Skip to content
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000

இந்து மதம் எங்கே போகிறது? - பதிப்புரை

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
 
பதிப்புரை

எப்போது புத்தகமாக போடப் போகிறீர்கள்?" - வாசகர்களின் தொடர்ச்சியான கேள்விகளுக்கு விடையாக இந்தப் புத்தகத்தை பெருமையோடு வெளியிடுகிறது நக்கீரன். பிறர் தொடத் தயங்கும் துறைகளை துணிச்சலாகக் கையிலெடுத்து அதிலுள்ள உண்மைகளை மக்களுக்குக் கொடுப்பதே நக்கீரனின் பணி. இந்து மதம்' எனும் பெருங்கடலிலும் அப்படித்தான் துணிச்சலுடன் இறங்கினோம்.

மதம் என்பது ஆட்சியதிகாரத்தை ஆட்டிப் படைக்கும் சக்தியாகவும், ஆட்சியதிகாரத்தை கைப்பற்றக்கூடிய அரசியல் வடிவமாகவும் உள்ள இன்றைய சூழலில்....

உண்மையான இந்து மதம் என்பது என்ன?

அதன் நோக்கங்கள் யாவை?

அது எதை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது?

என்பதை நக்கீரன் மூலமாக வெளிக் கொண்டுவந்தார் வேத மாமேதை அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்.

இந்து மதம் எனும் பெருங்கடலை சாதாரண மக்களும் பருகும் குடிநீராக மாற்றும் வல்லமை அந்த மாமேதையிடம் இருக்கிறது. 100 வயதைத் தொடும் நிலையிலும் ஞான இமயமாக அவர் எடுத்து வைத்த கருத்துகள், அவரது நினைவாற்றல், வேதங்களிலிருந்து எடுத்தாண்ட விஷயங்கள் இவை அனைத்துமே நக்கீரன் இதழில் இதனைத் தொடராகப் படித்த அனைவரையும் பிரமிக்க வைத்தன.

மத பீடங்களை உருவாக்கிக்கொண்டு மக்களை ஏமாற்றுபவர்கள், மதத்தை அரசியலாக்கி அதன் மூலம் லாபமடைபவர்கள், வர்ணாசிரமம் நீடித்தால்தான் தங்களால் வசதியாக வாழ முடியும் என நினைப்பவர்கள் இவர்களின் பிடியிலிருந்து இந்து மதத்தை மீட்டு, இந்திய அரசியல் சாசனம் வலியுறுத்தும் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இந்து மதத்தைச் சேர்ந்த அனைவரும் ஒற்றுமையாக வாழவேண்டும் என்பதை வலி யுறுத்துகிறார் வேத மாமேதை அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்.

தனது கருத்தை அவர் அழுத்தமாகப் பதிவு செய்ததற்காக, வர்ணாசிரம - மனுதர்மங்களை இன்னமும் கைவிடமுடியாத சில 'பெரிய மனிதர்கள், தாத்தாச்சாரியாரின் வீடு தேடி போய் அவரை மிரட்டினார்கள். மகாமேதையே உண்மைகளைப் போட்டு உடைக்கிறாரே என்பதால், அவர்கள் பதறினர். நக்கீரனைப் போலவே அச்சுறுத்தலுக்கு அஞ்சாத அந்த வேத மாமேதை, தன் கருத்துக்களிலிருந்து பின்வாங்கவில்லை.

அவர்களின் எதிர்ப்புகளை தனது கருத்துக்களால் உதிர வைத்தார். அவர் தனது கருத்துக்களைச் சொல்லச் சொல்ல அதனை எழுதும் பணியை மேற்கொண்டவர் நக்கீரன் உதவி ஆசிரியர் ஆரா.

பெரிய மனிதர்கள் தந்த ஒவ்வொரு நெருக்கடியின் போதும். தாத்தாச்சாரியாரை சந்தித்துப் பேசி, இடைவெளியே ஏற்படாவண்ணம் தொடரை இடம்பெறச் செய்ததில் ஆராவுக்கு பெரும்பங்கு உண்டு. இதன் முழு பெருமையும் அவரையே சாரும். அவருக்கு நக்கீரனின் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்!

வேதங்களின் உண்மை அர்த்தத்தை எல்லோரும் புரிந்து கொள்ளும் வகையில் தாத்தாச்சாரியார் விளக்கிய போது, அதற்கு உயிரோட்டமாக அமைந்தவை மாருதியின் ஓவியங்கள் வேதகாலத்தையும் இன்றைய நிலைமைகளையும் நம் கண்முன்னே நிறுத்தியது அவரது தூரிகை

நக்கீரன் வெளியீடுகள் எப்போதும் வாசகர்களின் ஆதரவுக்குரியவை. அதிலும் இந்து மதம் எங்கே போகிறது?' என்னும் இந்நூலுக்கு வாசகர்கள் கொடுத்த பேராதரவால் முதல் பதிப்பு, இரண்டாம் பதிப்பு தாண்டி... இப்போது முத்திரை பதிப்பாய் மூன்றாம் பதிப்பில் புதிய கட்டமைப்புடன் உங்கள் கைகளில் தவழவிடுகிறோம்!

 

தொடர்புடைய மற்ற பதிவுகள்:

Previous article திராவிடர் இயக்கப் பார்வையில் பாரதியார் - ஆசிரியர் குறிப்பு