாளர்கள் வரை எழுப்புகின்ற காவிரி தொடர்பான கேள்விகளை எல்லாம் பார்த்தபோது, காவிரி அரசியல் குறித்த புத்தகம் வெளிவந்தால், விவாதங்கள் கூர்மை பெறும் என்று நினைத்தேன்.
அப்போதுதான் நண்பர் மருதனிடம் இருந்து தொலைபேசி அழைப்பு. காவிரி குறித்த புத்தகத்தைக் கிழக்கு பதிப்பகத்துக்காக எழுத வேண்டும் என்றார். இந்தியத் தேர்தல் வரலாறு, இந்துத்வ இயக்க வரலாறு, கச்சத்தீவு, மது விலக்கு ஆகிய என்னுடைய சமீபத்திய நான்கு நூல்களும் சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸிலிருந்து வெளியாகியிருந்தன. தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு கிழக்கு பதிப்பகத்தில் இருந்து அழைப்பு. சம்மதித்தேன்.
அதற்குப் பரிசாகவோ, என்னவோ, நான் நீண்ட நாள்களாகத் தேடிக் கொண்டிருந்த புத்தகத்தின் நகல் ஒன்றை ஃப்ரண்ட்லைன் ஆசிரியர் நண்பர் விஜய சங்கரிடமிருந்து பெற்றுக்கொடுத்தார் நண்பர் மருதன். அந்தப் புத்தகம், எஸ்.குகன் எழுதிய The Cauvery Water Dispute: Towards Conciliation. உற்சாகத்தோடு எழுதத் தொடங்கினேன்,
விவசாயிகளின் வாழ்வாதாரம் என்பதைத் தாண்டி, ஆட்சியாளர்களின் ஆதாய அரசியல், அரசியல் கட்சிகளின் வாக்கு வங்கி அரசியல், மத்திய - மாநில உறவுச் சிக்கல்கள், ஒப்பந்த உள்ளரசியல், சட்ட முறைமை சார்ந்த சிக்கல்கள், நீதிமன்றத் தீர்ப்புகள், தீர்ப்பாயங்களின் அதிகார வரம்புகள், ஆட்சிமன்றம் - நீதி மன்றம் இடையிலான அதிகாரப் போட்டி என்று பல நுட்பமான அம்சங்களைக் கொண்டது காவிரிப் பிரச்னை. ஆகவே, பிரச்னையின் அனைத்துப் பரிமாணங் களையும் ஆய்வு செய்து, சிக்கலான பிரச்னை குறித்த தெளிவான பார்வையை வாசகர்கள் முன்னால் வைப்பதென்றுத் தீர்மானித்தேன்.
காவிரிப் பிரச்னையின் தோற்றுவாய் தொடங்கி நேற்றைய நிகழ்வுகள் வரை அனைத்தையும் கவனமாக வரிசைப்படுத்தி, நுட்பமாக ஊடுருவிப் பார்த்தபோது ஒரு விஷயம் உறுதியானது. அனைத்துக்கும் காரணம் கர்நாடகம் மட்டுமே என்று சொல்வது பிரச்னையைக் குறுக்கி அணுகும் போக்கு. உடைத்துச் சொல்வதென்றால், இயலாமையால் எழும் வீரியமற்ற குற்றச்சாட்டு அது.
உண்மையில், காவிரிப் பிரச்னை என்பது தமிழகத்தின் மீது நடத்தப்படும் நான்முனைத் தாக்குதல். துளியும் மிகையில்லை. சாதகமற்ற இயற்கை அமைப்பு, உச்ச நீதிமன்றமே உத்தரவிட்டாலும், ஒரு சொட்டுத் தண்ணீர் கூடத் தரமாட்டோம் என்று முரண்டு பிடிக்கும் கர்நாடக அரசு, கர்நாடக அரசின் நடவடிக்கைகளைப் பெரும்பாலும் மெளனமாகக் கடக்கும் இந்திய அரசு, ஒற்றுமையற்ற குரலையே பெரும்பாலும் ஓங்கி ஒலிக்கும் தமிழக அரசியல் கட்சிகள் ஆகிய நான்கு தரப்பும் ஒருங்கிணைந்து நடத்திவரும் தாக்குதல் இது.
இந்தத் தாக்குதலின் அத்தனைப் பரிமாணங்களையும் மக்கள் முன்னால் விவரித்துச் சொல்வதுதான் இந்தப் புத்தகத்தின் முதன்மை நோக்கம். என்றாலும், காவிரிப் பிரச்னையைத் தீர்க்கும் பயணத்தில் நிகழ்ந்த பொருட்படுத்தத்தக்க நல்ல நகர்வுகளைச் சுட்டிக்காட்டி, அவற்றின் பின்னணியில் இருந்தவர்களை அடையாளம் காட்டி அங்கீகரிப்பதில் எவ்விதத் தயக்கத்தையும் வைத்துக்கொள்ளவில்லை .
காவிரி என்றாலே வெறும் விவசாயிகள் பிரச்னை. மிஞ்சிப்போனால், டெல்டா மாவட்ட விவசாயிகள் பிரச்னை என்று நினைக்கும் பொது மக்களின் எண்ணவோட்டத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. அந்தத் தேவையைப் பூர்த்தி செய்வதில் என்னுடைய புத்தகமும் பங்களிப்பு செய்யும் என்று நம்புகிறேன். முக்கியமாக, காவிரிப் பிரச்னை குறித்த அரசியல் உரையாடல்கள் ஆக்கபூர்வமாகவும் தர்க்கபூர்வமாகவும் அமைவதற்கு என்னுடைய புத்தகம் துணைபுரிந்தால் மிகுந்த மகிழ்ச்சி.
அன்புடன்,
ஆர். முத்துக்குமார்
21 பிப்ரவரி 2017
தொடர்புடைய மற்ற பதிவுகள்: