திராவிட இயக்க எழுத்தாளர்களின் சிறுகதைகள் - பதிப்புரை
தொன்மையும் மென்மையும் இனிமையும் எளிமையும் அழகும் தெளிவும் மிகுந்து விளங்கும் நம் தமிழ் காலத்தை வென்று வரலாறு படைத்துக் கொண்டிருப்பது அறிந்த ஒன்று. காலந்தோறும் நடைபெற்ற மொழிப் படையெடுப்புகளால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அமைதியாக எதிர்த்து முன்னேறிக் கொண்டிருக்கும் முதன்மொழி தமிழ்மொழியைப் போல பிறமொழிப் படையெடுப்புகளைச் சந்தித்திருக்கும் பிறமொழிகள் இருக்குமா என்பது ஐயப்பாடே.
மேற்படி பிறமொழிப் படையெடுப்புகளிலிருந்து தமிழை ஏறுநடை போட வைத்த பெருமை திராவிட இயக்கத்துக்கு உண்டு. மதமும் இனமும் மோதி மிதித்துக் கொண்டிருந்த தமிழைத் தலைநிமிர வைத்த பெருமை இவ்வியக்கத்துக்கு உண்டு.
தமிழின் தொன்மையை மறுத்து, சிறப்பைச் சிதைத்து, தனித்தன்மையைச் சீரழித்துப் புதைக்க நினைத்த செருக்கை அடக்கி, கலப்பு மொழிக் கலாச்சார உறவை நீக்கி என்றுமுள தென்றமிழாய் தமிழ் மொழியை உலாவரச் செய்த பெருமை திராவிட இயக்கத்திற்கு உண்டு.
குறிப்பாக வடமொழியும், ஆங்கிலமும் விரவி அன்னைத் தமிழை அடிமை மொழியாக்கி வைத்திருந்தவர்களிடமிருந்து மீட்டு நல்ல தமிழ், தனித்தமிழ், தூயதமிழ் என்றெல்லாம் மார்தட்டி, துறைதொறும் கலை விளக்கமும் அறிவு துலக்கமும் ஒளிர்ந்திடச் செய்த பெருமை மேற்படி இயக்கத்தையே சாரும். இந்தப் பணியில் தலைநின்றவர்கள் என்று பார்த்தால் அண்ணா, கலைஞர் என அந்தப் பட்டியல் நீளும்.
தமிழ் இலக்கிய வரலாற்றை எழுதுபவர்கள் திராவிட இயக்கத்தை விட்டுவிட்டு எழுதமுடியாத அளவுக்குப் பதியமாகிவிட்ட வரலாறு படைத்துள்ளது. திராவிட இயக்கம் நூற்றாண்டு காண்கின்ற இந்த நேரத்தில் அதனை நினைவு படுத்த வேண்டுவது நமது கடமையாகிறது.
தமிழில் கவிதை, கட்டுரை, வரலாறு, நாடகம், புதினம், குறுங்கதை, சிறுகதை என எல்லாத் துறைகளிலும் முன்பு எவரும் தொடாத உச்சத்தைத் தொட்டவர்கள் அண்ணாவும், கலைஞரும் என்றால் மிகையன்று. அவர்களைத் தொடர்ந்து அவர்கள் வழியில் தம்பிமார்கள் அப்பணியைத் தொடர்ந்தனர். தொடர்ந்து கொண்டிருக்கின்றனர்.
சிறு கதைகளுக்கெனத் தனியாக இலக்கணங்கள் ஏதும் வரையறுக்கப்படவில்லை. எனினும் தமிழில் வழங்கப்படுகின்ற சிறுகதைகளின் பொருண்மை, வடிவம், வார்ப்பு, நடை, செறிவு, சிந்தனை ஓட்டம் போல் பிறமொழிகளில் காண்பது அரிது. சிறுகதை தோன்றியதாகக் கூறப்படும் மேலைநாடுகளில் கூட அதற்குப் பொருத்தமான இலக்கணங்கள் கூறப்பட வில்லை எனலாம். இலக்கிய உலகின் கடைசிக் குழந்தை என்பதால் அது நாளும் நாளும் கொப்பும் கிளையுமாகப் பற்றிப் படர்ந்து வளர்ந்து கொண்டிருக்கிறது.
சிறுகதை என்பது இப்படித்தான் எழுதப்பட வேண்டும் என எந்தச் சட்டமும் இல்லாத நிலையில் அது சுருக்கமாக, எளிமையாக, படிப்பவர் மனத்தைப் பற்றிக் கொண்டு மன நிறைவைத் தருகின்ற வகையில் அமைய வேண்டும். கருத்துப் பரவலும், உணர்ச்சி ஈர்ப்பும், சிந்திக்க வைக்கும் முடிவும் கண்டிப்பாகச் சிறுகதைக்குத் தேவை. அது எந்தப் பொருள் பற்றியும், எத்துறையைச் சார்ந்தும், எப்படிப்பட்டவராலும், எந்தச் சூழலிலும் எழுதப்படலாம். படிப்பவரின் நேரத்தை விரையமாக்காமல் நெஞ்சைத் தின்னும் நினைவுகளால் சிந்திக்க வைத்தல் வேண்டும்.
தமிழ் மொழியில் அமைந்துள்ள சங்கப்பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சிறுகதையைப் போலவே கருவும் உருவும் கொண்டிருக்கும். ஆனால் நடைமட்டும் கவிதை நிலையில் இருக்கும். கண்ணீரை வரவழைக்கும் கனிவுடையதாக இருக்கும் காலத்திற்கேற்ற வளர்ச்சியை இன்று காண்கிறோம்.
ஆரம்பகால சிறுகதைகள் இன்றைய சிறுகதைகளைப் போல செறிவாகவும் சிறப்பாகவும் உள்ளடக்கத்துடன் எதிர்ப்பார்பதற்கில்லை. காலப்போக்கில் இன்று காட்டாற்று வெள்ளமெனக் கரைபுரண்டு ஓடுகிறது.
சிறுகதைகளை நாள், வார, மாத இதழ்களில் தொடர்ந்து எழுதி உணர்வுத் தாகத்தையும், அறிவுத் தாகத்தையும் தூண்டி இதழ்களைப் படிக்கும் ஆர்வத்தைத் துண்டிய பெருமையும் திராவிட இயக்கத்துக்கு உண்டு எனலாம்.
ஆரம்ப காலத்தில் பொழுது போக்குக்காகவே எழுதப்பட்ட சிறுகதைகள் நாளடைவில் அறிவுப் பூர்வமாக சிந்திக்கவும் செயல்படவும் தூண்டும் வகையில் அமைந்தன. பின்னர் கலை நலமும் கற்பனை வளமும் வர்ணனைத் தரவும் இணைத்து சிறுகதை என்பது குறுங்காப்பியம் போல அமைந்து கற்பவரைத்தம்பால் ஈர்த்துக் கொள்கின்றன.
சிறுகதைகளில் கற்பனை, பொழுதுபோக்கு அம்சங்கள் குறைந்தும், முற்போக்குக் கருத்துகளும், பொதுவுடைமைச் சிந்தனைகளும் அறிவுத் தெளிவும் கொண்டு மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்டும் சமுதாய கண்ணோட்டத்தில் அமைந்துள்ளன. இன்று சமுதாயத்தின் வாழ்வியல் சிந்தனைகள் அனைத்திலும் இடம் பெற்று வாசகர்களில் பெரும்பான்மையான வரவேற்பைப் பெற்றுள்ளன. அறக்கருத்துகளையும், அறிவியல் எண்ணங்களையும், சமுதாயச் சீர்கேடுகளையும் உணர்த்தும் வகையில் அமைந்துள்ளன.
ஏழைகளின் வறுமையினை, முதலாளித்துவத்தின் சுயநலத்தை, சீமான்களின் கொடுமைகளை, அரசியலின் அலங்கோலங்களை, அரசு அதிகாரிகளின் அவலங்களை நாட்டில் நடக்கின்ற நயவஞ்சகப் போக்குகளைக் காலத்துக்கேற்ற வகையில் எடுத்துக்காட்டும் வண்ணம் அமைந்துள்ள சிறுகதைகள் இன்று சிறகடித்துப் பறக்கின்றன. சாதி வெறிகளும் மதவெறிகளும் பாலியல் கொடுமைகளும் கூட இன்று பாடுபொருள்களாகிப் பந்தல் போட்டுள்ளன.
திராவிட இயக்க எழுத்தாளர்களின் வரவுக்குப் பின்னர் சிறுகதைகள் மறுமலர்ச்சி பெற்றுப் பல திருப்பங்களுக்கு வழிகாட்டும் நிலையில் வளர்ந்து கொண்டிருப்பதைக் காணலாம்.
அதே நேரத்தில் மறுமலர்ச்சிக்குக் காரணமான திராவிட இயக்க எழுத்தாளர்கள் முறையாக அங்கீகரிக்கப்படாமலும் அவர்களுடைய படைப்புகள் உரிய இடத்தைப் பெறாமலும் இருப்பது வருந்தத்தக்கதே. படைப்புலகப் பிரம்மாக்கள் என்று சாயம் பூசிக் கொண்டிருக்கும் போலி எழுத்தாளர்களின் கூட்டம் அனைத்தையும் கைகொட்டி வேடிக்கை பார்ப்பது போல நாடகமாடிக் கொண்டிருக்கிறது. திராவிட இயக்க எழுத்தாளர்களின் படைப்புகளைத் தீண்டத் தகாதவைகளாக எண்ணி ஒதுக்கப்படும் நிலையும் இன்று காணப்படுகிறது.
தமிழ்ச் சிறுகதைப் பணியில் அண்ணாவுக்குப் பின் ஏற்பட்ட மறுமலர்ச்சியால் தமிழில் ஒரு புதிய வேகம் தோன்றியதுடன் நடையில் யாப்புக்குப் பொருத்தமான எதுகையும், மோனையும் சேர்ந்து மொழிக்கு ஒலியலங்காரம் கொடுத்ததும் ஒரு முக்கியமான திருப்பம் என்பர் அறிஞர்.
சிறுகதை வளர்ச்சி வரலாற்றில் திராவிட இயக்க எழுத்தாளர்களின் சிறுகதைகள் ஒதுக்கப்பட்டுவிடக் கூடாது என்னும் எண்ணத்திலும், திராவிட இயக்க நூற்றாண்டு விழாவினை முன்னிட்டும் அவர்களுடைய சில சிறுகதை களையேனும் வெளிக்கொணர வேண்டும் என்னும் அவாவினால் ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல கீழ்க்காணும் 13 எழுத்தாளர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது.
- அறிஞர் அண்ணா
- கலைஞர் மு. கருணாநிதி
- இரா. அரங்கண்ணல்
- ஏ.வி.பி. ஆசைத்தம்பி
- இளமைப்பித்தன்
- இரா. இளஞ்சேரன்
- கே.ஜி. இராதா மணாளன்
- தில்லை. மறை முதல்வன்
- எஸ்.எஸ். தென்னரசு
- டிகே. சீனிவாசன்
- முரசொலி மாறன்
- ப. புகழேந்தி
- திருச்சி. செல்வேந்திரன்
திரு. ப. புகழேந்தி அவர்களால் தொகுத்து வெளியிடப்பெற்ற முதல் பன்னிருவர் சிறுகதைகள் பூர்ணிமா பதிப்பகத்தின் மூலம் தனித்தனி நூல்களாக வெளிவந்துள்ளன. இப்பொழுது அவருடைய அனுமதியின் பேரில் அவை ஒரே தொகுப்பாக வெளியிடப் பெறுகின்றன.
இத்தொகுப்புடன் திருச்சி செல்வேந்திரன் எழுதியுள்ள சிறுகதைகளும் அவர் அளித்த அனுமதியின்படி இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. ஆக மேற்படி பதின்மூவரின் சிறுகதைகளும் ஒரே தொகுப்பாக "திராவிட இயக்க எழுத்தாளர்களின் சிறுகதைகள்” என்னும் பெயரில் இப்பொழுது எமது பதிப்பகத்தின் மூலம் வெளிவந்துள்ளது. மேற்படி இருபெரு மக்களுக்கும் எமது பதிப்பகத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
பகுத்தறிவுப் பண்பாட்டுப் புதையல்களாக அமைந்துள்ள இச்சிறுகதைகள் திராவிட இயக்க எழுத்தாளர்களை உலகுக்கு அறிமுகப்படுத்தும்; அடையாளங்காட்டும். தமிழ்ச் சிறுகதைகள் இலக்கிய வரலாற்றில் தொகுப்பு முயற்சியில் தனியாக இடம்பெறும் இயல்புடையன. இனி எழுதப்படும் இலக்கிய வரலாற்றில் இடம்பெறும் வகையில் மிகச் சிறப்பாகவும், செம்மையாகவும் இத்தொகுப்பு அமைந்துள்ளது.
எங்கேயோ மூலையில் ஒடுக்கப்பட்டும் ஒடிக்கப்பட்டும் முடங்கிக் கிடந்த மனிதவர்க்கத்தின் கடைக்கோடி மக்களின் நிலைகளைப் படிப்பவர் மனத்தில் பதிக்கும் வண்ணம் எழுதப்பட்டும், அவர்களும் மனிதர்களே என உணர்த்தப் பட்டும் மனித நேயத்தின் அடிப்படையை விளக்கும் வகையில் அமைந்துள்ள சிறுகதைகளின் படைப்பாளர்கள் திராவிட இயக்கத்தினரே என்றால் மிமையன்று. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்னும் பண்புகளின் வெளிப்பாடுகளாக இக்கதைகள் ஒளிர்வதை படிப்பவர்கள் உணர்வார்கள்.
திராவிட இயக்கத்தின் நூற்றாண்டினை முன்னிட்டு வெளியிடப் பெறும் இச்சிறுகதை தொகுப்பு வாசகர்களிடையே புதிய எழுச்சியையும், தமிழன்பர்களிடையே புதிய தாக்கத்தையும் உருவாக்கும் எண்ணத்தில் எமது பதிப்பகத்தின் மூலம் இந்நூலை வெளிடுவதில் மகிழ்ச்சியடைகிறோம். வாசக அன்பர்கள் படித்துப் பயனடைவார்கள் என நம்புகிறோம்.
பதிப்பகத்தார்.
தொடர்புடைய மற்ற பதிவுகள்: