Skip to content
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000

காந்தியார் கொலை அதிர்ச்சியூட்டும் தகவல்கள்

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/gandhiyar-kolai-athirchiyuttum-thagavalgal
இந்நூலைப் படிக்குமுன்...!

'தேசப்பிதா' (Father of the Nation) என்று அழைக்கப்பட்ட அண்ணல் காந்தியார் அவர்கள் 1948இல் - ''சுதந்திரம் கிடைத்த (ஆகஸ்ட் 15, 1947) சுமார் 5, மாதங்களில், சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் உலகையே அதிரச் செய்தது.

அவரைக் கொன்ற பார்ப்பன மதவெறிச் சக்திகள், மக்களிடையே அக்கொலையை வைத்தே மதக் கலவரங்களையும் தூண்டி விட்டு விஷமம் செய்ய முயற்சித்தது தமிழ்நாட்டிலும் மற்ற பகுதிகளிலும்.

தந்தை பெரியார் அவர்கள் பண்படுத்திய மண் ஆனபடியால், தமிழ்நாட்டில் அம்முயற்சி 'பிசுபிசுத்து விடக் கூடிய வகையில், வேரோடு கிள்ளி எறியப்பட்டது.

முதன்முதலில் வானொலி மூலம் திருச்சியிலிருந்து தந்தை பெரியார் அவர்கள் விடுத்த வேண்டுகோளை, திராவிடப் பெருங்குடி மக்கள் ஏற்றனர். சிலசில ஊர்களில் வெடிக்கத் துவங்கிய (இஸ்லாமியச் சகோதரர்கள் மீது பழிபோட்டு கலவரம் நடத்த முனைந்த ஈரோடு, திருவண்ணாமலை, ஆம்பூர் - வாணியம்பாடி போன்ற நகர்களில் கலவரங்கள் உடனடியாக ஓய்ந்து நின்றன. உண்மையை விடுதலை போன்ற நாளேடு வெளியாக்கியதன் விளைவாக தொடர்ந்து அமைதி ஏற்பட்டது.

தந்தை பெரியார் அவர்களது அறிவார்ந்த தொலைநோக்கும், மனிதநேயமும் உள்ளடங்கிய ஆழ்ந்த கருத்துகளால் ! 'அமைதிப் பூமியாகவே தமிழகம் திகழ்ந்தது!

"காந்தியார் பற்றிக் கடுமையாக விமர்சித்த தந்தை பெரியார் அவர்கள், பிறகு காந்தியாரை இப்படிப் புகழ்ந்தாரே, இது முரண்பாடல்லவா?” என்று சிலருக்குக் கேட்கத் தோன்றும்.

அதற்கும் இந்தத் தொகுதியில் உள்ள தந்தை பெரியார்தம் அறிக்கைகள், உரைகள் தக்க விளக்கமாக அமையும்.

துவக்கத்தில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து, காந்தியாரின் அணுக்கத் தொண்டராகத் திகழ்ந்து, காந்தியாரைத் தன் இல்லத்திற்கே வரவேற்று அவரது அன்பை, பாராட்டைப் பெற்ற பெரியார் அவரைவிட்டு - காங்கிரசை விட்டு வெளியேறியதற்குப் பிறகும், பெங்களூரில் காந்தியாரால் அழைக்கப்பட்டு, தன்னோடு சேர்ந்தே பணியாற்ற அன்புக் கட்டளையிட்ட நிலையிலும் கூட கொள்கை நிலைப்பாடு காரணமாகவே மறுபடியும் இணையும் வாய்ப்பு இல்லாது போனது மட்டுமல்ல; கடுமையாக எதிர்த்து பிரச்சாரம் செய்தாக வேண்டிய நிலைக்கு தந்தை பெரியார் ஆனார்கள்.

காந்தியாரின் வர்ணாசிரமப் பிடிப்பு, பார்ப்பனரை ஆதரித்த போக்கு, மதத்தை அரசியலில் கொண்டுவந்து போட்ட நிலைப்பாடு, வர்ணாசிரம தர்மத்தில் நம்பிக்கை வைத்துக்கொண்டு, ஜாதி முறையை ஏற்றுக்கொண்டு தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என்று எடுத்த நிலைப்பாடு சமூக நீதி பற்றிய - வகுப்புரிமை பற்றிய பிரச்சினையை முதலில் ஆதரிக்காது இருந்த நிலை காரணமாகவே, தந்தை பெரியார் - காந்தியார் மாறுபாடு ஏற்பட்டது. இப்போது பல கட்சிகளில் தலைமைக்கும் மற்றவர்களுக்கும் ஏற்படும் பதவிச் சண்டையைப் போன்ற புகழ் - பெருமைச் சண்டை அல்ல. கொள்கை - லட்சிய கருத்துப் போரேயாகும்.

என்றாலும், காங்கிரசிலிருந்து 1925 இல் வெளியேறிய தந்தை பெரியார் 1926இல் உருவாக்கிய சுயமரியாதை இயக்கத்தின் வேகமான பிரச்சாரப் புயல், காந்தியார் வாழ்க்கையில் கூட எப்படிப்பட்ட அனுபவத்தை - தாக்கத்தை - பயனை அவருக்கு அளித்தது என்பதற்கு, 'தமிழ்நாட்டில் காந்தி' என்ற தலைப்பில், காந்தியவாதி அ.இராமசாமி பி.ஏ. அவர்கள் தொகுத்து - காந்தி நூல் வெளியீட்டுக் கழகத்தவரால் காந்தி நூற்றாண்டு விழா வெளியீடாக மதுரையிலிருந்து வெளியிட்ட நூலில் பக்கங்கள் 520-523 ஆகியவற்றில் உள்ள ஒரு பகுதியை அப்படியே தருகிறோம்:

“16.9.1927 மன்னார்குடியிலிருந்து நாகப்பட்டினம் பாசஞ்சர் இரயிலில் மறுநாள் காலை தஞ்சாவூருக்கு அண்ணலும் அவரது குழுவினரும் வந்து சேர்ந்தார்கள். ஒவ்வொரு பெரிய நகருக்கு வரும்போதும், கூட்டத்தைத் தவிர்ப்பதற்காக அதற்கு முந்திய இரயில் நிலையத்தில் காந்திஜி இறங்கி விடுகிறார் என்பதை அறிந்த தஞ்சை மக்கள் இன்று ஒரு தந்திரம் செய்தார்கள். மன்னார்குடியிலிருந்து தஞ்சைக்குள் டாக்ரோடு வழியாக நுழையக்கூடிய இடத்தில் கூடி நின்றார்கள். ஆனால் இம்முறை காந்திஜி அவ்வாறு இறங்கவில்லை. திட்டப்படி தஞ்சாவூர் இரயில் நிலையத்திலேயே வந்து இறங்கினார். மறுபடியும் பொது மக்களுக்கு ஏமாற்றம்தான். தஞ்சையில் காந்திஜி குழுவினர் "உக்கடை ஹவுஸ் இல் தங்கியிருந்தார்கள்.

இந்த நகரில் நடைபெற்ற ஒரு முக்கியமான காரியம் நீதிக்கட்சியைச் சேர்ந்த சில தலைவர்களும் காந்திஜியும் சந்தித்துப் பேசியதேயாகும். பன்னீர்செல்வம், உமா மகேசுவரம்பிள்ளை (நீதிக்கட்சித் தலைவர்கள்) உக்கடைத் தேவர், சையத் தஜூதின், கார்குடி சின்னையாபிள்ளை, பட்டுக்கோட்டை தண்டபாணி செட்டியார் ஆகியோருக்கு அண்ணல் பேட்டி அளித்தார். (மற்றும் பாப்பநீடு ஜமீன்தார், கே.நடராஜன் முதலிய பல பிரமுகர்களையும் காந்திஜி சந்தித்துப் பேசினார். கே. நடராஜன் தாயாரான வயதான அம்மையார் காந்திஜியைப் பார்க்க வந்தபோது அண்ணல் அவரை அன்போடு வரவேற்று, பெண்கள் கட்டிக்கொள்ளத்தக்க மெல்லிய புடவைகள் கதரில் இருப்பதாகச் சொன்னார்.) நீதிக்கட்சித் தலைவர்களைச் சந்தித்துப் பேசியது இரு தரப்பினருக்குமே நல்லதாகப் போயிற்று. காந்திஜியின் தரப்பை அவர்களும் அவர்கள் தரப்பை காந்திஜியும் அதிகம் புரிந்துகொள்ள இந்தச் சந்திப்பு உதவியது. நீதிக்கட்சித் தலைவர்களான பன்னீர்செல்வமும், உமா மகேசுவரம் பிள்ளையும் காந்திஜியைச் சந்தித்துப் பேசிய உரையாடல் "சுதேசமித்திரன்" இதழில் அந்தக் காலத்தில் விவரமாக வெளியாகியிருந்தது. சுருக்கத்தைப் படித்துப் பார்ப்பது கூட இப்போது சுவையாக இருக்கும்.

உமா மகேசுவரம்பிள்ளை : பிராமணர் - பிராமணரல்லாதார் விவகாரம் வரவரச் சிக்கலாகி வருகிறது. தலைவர் அவர்கள் இதில் தலையிட்டு, சமாதானத்தை உண்டு பண்ண வேண்டும்.

மகாத்மா: பிராமணரல்லாதாரே இந்த இயக்கத்தைப் பற்றிப் பலவிதமாகக் கூறுகிறார்கள். பிராமணர் - பிராமணரல்லாதாருக்கிடையே

இப்போது வேறுபாடுகள் இருந்தாலும் சிறிது காலத்தில் ஓர் அவை மறைந்துவிடும் என்று டாக்டர் வரதராஜுலு நாயுடு கூறுகிறார். என்னைப் போன்றவர்கள் இதில் தலையிட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார். ஆனால் ஈரோடு இராமசாமி நாயக்கர் தென்னாட்டில் பிராமணர் கொடுமை அதிகமாக இருக்கிறதென்றும் என்னைப் போன்றவர்கள் இதில் அவசியம் தலையிட்டு, மன நிறைவு தரக்கூடிய ஒரு முடிவை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென்றும் கூறகிறார். இப்போது பிராமணர்களிடத்து முற்போக்கான கொள்கைகள் பரவி வருவதைக் காண்கிறேன். சில ஆண்டுகளுக்கு முன் நான் சென்னைக்கு வந்தபோது, எஸ். சீனிவாச அய்யங்கார் வீட்டில் தாழ்வாரத்தில்தான் உட்கார்ந்திருந்தேன். இப்போது அவர் வீட்டை என் வீடாகவே நினைத்துப் பழகி வருகிறேன். என் மனைவி அவர்களுடைய அடுப்பங்கரைவரை செல்கிறாள்.

பன்னீர்செல்வம்: பிராமணர்கள் அதிகாரங்களையும் உத்தியோகங்களையும் தாங்களே வைத்துக் கொள்கிறார்கள். பிற வகுப்பார் அவைகளை அடைவதற்கு இடமில்லாமற் போய்விடுகிறது.

மகாத்மா: நீங்கள் சொல்வதிலிருந்து அதிகாரங்களையும் உத்தியோகங்களையும் பங்கு போட்டுக் கொள்வதே உங்களுடைய முக்கிய குறிக்கோளாய் இருப்பதாகத் தெரிகிறது. இப்படிப்பட்ட ஒரு குறிக்கோளுக்கு நான் ஆதரவாயிருக்க முடியாது. பொது மக்களுடைய நன்மையைக் கருதாத எந்த இயக்கத்திலும் எனக்கு அனுதாபம் கிடையாது.

உமா: அதிகாரம் பெறுதல் என்பது பல நோக்கங்களில் ஒன்றாகும். சமூகத் தீமைகளைப் போக்குவதும் மத சம்பந்தமான சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமென்பதும் எங்களுடைய மற்ற குறிக்கோள்கள்.

மகாத்மா : உங்கள் இயக்கத்தின் கொள்கையில் மாறுதல் ஏற்பட்டிருப்பது நல்லது. சமய சம்பந்தமான சீர்திருத்தங்கள் செய்வது நோக்கம் என்று கூறுகிறீர்கள். ஆனால் பிற மதத்தினரையும் சேர்த்துக் கொண்டிருக்கிறீர்களே?

உமா: இந்து சமயத் தலைவர்கள் எங்கள் இயக்கத்தைக் கவனியாதிருந்தபோது, நடந்த வரையில் நடைபெறட்டும் என்று கருதி இந்துக்களல்லாதாரும் இயக்கத்தின் தொடக்கத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள். பிராமணரல்லாதார் பல வழிகளிலும் பிராமணர்களால் அவமதிக்கப்பட்டிருக்கிறார்கள். பொது மக்களிடையே இப்போது விழிப்பு ஏற்பட்டிருக்கிறது.

மகாத்மா: இப்போது நடைமுறையிலிருக்கும் வர்ணாஷ்ரம் தர்மத்தைக் களைந்தெறியலாம். ஆனாலும் அடிப்படையான தத்துவத்தை அழிக்க முற்படலாகாது. பிறப்பினால் மட்டும் ஒரு மனிதன் உயர்ந்தவனாகி விடமாட்டான். பன்னீர்: கதர் இயக்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள். பல பிராமணரல்லாதார் உங்களோடு சேர்ந்து வேலை செய்ய இடங் கொடுக்காமல் இராஜகோபாலாச்சாரியார் செய்கிறார் என்ற புகார் இருந்து வருகிறது. எஸ்.இராமநாதன் கதர் இயக்கத்தில் இருக்கிறார் என்பது உண்மையே. ஆனால் அவரையும் வெளியே போகும்படி பிராமணர்கள் செய்து விடுவார்கள். (இவ்வாறு அவர் கூறியபோது ராஜாஜியும் எஸ். இராமநாதனும் அங்கிருந்தார்கள்.)

இதன்மூலம் இரண்டு மாபெரும் உண்மைகளை - யதார்த்தத்தை நாம் புரிந்துகொள்ள முடிகிறது.

1. பார்ப்பனர்-பார்ப்பனரல்லாதார் பிரச்சினையை மூலதனமாக வைத்து தமது இயக்கத்தை வளர்க்க விரும்பவில்லை. அவர்களையும் சமூக நீதியை ஏற்க காந்தியார் வற்புறுத்தினால் இவ்வியக்கம் தேவைப்படாது என்ற ஒரு win-win solution ஏற்படும் என்பதை விரும்பிய பெரியார்தம் நேர்மை.

2. 1927 இல் சொல்லுகிறார்: சில ஆண்டுகளுக்கு முன் மயிலாப்பூர் பிரபல காங்கிரஸ் தலைவர் சீனிவாச அய்யங்கார் வீட்டின் தாழ்வாரத்தில்தான் காந்தியும் அவரது (கஸ்தூரியும் துணைவியாரும் தங்க வைக்கப்பட்டனர். ஆனால், இப்போது அவர்களது அடுப்பங்கரை வரை உள்ளே செல்லுகிறோம். இந்த மாற்றம் சீனிவாச அய்யங்காரின் வீட்டில் ஏற்பட்டதற்கு - எது உண்மையான காரணம்?

தந்தை பெரியார் தம் சுயமரியாதை இயக்கத்தின் பார்ப்பன எதிர்ப்பு - வர்ணபேத நிகழ்வுகளின் கண்டனம் அல்லாமல் வேறு எது? 1924இல் சேரன்மாதேவி குருகுலத்திலும் ஜாதி வேற்றுமையுடன்தானே பார்ப்பனரல்லாத பிள்ளைகள் நடத்தப்பட்டு அது பெரும் புயலைக் கிளப்பியதால்தானே அப்போதே - காங்கிரசுக்குள்ளேயே பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் உணர்வு பொறியாகி, பிறகு கொழுந்துவிட்டெறிந்த நிலையின் காரணமாகத்தானே இப்படி மாறுதல்?

எனவே காந்தியாரையும் அவரது துணைவியாரையும் சீனிவாச அய்யங்கார்களின் வீட்டுச் சமையல் அறைக்குள்ளே செல்ல வைத்த பெருமை தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கத்திற்கு உண்டே!

அதுபோலவே, சென்னை மாகாண முதல் அமைச்சராக இருந்த காங்கிரஸ் ஓமாந்தூர் ஓ.பி. இராமசாமி ரெட்டியார்) அவர்கள் மீது காந்தியாரிடம் புகார் கூறினார்கள் தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள். ஓமந்தூரார் ஆட்சி, ''மற்றொரு தாடியில்லாத பெரியார்) இராமசாமி” ஆட்சியாகவே நடைபெறுகிறது என்று அவர்கள் நடத்திய பிரபல ஆங்கில ஏடுகளில் எழுதினர். (காசா. சுப்பராவ் நடத்திய 'சுதந்திரா' என்ற ஆங்கில வார ஏடு மற்றும் 'இந்து' போன்ற ஏடுகளும் அவர் வகுப்புவாதி என்று குற்றம் சுமத்தி, பார்ப்பனர்களுக்குரிய இடங்களை கல்வியில் சட்டப்படி மறுத்துள்ளார் என்று சென்னை மாகாண அரசு கடைப்பிடித்த வகுப்புவாரி உரிமைக்கு எதிராக காந்தியாரிடம் புகார் மனு கொடுத்தனர் 1948இல்.

அதுபற்றி முதல் அமைச்சர் ஓ.பி.இராமசாமி அவர்களிடம் காந்தியார் அவர்கள் விளக்கம் கேட்டார்; அவரது தனிச் செயலாளரையே அனுப்பி வைத்தார். அதற்குரிய மறுப்பினை புள்ளி விவரங்களுடன் ஓமாந்தூரார் காந்தியாருக்கு விரிவான மெமொரெண்ட பதிலாக அளித்து உண்மையை விளங்க வைத்தார்; அதன் விளைவு பார்ப்பனருக்கு எதிராகவே 'பூமராங்' போல அமைந்துவிட்டது. நூற்றுக்கு 3 சதவிகிதம்கூட இல்லாத பார்ப்பனர் கல்வி உத்தியோகத்தில் அனுபவிப்பது பல மடங்கு அதிகம் என்பதை அப்புள்ளி விவரங்கள் காந்தியாருக்கு தெள்ளத் தெளிவாக விளக்கியதனால், அதைப் புரிந்து கொண்ட காந்தியார், பார்ப்பனர்களைப் பார்த்து ஒரு முக்கிய கேள்வி கேட்டார். 'வேதம் ஓதுதல்தானே வேதியர்க்கழகு', தர்பையும் பஞ்சாங்கமும் பிடிக்க வேண்டிய நீங்கள் ஏன் சனாதனத்தையும் வைதிக தர்ம நெறிகளையும் விட்டுவிட்டு 'ஸ்டெதாஸ்கோப்பையும்' (மெடிக்கல் காலேஜ், 'டி ஸ்கொயரையும்' என்ஜினியர் காலேஜ் எடுத்துப் போகவேண்டுமென்று விரும்புகிறீர்கள்? இது நியாயமல்லவே என்று பதிலடி கொடுத்தார்.

அதேபோல், அரசு நிகழ்வுகளில் மதத்திற்கு வேலையில்லை, மதத்தை கலக்க வைக்கக் கூடாது என்றும் தெரிவித்தார்.

இப்படியெல்லாம் கூறிய 30 நாள்களுக்குள் காந்தியார் கோட்சேக்களால் சுட்டுக் கொல்லப்படுகிறார் என்பதை தந்தை பெரியார் தனது நாட்குறிப்பு' - டைரியிலே குறித்து வைத்ததோடு அதை எழுதவும் செய்துள்ளார்கள்.

இந்தியா சுதந்திரம் பெற்றது 15.8.1947ல்; காந்தியார் கொல்லப்பட்டது - 30.1.1948ல், அதாவது சுதந்திரம் பெற்ற 165-ம் நாள் கொல்லப்பட்டார். காந்தி இந்தியாவை மத சார்பற்ற நாடு என்று சொன்னது 7.12.1947ல்; காந்தி கொல்லப்பட்டது 30.1.48ல். அதாவது அவர் “நம் நாடு மத சார்பற்றது” என்று சொன்ன 53-ம் நாள் கொல்லப்பட்டார். காந்தி, இந்தியா சுதந்திரம் பெற்றவுடன் பார்ப்பனரின் நடத்தையைப் பார்த்து அவர் சுயமரியாதைக்காரராகிவிட்டார். அவர் கொல்லப்படாவிட்டால் இந்தியா சுயமரியாதைக் கொள்கை நாடாகி விடும் என்று பயந்தே அவரைக் கொன்றார்கள்.

'பார்ப்பன துவேஷி' என்ற சிமிழுக்குள்ளே தந்தை பெரியார் அவர்களை, அடைத்துக் காட்டுகின்றனர் வஞ்சக எண்ணம் படைத்தோர் பலர் இன்றும் கூட.

தந்தை பெரியார் தம் மனிதநேயம், சமூகப் பொறுப்புணர்வு எவ்வளவு உயர்ந்த ஒன்று என்பதைப் புரிந்துகொள்ள, காந்தியாரைச் சுட்டுக் கொன்றவன் கோட்சே என்ற ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் பயிற்சி பெற்ற மராத்திப் பார்ப்பனர் என்ற செய்தி வெளியானவுடன், அவரது மாநிலமான மகராஷ்டிராவில், நாசிக், சத்தாரா போன்ற பகுதிகளில் இருந்த அக்கிரகாரங்கள் - பார்ப்பனர் குடியிருப்புகள் எரிக்கப்பட்டன; சூறையாடப்பட்டன. பல மராத்திய பார்ப்பனர்கள் கொல்லப்பட்டனர்.

அங்கே சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி பதற்றத்தைத் தணிக்க, வகுப்புக் கலவரத்தினையும் வன்முறையையும் தடுக்க வெகுபாடுபட வேண்டியுள்ளது என்பதை அப்போது பிரிக்கப்படாத (பம்பாய்) மாகாண உள்துறை போலீஸ்) அமைச்சராக இருந்த மொரார்ஜி தேசாய் அவர்கள் அவரது சுயசரிதை நூலில் ஒரு பகுதியில் குறிப்பிட்டுள்ளார்.

அங்கிருந்ததைவிட, பார்ப்பனரல்லாதார் இயக்கம் மிகத் தீவிரமாக இயங்கியது சென்னை மாகாணத்தில் தான். தந்தை பெரியார் அவர்கள் பார்ப்பனர்கள் மீது வஞ்சம் தீர்த்து ஒழித்துக்கட்ட அப்போது நினைத்திருந்தால், தமிழ்நாட்டில் பார்ப்பனருக்கு எதிரான வன்முறையைத் தூண்டி மராத்திய மாநிலத்தைப்போல் செய்திருக்க முடியாதா? ஏன் செய்யவில்லை? மாறாக அமைதிக்கு அறிவுறுத்தினார். அதுதான் அவரது மனிதநேயப் பண்பாடு.

அது மட்டுமா? அவர்கள் மீதும் மக்களின் ஆத்திரம் பாயக் கூடாது; அதன் மூலம் பார்ப்பனர்கள் உயிருக்கும் உடைமைக்கும் ஆபத்து வந்துவிடக்கூடாது என்ற மனிதநேய உணர்வுடன், வேகமாக உணர்ச்சிவயப்பட்டுப் பேசிய இளம் பேச்சாளர் கருத்தினைக்கூட மறுத்து, 'சுட்டதற்காக துப்பாக்கி மீது நாம் ஆத்திரப்படலாமா' என்று, உணர்ச்சிவசப்படாது அறிவு வயப்பட்டு மக்களுக்கு அறிவுரை கூறியவர் தந்தை பெரியார் அவர்கள். (நன்னிலம் சன்னாநல்லூர் உரை)

அன்றைய அந்த இளம் பேச்சாளர் வேறு யாருமல்ல திருவாரூர் மு.கருணாநிதி, இன்றுள்ள நம் கலைஞர். கலைஞர் அவர்களே ஒரு மேடையில் இதனைக் குறிப்பிட்டு, கட்டுப்பாடு காக்க ஒரு இயக்கம் தலைமை எப்படிச் செயல்பட வேண்டும் என்று கூறியது திராவிடர் இயக்க வரலாற்றில் ஒரு பொன்னேடு அல்லவா?

சுருக்கமாக தந்தை பெரியார் அவர்கள், காந்தியார் மறைந்த பிறகு 'இந்த நாட்டிற்கு காந்தி நாடு' என்று பெயர் சூட்ட வேண்டும்; என்றெல்லாம் கூறியுள்ளது முரண்பாடு அல்ல - கொள்கைப் பிடிப்பில் விருப்பு வெறுப்பின்றிப் பார்த்த நடுநிலைப் பார்வையாகும்.

சுருக்கமாக இதற்கு 1948 குடிஅரசில் இரண்டு வரிகளில் முத்தாய்ப்பாகச் சொன்னது.

"வாழ்ந்த காந்தியார் வேறு
மறைந்த காந்தியார் வேறு"

என்பதில் உள்ள கருத்துப் பதிவினைப் பார்த்தால் விளங்கும். அதற்குரிய ஆதாரங்களை வாசக நேயர்கள் இத்தொகுப்பில் காணலாம்.

தந்தை பெரியார் அவர்கள் கூறிய கருத்தினை - காந்தியின் பேரன் துஷார் காந்தி வழிமொழிந்ததைப் போலவே அவரது நூலில் குறிப்பிட்டுள்ளார். அதற்குரிய முக்கிய பகுதிகளை பேராசிரியர் டாக்டர் ப.காளிமுத்து அவர்கள் மேற்கோள்களாக மிக அருமையான தமிழாக்கம் மூலம் தந்துள்ளார். அவருக்கும், இந்த அறிக்கைகளைத் தொகுக்க உதவிய தோழர்கள் சைதை மு.ந.மதியழகன், வை.கலையரசன், ஒருங்கிணைத்த அச்சக மேலாளர் தோழர் க.சரவணன் அவர்களுக்கும் நமது நன்றியும் பாராட்டும்.

சமூக வரலாறு சரியான பார்வையோடு அமைந்தால் மட்டுமே வருகின்ற தலைமுறையினருக்கு சரியான உண்மை வரலாறு கிடைக்கும்; இன்றேல் உண்மைகள் பலியான களங்களாகத்தான் வரலாற்றின் பக்கங்கள் அமையும்.

கி.வீரமணி
பதிப்பாசிரியர்
19-11-2013

தொடர்புடைய மற்ற பதிவுகள்:

காந்தியார் கொலை அதிர்ச்சியூட்டும் தகவல்கள் - பொருளடக்கம்

Previous article திராவிடர் இயக்கப் பார்வையில் பாரதியார் - ஆசிரியர் குறிப்பு