Skip to content
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000

அண்ணல் அம்பேத்கர் - அவதூறுகளும் உண்மைகளும் - முன்னுரை

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/annal-ambedkar-avathoorugalum-unmaigalu
 

முன்னுரை

"ஓர் இந்து தீண்டாமையைக் கடைப்பிடித்து ஒழுகுகிறான் என்றால், அவனை அவனுடைய மதம் அப்படிச் செய்யுமாறு கட்டளையிடுகிறது என்பதால்தான். தன்னுடைய நிலைநிறுத்தப்பட்ட ஒழுங்குக்கு எதிராக எழும் தீண்டத்தகாதவர்களை ஒடுக்குவதில் இரக்கம் அற்றும் சட்டதிட்டங்களுக்கு அடங்காமலும் அவன் நடந்து கொள்கிறான் என்றால் அந்த நிலைநிறுத்தப்பட்ட ஒழுங்கு கடவுள் அருளியது என்று சொல்வதோடு மட்டுமல்லாமல், சாத்தியமான அனைத்து வழிமுறைகளையும் பயன்படுத்தி, அந்த நிலைநிறுத்தப்பட்ட ஒழுங்கைப் பாதுகாத்து வருவது அவனது கடமைகளுள் ஒன்று என அவனுடைய மதம் அவனுக்கு விதிக்கவும் செய்கிறது என்பதால் தான். அவன் மனிதாபிமானத்தின் கட்டளையை செவிமடுக்க மறுக்கிறான் என்றால், தீண்டத்தகாதவர்களை மனிதர்களாகக் கருத அவனுடைய மதம் அவனுக்கும் கட்டளையிடவில்லை என்பதால்தான். தீண்டத்தகாதவர்களுக்கு எதிராக வன்தாக்குதல், கொள்ளையிடுதல், தீ வைப்பு மற்றும் ஏனைய வன்கொடுமைகளில் ஈடுபடும் போது, மனசாட்சியின் உறுத்தல் எதையும் அவன் உணரவில்லை என்றால், சமூக ஒழுங்கைக் காப்பதற்காகச் செய்யப்படும் எதுவும் பாவமில்லை என அவனுடைய மதம் அவனுக்குச் சொல்வதால்தான்."

பாபாசாகேப் டாக்டர். அம்பேத்கர் ஆங்கில நூல்
தொகுப்பு: 5, பக்கம் 90

"வேறொரு வடிவத்திலான பாரபட்சமும் இந்தியாவில் உள்ளது. அது மிக நுட்பமானதாக இருக்கலாம். ஆனால் அது நடைமுறை எதார்த்தமாக உள்ளது. அப்பாரபட்சத்தின்படி, மிகத் திறமை வாய்ந்த தீண்டத்தகாதவர்களின் மரியாதை மற்றும் அந்தஸ்தை மட்டுப்படுத்தி வைக்கத் திட்டமிட்ட முயற்சி மேற்கொள்ளப்படும். ஓர் இந்து தலைவர் மாபெரும் இந்தியத் தலைவர் என்பதாகவே சொல்லப்படுவார். அவர் காஷ்மீரத்து பார்ப்பனராக இருந்தாலும் யாரும் அவரை காஷ்மீரத்து பார்ப்பனர் என்று சொல்ல மாட்டார்கள். தீண்டத்தகாதவராக இருக்க நேர்ந்த ஒரு தலைவரைக் குறிப்பிட வேண்டுமென்றால், இன்னார் தீண்டத்தகாத மக்களின் தலைவர் என்று சொல்வார்கள். ஓர் இந்து மருத்துவர் மாபெரும் இந்திய மருத்துவர் என்று சொல்லப்படுவார். அவர் ஓர் அய்யங்காராக இருந்தாலும் யாரும் அவரை அய்யங்கார் எனச் சொல்ல மாட்டார்கள். தீண்டத்தகாத வகுப்பைச் சேர்ந்த ஒரு மருத்துவரைக் குறிப்பிட வேண்டியது வந்தால், இன்னார் தீண்டத்தகாத மருத்துவர் என்றே குறிப்பிடப்படுவார். ஓர் இந்து பாடகர் மாபெரும் இந்தியப் பாடகர் என்று சொல்லப்படுவார். அதே நபர் தீண்டத்தகாதவராக இருந்துவிட்டால், அவர் தீண்டத்தகாத பாடகர் என்று சொல்லப் படுவார். ஓர் இந்து மல்யுத்த வீரர் மாபெரும் விளையாட்டு வீரர் என்று சொல்லப்படுவார். அவரே தீண்டத்தகாதவராக இருந்துவிட்டால், தீண்டத்தகாத விளையாட்டு வீரர் என்றே சொல்லப்படுவார்.

"தீண்டத்தகாதவர்கள், கீழான மக்கள் எவ்வளவுதான் தகுதி பெற்றிருந்தாலும், இவர்களில் உள்ள தனிச்சிறப்பு வாய்ந்த மனிதர்கள் தீண்டத்தகாதவர்களிடையே சிறந்தவர்கள் அவ்வளவே இந்துக்களிடையே உள்ள சிறப்பு வாய்ந்த மனிதர்களை விடச் சிறந்தவராகவோ அல்லது அவர்களுக்குச் சமமானவராகவோ தீண்டத்தகாத வகுப்பைச் சேர்ந்த மனிதர் ஒரு போதும் ஆக முடியாது. இந்த விதமான கண்ணோட்டம் கொண்ட இந்து மதத்தில்தான் மேற்கண்ட விதமான பாரபட்சத்தின் தோற்றுவாய் இருக்கிறது. இவ்வகையான பாரபட்சம் சமூக ரீதியிலான பாரபட்சமாக இருந்தாலும், அது அளிக்கிற துன்பம் பொருளாதார ரீதியிலான பாரபட்சத்தை விடக் குறைந்த ஒன்றல்ல."

டாக்டர். அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 5, பக்கம் 109

இந்தியாவில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களிடையே தோன்றிய தலைவர்களுள், தாழ்த்தப்பட்ட மக்களால் மிகவும் விரும்பப்படுகிற தலைவரும், ஜாதி இந்துக்களால் மிகவும் வெறுக்கப்படுகிற தலைவரும் அண்ணல் அம்பேத்கர்தாம். தாழ்த்தப்பட்டவர்களிடையே அவரை விரும்பாதவரும், ஜாதி இந்துக்களிடையே அவரை விரும்புபவர்களும் கொஞ்சம் இருக்கலாம். அவர்கள் விதி விலக்கானவர்கள் என்று சொல்லத் தகுந்தவர்கள். ஏன் இந்த நிலை? இந்திய சமூகத்தையும், தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சனைகளையும் நுட்பமாகவும், ஆழமாகவும் பார்த்து புரிந்து கொண்டவரும், அதை மிக வலிமையாக முன்வைத்தவருமான அம்பேத்கருக்கு ஈடான ஒரு தலைவர் எவரும் இல்லை. அந்தக் காரணத்தை முன்னிட்டே தலித் மக்களால் அவர் போற்றிக் கொண்டாடப்படுவதும், ஜாதி இந்துக்களால் அவர் இகழ்ச்சிக்கு உள்ளாக்கப்படுவதும் நடந்து கொண்டேயிருக்கிறது.

எம்.சி.ராஜா போன்ற தன்னலவாதிகளைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால், சமகாலத்தில் அம்பேத்கர் மீது விமர்சனம் என்கிற பெயரில் அவதூறு செய்பவர்களின் பட்டியலைப் பார்த்தால் அவர்கள் அனைவரும் ஜாதி இந்துக்களாய் இருப்பது தெரிய வரும். பார்ப்பனக் கருத்தியலாளர்களின் குரலாக, பூரி சங்கராச்சாரி, அருண்ஷோரி போன்றோர் அம்பேத்கர் மீது அவதூறு பரப்பி, அது எந்த விளைவையும் தமக்குச் சாதகமாக ஏற்படுத்தாத நிலையில் சோர்ந்து போய், அவர்களுக்கு கருத்தியல் தலைமையை அளிக்கும் சங் பரிவார் கும்பலே, அம்பேத்கரைச் சொந்தம் கொண்டாடி உறவு பாராட்ட முடியுமா எனப் பம்மாத்து பண்ணிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், ஆந்திராவில் இருந்து புறப்பட்டவரும் ஆதிக்கச் ஜாதி பின்புலத்தில் இருந்து வருபவருமான ரங்கநாயகம்மா என்பவர், தன்னுடைய ஆதிக்க இடை ஜாதி பின்புலத்தை மறைத்து மார்க்சிய பின்புலத்தில் இருந்து வருவதாகக் காட்டிக் கொண்டு, அம்பேத்கர் மீது அவதூறுகளை அள்ளி வீசி, அவற்றை நாடு முழுவதும் பரப்பிவிடும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். அந்த வகையில் பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கில் எழுதிய தன்னுடைய குப்பை நூலை, தானே தன்னுடைய சொந்தச் செலவில் தமிழில் ஒரு பார்ப்பனப் பெண்மணியைக் கொண்டு மிகக் கேவலமான முறையில் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறார்.

இந்தியாவிலுள்ள கம்யூனிச இயக்கங்களைச் சேர்ந்தவர்களைப் பொருத்த வரையில், அம்பேத்கர், பெரியார் ஆகிய மாபெரும் மக்கள் தலைவர்களின் இயக்கங்களை சாதகமாகப் பார்த்தவர்களில்லை. எதிர் நிலையில் வைத்தும், முடிந்தவரை அலட்சியமாகவுமே அவ்வியக்கங்களைக் கம்யூனிஸ்டுகள் மதிப்பிட்டு வந்துள்ளனர். கடந்த பத்தாண்டு காலமாக பலவீனமடைந்த தங்கள் நிலையை மீண்டும் நிலைப்படுத்தும் விதமாகவும், இயல்பான சுயவிமர்சனப் போக்கோடும் அடித்தள மக்களின் இயக்கங்களை அனுசரித்துப் போகின்ற போக்கு மேலெழுந்துள்ளது. குறிப்பாக, அம்பேத்கர் கடந்த அறுபது எழுபதாண்டுகளில் இல்லாத மாயமாகப் பொது வெளிகளிலும், படித்த இளைஞர்கள் மத்தியிலும் மரியாதையுடனும், பிரியத்துடனும் பார்க்கப்படுகிறார் என்ற நிலை உள்ளது.

தொண்ணூறுகளின் தொடக்க ஆண்டுகளில், அம்பேத்கரின் நூல்கள், அவரது நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களையொட்டி ஆங்கிலத்திலும், பல்வேறு இந்திய மொழிகளிலும் வெளியிடப்பட்ட நிகழ்வு மேற்கூறிய நிலை ஏற்படுவதற்கு முக்கியப் பங்காற்றியது எனலாம். அதைத் தொடர்ந்து, ஆள்கின்ற ஆதிக்க ஜாதிக் கருத்தியல் சார்பானவர்களுக்கு இது எரிச்சலை உண்டு பண்ணியது. அருண்ஷோரி, ஜெயமோகன், ரங்கநாயகம்மா போன்றோரின் அம்பேத்கரை அவதூறுகள் மூலமாக இழிவுபடுத்த முயலும் - நூல்கள் இதன் தொடர்ச்சியாக வருவனவே அன்றி வேறில்லை.

அம்பேத்கரை பின்பற்றுபவர்கள் என்கிற வகையில் இது போன்ற அவதூறுகளையும், அவர் கற்றுக் கொடுத்த ஜனநாயக மதிப்பீடுகளின் அடிப்படையில் விமர்சனங்கள் என்றே எடுத்துக் கொண்டு, அவற்றுக்குப் பதிலிறுக்க வேண்டியதாய் இருக்கிறது. அதோடு, விவாதம், உரையாடல் என்று ஜனநாயகச் சமூகம் புழங்கும் வெளிகளில் நமக்கு இயங்குவதற்கு ஒரு தடையும், தயக்கமும் இல்லை என்பதாலும், எதிர்க் கருத்தாளர்களை இல்லாமல் செய்து அதன் மூலம் எதிர்க்கருத்து இல்லாமல் பார்த்துக் கொள்ளும் பாசிசச் செயல்பாடுகளை எதிர்ப்பவர் என்கிற வகையில் இது நமது கடமையும் ஆகிறது என்பதாலும் இது தவிர்க்க இயலாத ஒன்றாகிறது.

நாம் பொருட்படுத்திப் பொறுமையாகப் பதிலளிக்க முற்படுகிறோம் என்பதாலேயே இது பொருட்படுத்தப்பட வேண்டிய நூல் ஆகிவிடாது. பரந்த வாசிப்பும், ஆழ்ந்த தேடலும் கொண்ட முதன்மையான அறிஞரான பாபா சாகேப் அம்பேத்கருக்கு, எந்த விதத்திலும் நியாயம் செய்து விடாத அக்கப்போர் குவியல் அந்நூல். அம்பேத்கரின் சில குறிப்பிட்ட நூல்களை மேலோட்டமாக வாசித்ததற்கு மேல், அவற்றை விமர்சிக்கத் தேவையான சிறு உழைப்பையும் செய்யாத ஒரு சோம்பேறியான அராத்துப் பேர்வழியின் தடித்தனம் நூல் வடிவம் பெற்றுள்ளது. உதாரணத்திற்கு ''தீண்டத்தகாதவர்களின் எண்ணிக்கை 1951 மக்கள் தொகைக் கணக்குப்படி 5 கோடியே 13 லட்சம். இத்தனை கோடி மக்கள் தீண்டாமைக்கு உள்ளானவர்கள்” என இந்தப் பெண்மணி நீட்டி முழக்குகிறார். நமது கேள்வி எல்லாம், அம்பேத்கர் 1956 இல் மறைந்த பிறகு இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவது நிறுத்தப்பட்டு விட்டதா என்ன? கணினியில் ஒரு தட்டு தட்டினால் ஒரு நொடியில் 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி தாழ்த்தப்பட்ட மக்களின் மக்கள் தொகை இவ்வளவு என்று வந்துவிடப் போகிறது. அதற்குக் கூட மெனக்கிடாமல் அம்பேத்கரைக் பசரித்துத் தொங்க விட்டு விடுகிறேன் பார் என வெட்கமும் பபிளஸ்தையும் இல்லாமல் ரங்கநாயகம்மாக்கள் வந்துவிடுகின்றனர். மயல் சுரண்டல், சுரண்டல் என பக்கங்கள் முழுவதும் ஒரே பிறாண்டல். இந்நூல் முழுக்க நீங்கள் செய்ததற்குப் பெயர் என்ன? பாயும் பட்டினியுமாய் தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்த அறிஞன் மாத முயற்சியின் எல்லைகள் தொட்டுச் சேகரித்துக் கொண்டு வந்த அறிவை, ஜாதித் திமிரில் எடுத்துப் போட்டு நொட்டை சொல்லிக் கொண்டிருப்பதன் பெயர் தான் புரட்சிகரமோ? புரட்சித் தலைவர், புரட்சிக் கலைஞர், புரட்சித் தலைவி உள்ள நாட்டில் புரட்சிதான் பாவம் என்ன பாடு படுகிறது?

அம்பேத்கர் சிலைகள் எண்ணிக்கையில் அதிகமாய் இருப்பதுவும் 1லவரங்களின் போது அச்சிலைகள் மட்டுமே குறி வைத்து உடைக்கப்படுவதும் அவமரியாதை செய்யப்படுவதும் ஏன் என எண்ணிப் பார்த்திருக்கிறீர்களா? மிருகக் காட்சி சாலை விலங்குகளைப் போல், அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களின் சிலைகள் தமிழக வீதிகளில் கூண்டுகளில் அடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு வியந்திருக்கிறீர்களா?

இந்தியாவின் ஆதிக்க ஜாதி மனம் ஒடுக்கப்படுபவர்களுக்கு எதிரான தனது மேலாதிக்கத்தை நிறுவ, கொடுங்கோன்மையைத் தனது முக்கியமான ஆயுதமாகக் கருதுகிறது. இந்தக் கொடுங்கோன்மையின் ஒரு வடிவமே சிலையுடைப்பு நடவடிக்கையாக அமைகிறது. அம்பேத்கர் சிலைகள் தலித் எழுச்சியின் ஸ்தூல வடிவமாகவும், தமது எதிர்காலம் குறித்த அவர்களது கனவின் ஒரு பருண்மையான உருவாகவும் விளங்குகின்றன. அந்தக் கனவைக் கொள்ளையடித்துச் சூறையாடும் நடவடிக்கையாகவே ஜாதி இந்து சமூகம் இதைக் கையாளுகிறது.

தாங்கள் மிகக் கீழான நிலையில் இருக்கிறோம். அந்நிலையில் இருந்து தங்களை மீட்டெடுக்க சக்தி வாய்ந்த தத்துவத்தையும், வழியையும் தங்களது தலைவர் தந்திருக்கிறார். அவரை ஆதர்சமாகக் கொண்டும், அவர் காட்டிய வழியில் செல்வதின் மூலம் என்றேனும் தாங்கள் அனுபவிக்கும் வழிவழியாய்த் தொடரும் இத்துன்பங்களிலிருந்து விடுபட்டு விடுவோம் என்கிற நம்பிக்கையின் அத்தாட்சியாய் விளங்கிக் கொண்டிருப்பவை அம்பேத்கர் சிலைகள். அவர் மீது தலித் மக்கள் கொண்டிருக்கும் அன்பின், நன்றியுணர்ச்சியின் வெளிப்பாடாகவும் திகழ்பவை அவை. இதை ஜாதி இந்து சமூகம் நன்கு உணர்ந்து கொண்டுள்ளது. அதனால்தான் அம்பேத்கர் சிலைகள் குறிவைக்கப்படுகின்றன.

அவர் சிலை மீது கைவைப்பவர்களின் கண்களுக்கு இந்த நாட்டுக்கும் அதன் ஒட்டு மொத்த மக்கள் சமூகத்திற்கும் ஆற்றிய பணிகள் பற்றியெல்லாம் எதுவும் தெரிவதில்லை . அவர் இல்லாத இந்திய சமூகம் எந்த நிலையில் இருந்திருக்கும் என்பது பற்றி எல்லாம் அவர்களின் நினைவில் எதுவும் தோன்றுவதில்லை. அவர் தாழ்த்தப்பட்ட சாதியில் தோன்றிய ஒரு தாழ்த்தப்பட்டவர். எந்நிலையிலும் அவர் தங்களுக்கு (ஜாதி இந்துக்களுக்கு ஈடானவர் அல்லர். எனவே, அவருக்குத் தாங்கள் செய்யும் அநீதி இயல்பான ஒன்றே ஆகும். அது இந்நாட்டின் மரபு கட்டிக்காக்கும் மாற்றவியலா விழுமியத்தின் பாற்பட்டதே ஆகும். தவிரவும் சிலையாய் இருக்கும் இம்மாமனிதனின் மேல் கை வைப்பதன் மூலம் ஒரேயடியில் இந்த கீழ் ஜாதிப் பயல்கள் அத்தனை பேரையும் கையறு நிலைக்குத் தள்ளிவிட முடியும். இப்படி எண்ணும் விதத்தில்தான் இருக்கிறது ஒரு ஜாதி இந்துவின் மன வடிவமைப்பு.

ஜாதி இந்துக்கள் என்ற உடனேயே நமக்கு கைர்லாஞ்சி, சுண்டூர், மேலவளவு போன்ற கிராமங்களில் வசிக்கும் கல்வியறிவில் குறைந்த, நாகரிகம் தெரியாத மக்கள் என்கிற சித்திரமே தோன்றுகிறது. ஆனால், ஜாதி இந்து என்கிற விளிப்பில், அவர்களை விட உயர் படிப்பு படித்த, உயர் பதவி வகிக்கின்ற, கோட்டு சூட் அணிந்த, பட்டுச் சேலைகள் உடுத்தியவர்கள் நம் நினைவுக்கு வர வேண்டும். கொடூரத்திலும், தந்திரத்திலும் இவர்கள் முதலில் கூறப்பட்டவர்களை விடவும் கூடியவர்கள். சொல்லப் போனால் அத்தனைக் கொடூரங்களுக்கும் தத்துவ விளக்கமும், மயிர்க் கூச்செறிய வைக்கும் நியாயமும் வழங்குபவர்கள் இவர்களே. இவர்கள் பரந்து பட்டவர்கள். பல்வேறு விதமான வழிபாட்டு முறைகளைப் பின்பற்றுபவர்கள். பல்வேறு விதமான கொள்கைகளைப் பின்பற்றுபவர்கள். ஆனால் நடைமுறையில் ஜாதியைப் பேணுபவர்கள்.

மேலே சொன்ன மாதிரி பல்வேறு விதமான கொள்கைகளைப் பின்பற்றுபவர்கள் என்கிற தொகுதியில், மார்க்சியத்தைப் பின்பற்றுபவர்கள் அடங்கமாட்டார்கள் என்பது பொதுவான நம்பிக்கை. ஆனால், அவர்களும் ஜாதியத்துக்கு தங்களால் ஆன திருப்பணியைச் செய்பவர்கள்தாம் என்கிற உண்மை பல்வேறு தருணங்களில் வெளிப்படவே செய்கிறது. அதற்கு சமீபத்திய உதாரணம் ரங்கநாயகம்மா எழுதிய 'சாதிய பிரச்சனைக்குத் தீர்வு : புத்தரும் போதாது! அம்பேத்கரும் போதாது! மார்க்ஸ் அவசியத் பாவை!' நூல் ஆகும்.

வீதிகளில் நிற்கும் அம்பேத்கர் சிலையை உடைப்பவர்களின் வேலை மிகச் சுலபமானது. அச்சிலைகள் எந்த எதிர்ப்பையும் காட்டமாட்டா. 41, எனால் இது போன்ற நூல்களின் மூலம் அம்பேத்கரைக் கொச்சைப்படுத்தி அவதூறு செய்ய முற்படுபவர்களுக்கு அதாகப்பட்சக் கொடூரமும், தந்திரமும் மனிதப் பண்புகளை உதிர்த்து விட்ட நிலையும் தேவைப்படும். இந்த அனைத்து நிலைகளையும் அவரது நூலை வாசிப்பவர் காணலாம்.

அம்பேத்கரின் அனைத்துப் பரிமாணங்களையும் மறுத்து, ஒன்றுமில்லாதவராகக் காட்டுவதோடு, அவருக்கு 'கைக்கூலி', 'முட்டாள்' என்பது போன்ற பட்டங்களைச் சூட்டிவிட வேண்டும் என்கிற முயற்சியில், ரங்கநாயகம்மா விவஸ்தை, அடிப்படை அறவியல் உணர்ச்சி அனைத்தையும் உதிர்த்து விட்டு நின்றிருக்கிறார். (8)ந்திய ஜாதி இந்துவின் உண்மையான முகத்தை அறிய விரும்புபவர்களுக்கு ரங்கநாயம்மாவைக் காட்டலாம்.

பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர் இந்திய சமூகத்தின் பல்வேறு துறைகளிலும் பங்களித்தவர். இந்திய சமூகத்தை மிக ஆழமாக ஆய்வு செய்த ஆய்வறிஞர். இந்து மதத்தை நுட்பமாகக் கட்டுடைத்துப் புரிய வைத்தவர். அரசியல் அரங்கில் மிக முக்கியமான பங்கு வகித்து பு, அரசியலின் திசைவழியைத் தீர்மானித்தவர். பொருளாதார அறிஞர். இலக்கியம், சட்டம் என அவரது தாக்கம் இல்லாத துறைகளே இல்லை. இத்தனைத் துறைகளிலும் அவரது பங்களிப்பு ஒன்றுமே இல்லை எனச் சொல்ல வேண்டும்; இல்லாவிட்டால் அம்பேத்கரது திரு உருவைத் தொடக் கூட முடியாமல் தோல்வியை ஒப்புக் கொள்ள வேண்டும். எனவே, ரங்கநாயகம்மா மானம், வெட்கம் பார்க்காமல் தனது தடித்த ஜாதித் தோல் மேலுள்ள நம்பிக்கையில் துணிந்து இறங்கியிருக்கிறார்.

அம்பேத்கரை மறுத்து இந்து மதத்தைக் காப்பாற்றி விட முடியாது என ரங்கநாயகம்மாவுக்குத் தெரியும். எனவே, தனது பங்குக்கு இரண்டு தூஷண வார்த்தைகளை இந்து மதத்தின் மீது விட்டெறிந்துள்ளார். இப்படி தூஷித்து விட்டுப் போவதுதான் சரி; அதைவிட்டுவிட்டு பிறப்பு முதல் இறப்பு வரை நாளின் ஒவ்வொரு நொடியிலும் ஒவ்வொரு குடிமகனின் ஒவ்வொரு அசைவையும், அவனது சிந்தனையையும், கண்ணோட்டத்தையும் தீர்மானிக்கும் இந்து மதத்தை அம்பலப்படுத்துவது வேலையற்ற வீண்வேலை; இந்த வேலையில் ஈடுபட்ட அம்பேத்கர் நீரிறைக்கும் எருது போல மந்த புத்தி உள்ளவர் என்பது போல் அவதூறு செய்கிறார். இந்த அவதூற்றின் மூலம் ஒரே நேரத்தில் அம்பேத்கரின் மாபெரும் உழைப்பை ஒன்றுமில்லை என்று சொல்லிவிட முடிகிறது; அதோடு இந்து மதத்தையும் பெரும் சேதாரத்திலிருந்து காப்பாற்றி விட முடியும் என ரங்கநாயகம்மா நம்புகிறார்.

இந்து மதம் குறித்த அம்பேத்கரின் பங்களிப்புகளை வேலையற்றவனின் வீண்வேலை என்று பசப்புகிற செயல் நடைபெறுகிற காலச் சூழல் மிக முக்கியமானது. பாபர் மசூதி இடிப்பு, சேதுக்கால்வாய்த் திட்ட முடக்கம், பசுவதையின் பெயரில் அடித்தட்டு சிறுபான்மை மக்களை வன் கொலை செய்வது என்று மிக வெளிப்படையாகப் பரந்துபட்ட அளவில் இந்தியா முழுவதும் உள்ள சனாதனிகளையும், அவர்களுக்கு ஆதரவான சொரணையற்ற அடிவருடிகளையும் திரட்டுவது என்கிற சூழலில் இது நடக்கிறது. இந்துக்களின் மதம் சார்ந்த நம்பிக்கைளில் நீதிமன்றங்கள் உட்பட யாரும் தலையிட உரிமையில்லை என்று கொக்கரிக்கின்ற காலச் சூழலில் ராம பக்தர்களைக் கொன்றுவிட்டார்கள் என்கிற பெயரில், மாநிலம் முழுவதும் உள்ள சிறுபான்மை முஸ்லிம்களில் ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்று குவித்து, பல லட்சக்கணக்கானவர்களை அகதிகளாக அவர்களது இருப்பிடங்களில் இருந்து துரத்திவிட்டு, அவர்களின் உடைமைகளைக் கொள்ளையடித்து, பெண்களைக் கூட்டுப்பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கி, இவை அத்தனையையும் செய்வதற்கான பலத்தை இந்து மதம் என்கிற ஒன்றிலிருந்து பெற்று, அதன் தொடர்ச்சியாய் ஆட்சி அதிகாரத்தையே தங்கள் கையில் வைத்துக் கொண்டு மக்களை வதைத்து எடுத்துக் கொண்டிருக்கும் ஒரு சூழலில், அம்பேத்கரின் இந்து மதம் குறித்த விமர்சனங்கள் தேவையற்றவை; அப்படித்தான் நான் படித்த மார்க்சியம் எனக்குச் சொல்லித் தந்தது என்று ஒரு சீமாட்டி சொல்கிறார் என்றால் அதன் பின்னணி என்ன? அதற்குச் சில அற்பங்கள் லாலி பாடுகின்றனர் என்றால் அதன் அர்த்தம் என்ன?

இந்திய சமூகத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் 15 சதவீதமானவர்கள். எஞ்சியுள்ள பெரும்பான்மையினர் அம்பேத்கரைப் பொருட்படுத்த வேண்டாதவர்கள் பட்டியலில் வைத்துள்ள ஜாதி இந்துக்கள். அவர்களின் கருத்தியல் காலனியாதிக்கத்திற்குள் இருப்பவர்கள், மிலாடி நபிக்கு விடுமுறை விடுவது போல் அம்பேத்கர் பிறந்த நாளுக்கும் விடுமுறை விட்டுத் தொலைய வேண்டியிருக்கிறது என்ற நினைப்பில் இருப்பவர்கள். இவர்களுக்கு அம்பேத்கர் அந்நியமான ஒரு நபர். எஞ்சியிருக்கிற தலித்துகளில் உள்ள கருத்தியல்வாதிகள் அற்பமான எண்ணிக்கையில் உள்ளவர்கள். கருத்தியலை எழுத வல்லவர்கள் அற்பத்திலும் சொற்பமானவர்கள். இந்நிலையில், இது போன்ற அக்கப்போர்களுக்கு ஒரு சில சலசலப்புகள், சின்ன எதிர்வினைகள்; இதைத்தாண்டி எதுவும் நடக்காது என்கிற நம்பிக்கையில் ரங்கநாயகம்மா போன்றவர்கள், நாம் தானே மெஜாரிட்டி என்கிற மிதப்பில் விமர்சிக்கக் கிளம்பி வந்துவிடுகின்றனர். பரவாயில்லை ! இந்த முறை நாம் அவர்களின் யடுக்குத் தனத்தை அடக்கி வைப்போம்; அவர்களின் அவதூறுகளை ஒவ்வொன்றாக எதிர் கொள்வோம் என்கிற முயற்சியோடுதான் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

இந்நூலை எழுதிக் கொண்டிருந்த போதுதான், இந்திய அறிவுலகம் எவ்வளவு கேடு கெட்டது என்பதை உணர முடிந்தது. 1956க்குள் 1, னது இயக்கத்தை முடித்துக் கொண்ட ஓர் அறிஞரை அவர் சமகாலத்திலும் கொண்டாடாத அறிவுலகம் - இதில் இடதுசாரி அறிவு ஜீவிகளும் அடக்கம் - அவர் மறைந்து அறுபதாண்டுகள் கழித்தும் அவரது பங்களிப்பை முற்றிலும் துவேசத்துடனேயே எதிர்கொள்கின்ற நிலையை என்வென்று சொல்வது? இந்த நாட்டில் பிறந்ததற்காக ஒரு அம்பேத்கரின் மாணவனாக உண்மையிலேயே நான் வெட்கப்படுகிறேன்.

அவருடைய எழுத்துகளில் 'சூத்திரர்கள் யார்' என்ற நூலைப் பொருத்தவரை, அவருடைய ஆய்வு முடிவான ஆரியர்கள் இந்தியாவின் பூர்வகுடிகள்தான் என்பதை இன்றைக்கு கிடைக்கின்ற தரவுகள் மறுப்பதாக இருக்கின்றன. இருந்தாலும் அந்த ஆரிய சமூகத்தைப் பற்றியும், சூத்திரர்களைப் பற்றியுமான அவரது ஆய்வு சமகாலத் தேவையை நிறைவு செய்வதாகவே இருக்கிறது. மற்றபடி, எனது இந்த நூலில் இடம் பெற்றுள்ள அம்பேத்கரின் எழுத்துகளைப் பொருத்தமட்டில், அவற்றை ஆங்கிலத்தில் இருந்து எனது மொழியாக்கத்தில் எடுத்தாண்டுள்ளேன். தமிழில் 37வது தொகுதியாகவும் ஆங்கிலத்தில் 17(3) என்பதாகவும் இடம் பெற்றுள்ள தொகுதியை மட்டும் என்னால் பெற முடியவில்லை என்பதால் அந்த 37ஆவது தொகுதியில் இடம் பெற்றவை மட்டும் தமிழ்த் தொகுப்பில் இடம் பெற்றுள்ளவாறு எடுத்தாண்டுள்ளேன்.

இப்படியொரு நூல் எழுதுவதின் அவசியத்தை வலியுறுத்தி என்னோடு சண்டை காட்டாத குறையாக அடித்துக் கொண்ட நண்பன் நீலகண்டனை இந்நேரத்தில் நினைத்துக் கொள்கிறேன். என்னுடைய பெரும்பாலான நண்பர்கள் ரங்கநாயகம்மா புத்தகத்தை ஒரு ஏளனத்துடன் கடந்து போவதே சரியானது என அபிப்ராயப் பட்டார்கள். அவர்களின் அக்கறையும் நியாயமானதே. வழக்கம் போல இந்நூலையும் வெளியிடும் கருப்புப் பிரதிகள் பதிப்பாளரும், நண்பனுமான நீலகண்டனுக்கும், என் தோன்றாத் துணை ஜெயந்திக்கும், தமிழ்நாடு சாக்கிய அருந்ததியர் சங்கத் தோழர்களுக்கும், பிற நண்பர்களுக்கும் அதிலும் குறிப்பாக 'இன்னுமா எழுதிக் கொண்டிருக்கிறாய்' என்று உசுப்பேற்றிவிட்ட நண்பன் ஷோபாசக்திக்கும் நன்றி சொல்வது வழமையானதென்ற போதும், பழக்கத்தின் ஒழுங்கு படிந்த சடங்காக அல்லாமல், மனப்பூர்வமான ஒரு செயலாக அதைச் செய்கிறேன். நன்றி.

ம. மதிவண்ணன்

Previous article திராவிடர் இயக்கப் பார்வையில் பாரதியார் - ஆசிரியர் குறிப்பு