பிம்பச் சிறை - இந்நூலைப்பற்றி...
இந்தியாவில் சினிமா தோன்றி வளர்ந்து பலபத்தாண்டுகளான பின்னரும் கல்விப்புலம் இந்த புதிய கலையை கவனிக்கவேயில்லை; மாறாக கவனிக்கப்பட இதற்கு அருகதையில்லையென்றே பேராசிரியர்கள் கருதினர். எந்த ஆய்வகமோ பல்கலைக்கழகமோ சினிமாவை கண்டு கொள்ளவேயில்லை. நம் நாட்டில் சினிமா பற்றிய ஆய்வுகள் முதன் முதலில் கல்விப்புலத்தை சாராதவர்களால் தான் OFWWUULL 67. The Painted Face: Studies in India's Popular Cinema என்ற நூலை எழுதிய கல்கத்தா பிலிம் சொசைட்டியை பின்புலமாகக் கொண்ட சித்தானந்த தாஸ் குப்தா முதலில் நினைவிற்கு வருகிறார். பின்னர் பம்பாயில் வசித்த மத்திய அரசு அதிகாரியான இக்பால் மசூத் திரைப்படங்கள் பற்றி எழுதி (Dream Merchants, Politiciansand Partition) இது கவனிக்கப்பட வேண்டிய தளம் என்று காட்டினார்.
1970 இல் சென்னையில் தங்கி, தமிழ் சினிமா நடிகர்களின் அரசியல் ஈடுபாடு பற்றி ஆய்வை மேற்கொண்டிருந்த இளம் அமெரிக்க ஆய்வாளர் ராபர்டு ஹார்டுகிரேவ் பலரது கவனத்தை ஈர்த்தார். தமிழ் சினிமாவுடன் கல்விப்புலத்தின் ஈடுபாடு இவருடன் தொடங்கியது எனலாம். முன்னர் இவர் தி.மு.க பற்றி ஆய்வு செய்து சிறு நூலொன்றை வெளியிட்டிருந்தார். தமிழ்நாட்டு அரசியலை புரிந்து கொண்டிருந்த இவர் சிக்காகோ பல்கலைக்கழகத்தை சேர்ந்தவர். இவரது கட்டுரைகள் EPW போன்ற இதழ்களில் வெளியாகின. சினிமாவை ஒரு ஆய்வுதளமாக அடையாளம் காட்டினார்.
1980களில் கிராம்ஸியின் சிந்தாந்தம் கல்விப் புலத்தில் பரவி, விளிம்புநிலை மக்களைப் பற்றிய கரிசனம் (Subaltern Studies) ஆய்வாளர்களை ஈர்த்தது. இதன் ஒரு பரிமாணமே வேகமாகப் பரவிய Cultural Studies. அடித்தள மக்களின்பால் மிகுந்த தாக்கம் ஏற்படுத்தியிருந்த சினிமா, கல்விப்புல ஆய்வாளர்களை ஈர்த்ததில் வியப்பில்லையே. பல மேற்கத்திய ஆய்வாளர்கள், அதிலும் மானுடவியலாளர்கள், இந்திய சினிமாவை ஓர் ஆய்வுதளமாகப் பார்க்க ஆரம்பித்தனர். இவர்களில் சிலர் தமிழ் சினிமா பக்கம் வந்தனர். ஆனால் தமிழ் மொழியில் புலமை இல்லாமலிருந்ததும். மொழி சார்ந்த பண்பாட்டுடனும் அக்கறை இல்லாதிருந்ததும், பலருக்கு சினிமா எனும் கலை பற்றிய பரிச்சயம் ஏதுமில்லாமலிருந்ததும் அவர்களது ஆய்விற்குக் குறையாக அமைந்தது. சினிமா போன்ற வெகுமக்கள் ஊடகத்தை ஆராய உள்ளூர் மொழி பற்றிய பரிச்சயம் தேவையாகின்றது. எல்லா மூல ஆதாரங்களும் தமிழில்தான் உள்ளன. பாடல்கள், உரையாடல்கள் மட்டுமல்ல, விமர்சனங்கள், நடிகர்கள் பற்றிய தகவல்களும் தமிழில்தான் கிடைக்கின்றன. ஆகவே மேற்கத்திய ஆய்வாளர்கள், தமிழ்த் திரைப்படங்களின் உள்ளடக்கத்தைப் பற்றி பேசாமல், அதன் தாக்கத்தைப் பற்றியும் ரசிகர் மன்றங்கள், போஸ்டர்கள் போன்ற மற்ற பரிமாணங்களைப் பற்றியும் எழுதி பெயர்பெற்றனர்.
பாண்டியனின் அணுகுமுறை இதனின்று வேறுபட்டிருந்தது. அவர் தமிழில் எழுதாவிட்டாலும், தனது ஆய்வுக்கு தமிழ்ப் பத்திரிக்கைகளையும் மற்ற படைப்புகளையும் பயன்படுத்தினார். அவர் படித்தது நாகர்கோவிலில் ஒரு தமிழ்ப் பள்ளியில் தான். அரசியல் சார்ந்த அவரது கட்டுரைகளின் பலம் இதுதான். நான் திரைப்படத்துறையின் தொழிற்சங்க வரலாறு எழுதிக்கொண்டிருக்கின்றேன் என்று அவரிடம் சொன்னபோது, அந்தத் தலைப்பில் தான் சேகரித்து வைத்திருந்த நாளிதழ் கத்தரிப்புகளைக் கொண்ட கோப்பை என்னிடம் கொடுத்துவிட்டார். அது இன்று ரோஜா முத்தையா நூலகத்தில் இருக்கின்றது.
நம் நாட்டின் கல்விப்புலத்தில் வரலாறு, அரசியல் போன்ற துறைகள் கவனிப்பாரற்று தாழ்ந்து போய்க்கொண்டிருந்த காலகட்டத்தில் பாண்டியன் தனது ஆய்வுக் கட்டுரைகளால் அறிவுலகத்தின்கவனத்தை ஈர்க்க ஆரம்பித்திருந்தார். கல்கத்தாவில் படித்த காலத்தில் பார்தோ சாட்டெர்ஜியின் அணுகுமுறையால் பாதிக்கப்பட்ட பாண்டியனின் கவனம் சினிமாவின் மேல் திரும்பியது. விளிம்புநிலை மக்களைப்பற்றிய அக்கறை அவரை வெவ்வேறு தளத்திற்கு இட்டுச் சென்றது. மக்களை மையமாகக் கொண்டே அடித்தளகண்ணோட்டத்தின்படி வரலாறு எழுதப்பட வேண்டும் என்ற கருத்திலிருந்துதான் அவரது எம்.ஜி.ஆர் பற்றிய ஆர்வமும் தோன்றியது. அடித்தள மக்கள் வரலாறு அவர் ஆய்வுக்கு ஒரு பேசு பொருளாக மட்டும் இருக்கவில்லை. அவர்கள் பால் ஒரு ஆழ்ந்த அக்கறை அவருக்கு எப்போதுமே உண்டு. சென்னையில் சூப்பர் மார்கெட்டுகள் காய்கறிகளை விற்க தொடங்கியபோது சாலையோர வியாபாரிகளுக்காக பரிந்து பேசினார்.
சினிமா எனும் கட்புல ஊடகம் காட்சிப் படிமங்களாலும் குறியீடுகளாலும் ஆனது. இந்தக் கோணத்திலிருந்துதான் (குறியியல்) இதை அணுக வேண்டும் என்பதை உணர்ந்த பாண்டியன் இந்த நூலில் எம்.ஜி.ஆரின் திரைப்படங்களின் உள்ளடக்கத்தைப் பற்றியும் அவர் திரையில் பயன்படுத்தும் குறியீடுகளைப் பற்றியும் எழுதுகின்றார். எவ்வாறு தன்னைப் பற்றிய ஒரு பிம்பத்தை மக்களிடம் உருவாக்க திரைப்படங்களின் காட்சிகளை எம்.ஜி.ஆர் பயன்படுத்தினார் என்பதை அவரது படங்களிலிருந்து மேற்கோள்கள் காட்டி பாண்டியன் தனது வாதத்தை முன்வைக்கின்றார். இதற்காக எம்.ஜி.ஆர் தான் நடிக்கும் திரைப்படத்தின் ஒவ்வொரு பரிமாணத்தையும் தனது கவனிப்பில் வைத்திருந்தார் என்று சரியான ஆதாரங்களுடன் காட்டுகின்றார். தனது பேசுபொருளை பாண்டியன் சினிமா ரீதியாக அணுகுகின்றார். அதுமட்டுமல்ல. ஓர் ஆய்வாளனுக்கு இருக்க வேண்டிய கட்டுப்பாட்டுடன் தனது பொருளை கையாளுகின்றார்.
பதவி, அதிகாரம் இவற்றிற்கு சிறிதும் மதிப்பு கொடுக்காத, அச்சமற்ற வணங்காமுடி பாண்டியன். எந்த ஒரு பிரச்னையிலும் தனது நிலைப்பாட்டை தயக்கமின்றி வெளிப்படுத்தியவர். அவரது இத்தன்மையை இந்த நூலிலும் காணாலாம். 'எம்.ஜி.ஆரின் 11 வருட ஆட்சிக்காலம் (1977-87) சந்தேகமே இல்லாமல் தமிழகத்தின் சமகால வரலாற்றின் இருண்ட காலங்களில் ஒன்றாகும்'' என்றெழுத மனத்திண்மை வேண்டும். நியாயம் என்று தனக்கு பட்டதற்காக பரிந்து பேசுவார். கேலிச்சித்திரம் ஒன்று பள்ளிப்பாட புத்தகத்தில் சேர்க்கப்பட்டதை அடுத்து மைய அரசு இந்த பிரச்னையை விசாரிக்க ஒரு குழு அமைத்தது. அதில் அங்கம் வகித்த பாண்டியன் சிந்தனை சுதந்திரம் பற்றி தனித்து மற்ற உறுப்பினர்களின் கருத்திலிருந்து வேறுபட்டு எழுதிய குறிப்பை தி இந்து ஆங்கில நாளிதழ் கட்டம் கட்டி op-ed பக்கத்தில் வெளியிட்டது.
எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்க்கையை பதிவு செய்ய நினைத்த பாண்டியன், அதை தமிழகத்தின் அண்மைக்கால வரலாற்றின் பின்புலத்தில் துல்லியமாக விளக்குகின்றார். அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகளை அவர் வெளிச்சம் போட்டுக் காண்பிக்கும் முறையால், அவற்றை எளிதில் புரிந்துகொள்ள முடிகின்றது.
இந்திய வரலாற்றியலுக்கும் தமிழ்சினிமா வரலாற்றிற்கும் முற்போக்கு சிந்தனையாளர் பாண்டியனின் முக்கிய பங்களிப்பு இந்நூல்.
பெங்களூரு எஸ்.தியடோர் பாஸ்கரன்
ஏப்ரல் 2016