அண்ணல் அம்பேத்கர் - அவதூறுகளும் உண்மைகளும்
புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/annal-ambedkar-avathoorugalum-unmaigalu
கருப்புக் குறிப்புகள்...
உலகின் புரட்சிகரமான விடுதலைச் சிந்தனையான மார்க்சியம், இந்தியாவில் அமைப்பளவிலும் சிந்தனை முறையிலும் பார்ப்பனியத்திற்கும் ஜாதியத்திற்கும் பலியாகிப் போனது. அதன் மிகச் சிறந்த உதாரணம், ரங்கநாயகம்மாவின் 'சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு! புத்தர் போதாது! அம்பேத்கரும் போதாது! மார்க்ஸ் அவசியத் தேவை' என்கிற நூல்.
தெலுங்கில் எழுதப்பட்ட இந்த அவதூறு நூலைத் தேடிப் பிடித்து மொழிபெயர்த்தது என்பது, பார்ப்பன ஜாதி இந்துக்களின் இருப்பின் அவதியும் தந்திரமுமாகும். பார்ப்பனர்களும் ஜாதி இந்துக்களும் எப்படி தேசியம் என்ற ஒற்றைத் தன்மையைப் பேரடையாளமாகக் கட்டியெழுப்பிக் கொண்டு - அதைக் கேள்விக்குள்ளாக்குபவர்களை - கொச்சைப் படுத்துகிறார்களோ அப்படியாகவே இந்திய சனாதன மார்க்சியர்களின் செயல்பாடுகளும் இருந்து வந்துள்ளதை வரலாறு தோறும் நாம் உணர்ந்தே வந்துள்ளோம்.
இளவரசன், கோகுல்ராஜ். விஷ்ணுபிரியா, ராம்குமார், முத்துக்கிருஷ்ணன், ஜோயல் பிரகாஷ் ரோகித் வெமுலா என அடுத்தடுத்த தலித் இளைஞர்கள் மீதான பச்சைப் படுகொலைகளையொட்டி - தலித்துகளும் ஜாதியொழிப்பாளர்களும் - முன்னெப்போதையும்விட அண்ணல் அம்பேத்கரை நோக்கிய வாசிப்பையும் தேடலையும் துரிதப்படுத்தியுள்ளனர். அதற்கெதிரான வெறுப்பும் வன்மமுமே இப்படியான அயோக்கியத்தனமானதொரு நூலைத் தேடிப்பிடித்து அவசர அவசரமாக மொழிபெயர்த்து, கொள்ளை மலிவாக வெளியிடுவது என்பது, அம்பேத்கரை படிக்கத் தொடங்கியுள்ள நம் தலைமுறை இளைஞர்களைத் திட்டமிட்டு குழப்புவது என்றே கருதுகிறோம்.
'கிழக்குப் பதிப்பகத்தின் 'இந்துத்துவ அம்பேத்கர் ' நூலைப் போன்றே, மார்க்சிய முலாம் பூசப்பட்டுள்ள இப்பிரதியையும் அம்பேத்கரியத்தின் மீது ஏவப்பட்ட பார்ப்பனியக் கருத்தியல் வன்முறை என்றே சொல்ல முடியும்.
இந்திய பார்ப்பன மற்றும் ஜாதி இந்துக்கள், தத்தமது ஜாதிய பதுங்குக் குழிகளுக்குள் நின்று கொண்டு தலித்திய ஓர்மைகளை, அதன் ஜாதி ஒழிப்பு நடவடிக்கைகளை, அனுபவப் பேரிலக்கியங்களைத் தொடர்ச்சியாக அடையாள அரசியல்' எனப் பரிகசித்து ஒதுக்கி வருவது ஒருவகை. அதேப்போல், ஜாதியத்தின் தோற்றநிலையையும் அதைத் தகர்த்தெறியக்கூடிய சிந்தனைப் பொறியமைப்பையும் உலகம் வியக்குமளவிற்கு கருத்தாக்கங்களாகவும் நவீன உரையாடல்களாகவும் பவுத்த முன்னெடுப்புகளாகவும் உருவாக்கிக் காட்டிய பேரறிஞர் அம்பேத்கரை - மார்க்சியத்தின் பெயரால் - இகழ்ந்து தள்ளுவதும் ஏளனம் காட்டித் திரிவதும் ஜாதிய வன்முறையென்றே உரக்கச் சொல்லுவோம்.
அம்பேத்கரை அவதூறு செய்யும் ரங்கநாயகம்மாவின் நூலை சற்றும் அறிவு நாணயமின்றி, சமூகப் பரவலாக்கம் செய்துகொண்டே வர்க்கப் புரட்சி பேசும் மார்க்சிய அமைப்புகளையும், விற்பனையாளர்களையும் எங்கு நிறுத்தி விவாதிப்பது என்பதையும் வாசகர்களை நோக்கிய கேள்விகளாகவே விட்டுவிடுகிறேன்.
மார்க்சியத்தின் பெயரால் நடைபெறும் இவ்வெறுப்பை, கண்டுங்காணாது ஒதுங்கியிருப்பது இனி நடக்காது என்பதற்கான எதிர்வினையாக, ரங்கநாயகம்மாக்களுக்கு மறுப்பு எழுதத் தொடங்கிய கவிஞர் மதிவண்ணனின் இந்த ஆய்வு நூல் - எதிர்வினையென்கிற பரப்பெல்லைகளைக் கடந்து - அம்பேத்கரியத்தை வாசித்தல், விவாதித்தல் என்கிற செம்மாந்த நிலைக்கு இட்டுச் செல்கிறது என்பதை வாசகர்களே உணர இயலும். இது தவிரவும் ரங்கநாயகம்மா பதுங்கிக் கொள்கிற மார்க்ஸ், எங்கெல்ஸ் பிரதிகளுக்குள்ளாகவும் நுழைந்து, ரங்கநாயகம்மாவின் புரிதலையும் அவதூறுகளையும் மதிவண்ணன் கேள்விக்குள்ளாக்கியதோடு மட்டுமின்றி, மொழிபெயர்ப்பின் லட்சணத்தையும் அம்பலப்படுத்தியுள்ளார்.
மதிவண்ணன் உருவாக்கியுள்ள இந்நூலை, பெரியாரை அவதூறு செய்த போது எதிர்வினையாற்றிய 'பெரியார்: தலித்துகள் முஸ்லிம்கள்', 'பெரியார் அறம் அரசியல் அவதூறுகள்', 'வெளிச்சங்களை புதைத்தக் குழிகள்' ஆகிய மூன்று நூல்களின் வரிசையில் வெளியிடும் பெருமிதத்தை கருப்புப் பிரதிகள் இதன் மூலம் எய்துகிறது.
இந்நூலின் பிழைதிருத்தங்களைக் கடந்து பதிப்பு ஆலோசனைகளை வழங்கி, நூலை செம்மையாக்கத் துணை நின்ற தோழர் புனிதபாண்டியன், ஒளியச்சு மற்றும் பிழைதிருத்தம் செய்ததையும் தாண்டி பிரதியின் செம்மையாக்கத்திற்குத் துணை நின்ற தோழர் அமுதா, கருப்புப் பிரதிகளின் அனைத்து நூல்களிலும் தனது உழைப்பை செலுத்தும் ஜீவமணிக்கும் விஜயனுக்கும், எப்போதும் துணை நிற்கும் ஷோபாசக்தி, விஜயஆனந்த் (பெங்களூரு) வி. தேவதாசன், விஜி - ஞானம் (பிரான்ஸ்) ஆகியோருக்கும் எனது அன்பு.
தோழமையுடன்,
நீலகண்டன்
தொடர்புடைய மற்ற பதிவுகள்: