திருக்குறள் - புலவர் குழந்தை உரை - முகவுரை

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/thirukkural-pulavar-kuzhanthai-uarai-poombuhar-pathippagam
முகவுரை

 

தமிழர் பண்பாட்டுக்குச் சான்றாக உள்ள பழந்தமிழ் நூல்களுள் திருக்குறளே தலையாய நூலாகும். திருக்குறள் திருவள்ளுவர் என்னும் பழந்தமிழ்ப் பெரியாரால் செய்யப்பட்டது; தமிழ்மக்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் படித்துப் பயன்பெற வேண்டிய இன்றியமையாச் சிறப்பினையுடையது. வள்ளுவர் குறளைப் படிப்போர், வள்ளுவர் காலநிலை, வள்ளுவர் நூல் செய்த முறை, திருக்குறளின் பெருமை, பொருள் கொள்ளுமுறை ஆகியவற்றை நன்கு தெரிந்து கொள்ள வேண்டும்.

வள்ளுவர் காலநிலை: வள்ளுவர் காலத்தே, அவர் காலத்திற்குப் பன்னெடுநாள் முன்னர் இமயமலைக்கு வடபாலிருந்து வந்து, இமயமலைக்கும் விந்தமலைக்கும் இடைப்பட்ட நிலமாகிய வடநாட்டில் குடியேறி வாழ்ந்து வந்த வடபுலமக்கள் சிலர் தமிழகத்தில் குடியேறி வாழ்ந்து வந்தனர். தமிழ்மக்கள் அவர்களை அன்புடன் வரவேற்றுப் போற்றி வந்தனர். அவ்வடபுல முதியோர், தமிழ்த்துறவிகளான அந்தணர்களைப் போல மதிக்கப்பட்டு வந்தனர். அக்குடும்பத் தலைவர்களிற் பெரும்பாலோர் தமிழ்ச் செல்வர்களிடம் பாங்கத் தொழிலின் ஒரு பகுதியான பார்ப்பனத் தொழில் செய்து வந்தனர். குடியேறிகளான அவ்வட புலமக்கள் தங்கள் குலத்தொழிலெனக் கொலைவேள்வி செய்து வந்தனர் (259). அவ்வேள்வியால் பெரும்பயன் உண்டாகும் என்னும் அவர் கூற்றினைத் தமிழ்மக்கள் நம்பி வந்தனர் (328). அவ்வடவர் கொள்கைகள் சில தமிழரிடைப் பரவியிருந்தன. அன்னார் கூறிய பல கற்பனைக் கதைகளைத் தமிழ்மக்கள் தெரிந்திருந்தனர்; சில கற்பனைகளை உண்மையென நம்பியும் வந்தனர். அவ்வடபுலப் பிறவி வேற்றுமைப் பிணி தமிழ்மக்களை ஒருவாறு பிணிக்கத் தொடங்கியிருந்தது (972). அதனால், தமிழ்மக்களின் ஒன்றுபட்ட ஒருமை வாழ்வு சிதையத் தலைப்பட்டது. தமிழர் பண்பாட்டை அவ்வடபுலப் பண்பாடு விழுங்கி வந்தது.

வடபுலத்தார்: அவ்வடபுலமக்கள், தங்கள் பழைய தாயகத்தில் வாழும் தம்மவர் மேலானவர், இந்நாட்டு மக்களிலும் உயர்ந்தவர்; யாதொரு கட்டுப்பாடுமின்றித் தம் விருப்பம் போல் நடந்து கொள்ளும் இயல்பினர் (1072). அவர்கள் தலைவனான இந்திரன் மிக்க வலியும் பெருமையுமுடையோன் (25). அந்நாடு செல்வமிக்க நன்னாடு; துன்பமென்பது அங்கில்லை, இன்ப வடிவானது என்பன போன்ற தம் இனப் பெருமையைத் தமிழ்மக்கள் நம்பும்படி செய்திருந்தனர்.

தமிழ்மக்கள் அவ்வடவரின் பழந்தாயகத்தினரான அவ்வடபுலத்தாரை வானோர் (18, 316), விசும்புளார் (25), தேவர் (1072), தெய்வம் (50), புத்தேளிர் (58, 213, 234, 290, 966), இமையார் (906), புலவர் (234) எனவும், அவ்வடபுலத்தார் வாழ்விடத்தை வானகம் (101), மேலுலகம் (222), புத்தேளுலகம் (213, 234, 290), புத்தேள் நாடு (966, 1323), தாமரைக் கண்ணானுலகு (1103) எனவும் அழைத்து வந்தனர்.

மேற்குத் தொடர்ச்சி மலைச்சாரலின் உயர்ந்த மேட்டு நிலத்திலிருந்து சேர நாட்டை யாண்டுவந்த சேரமன்னரை வானவர் (புறநானூறு 36, 126), வானவரம்பர் (புறம் 2, பதிற்றுப்பத்து 35, 58) என அழைத்துவந்தது போலவே, பனிமலையின் வடபால் உயர்ந்த மேட்டு நிலத்தில் வாழ்ந்து வந்ததால் தமிழ்மக்கள் அவர்களை வானோர், என அழைத்தனர். வான் - உயர்வு. வானகம் - உயர்ந்த இடம். வானோர் உயர்ந்த இடத்தில் வாழ்வோர். இதுபற்றியே 'உயர்ந்தவர்' என்றதும், விசும்பு - வான். மேலுலகம் என்றதும் அப்பொருளதே. திசைபற்றி ஐரோப்பா மேனாடு எனவும், மலேயா முதலியன கீழ்நாடு எனவும் வழங்குதல் போல, இடம் பற்றி அது மேலுலகம் எனப்பட்டது.

தேவர் - மேலானவர். போற்றற்குரியவர். முன்னது 'மேலானவர்' என்னும் வடவர் கூற்றினைக் கொண்டு கூறியது. மேலிடத்தினர் என்பது பொருள். பின்னது - புதிதாகவரும் அயல்நாடரை அன்புடன் வரவேற்றுப் போற்றும் தமிழர் பண்பாட்டினால் வந்தது. தேவர் என்னும் பெயர் திருவள்ளுவர் பெயர்களுள் ஒன்றாக இருப்பதும், வேளாண்குடி மக்களுக்குத் தேவர் என்னும் பட்டப் பெயர் வழங்கி வருவதும், மறக்குடி மக்களாகிய மறவர் குலம் தேவர் குலம் என்னும் பெயராலேயே இன்றும் அழைக்கப்படுவதும், வடமொழியைத் (சமஃச்கிருதம்) தேவ மொழி என்பதும், கிழக்கு நாட்டு மக்கள் நாகர் என அழைக்கப்பட்டது போல், தேவர்களுக்கும் நாகர் என்னும் பெயர் இருப்பதும், இந்நாட்டில் இருந்த அசுரர், அரக்கர் என்போர்களுக்கும், தேவர்களுக்கும் அடிக்கடி போர் நடந்தது; அசுரரும், அரக்கரும் தேவர்களைச் சிறையிலிட்டனர் என்பதும், தேவர் என்போர் மக்களில் ஒருவகையினரே என்பதற்குச் சான்றாகும்.

தெய்வம் என்பதும் மேலானவர் என்னும் பொருளைக் கொண்டு கூறிய பெயரேயாகும். தெய்வம் - மேன்மை, சிறப்பு. தெய்வத் தமிழ், தெய்வப் புலவர், தெய்வப் புலமை, தெய்வத் தன்மை, தெய்வத் தாமரை, தெய்வ வுத்தி, தெய்வப் புணர்ச்சி எனக் காண்க. "பணியுமாம் என்றும் பெருமை, சிறுமை அணியுமாம் தன்னை வியந்து” (978) என்பது போலத் தேவரைத் தெய்வம் என்றார். பெருமை - பெருமையுடையார். சிறுமை - சிறுமை யுடையார். பெருமை, சிறுமை - பண்புப் பெயர்கள். பண்பால் பண்பியைக் குறித்தல் தமிழில் பெருவழக்கு.

மலையில் மூங்கில் ஒன்றோடொன்று தேய்வதனால் தீயுண்டாகிறது. கல்லைச் செதுக்கும்போது தீப்பொறி தோன்றுகிறது. இவற்றிலிருந்தே முதன்மாந்தர் தீக்கடை கோலும், சக்கி முக்கிக் கல்லும் கண்டுபிடித்திருக்க வேண்டும். பொருள்கள் ஒன்றோடொன்று தேய்வதனால் தீயுண்டாவதால் பழங்காலத் தமிழ் மக்கள் அதைத் தேய்' என்றனர். தேயு வடமொழி. தேய் என்பதே தேய் - தே - தீ எனத் திரிந்தது. உணவு சமைத்தல், குளிர் நீக்கம் முதலிய நன்மை குறித்துத் தீயை மேலானது எனப் போற்றி வந்தனர். தேய் என்னும் சொல்லி னடியாகப் பிறந்தவையே தேவன், தேவி, தேவர், தெய்வம் என்னும் சொற்கள். தேவன் - ஆண்பால். தேவி - பெண்பால். தேவர் - பலர் பால். தெய்வம் - பண்புப் பெயர். (தேய் உ - தேய்வு - தேவு. தேவு அன் - தேவன்; தேவு இ-தேவி, தேவி அர் - தேவர். தேய்வு - தெய்வு. தெய்வு அம் - தெய்வம் (ஒப்பியல் மொழி நூல் பக்கம் 237.) அரசனைத் தேவன் என்றதும் முதன்மையும் மேன்மையும் பற்றியேயாகும். தெய்வம் என்னும் சொல் 43, 55, 702 ஆகிய மூன்றிடத்தும் மேன்மையே குறித்தல் காண்க.

புத்தேள் - புத்தாள் என்பதன் திரிபு. புது ஆள் - புத்தாள். புதியவர் என்பது பொருள் புத்தேளிர் - பன்மை. இமையார் - பனிநாட்டினர். இமம் - பனி. இமயம் - பனிநாடு. அமச்சு - அமைச்சு என அகரத்திற்கு ஐகாரம் போலியானாற் போல, இமயார் என்பது இமையார் என்றாயது. இமயார் - இமயவர். புலவர்-புலம்-புல-புல அர்-புலவர். ஐம்புல நுகர்ச்சியுடையோர், மனம் போனபடி நடப்பவர். புலவு அர் - புலவர். புலவு - புலால். வேள்வி மூலம் புலவு உண்பவர் என்றுமாம். தாமரைக் கண்ணான் - இந்திரன்.

சீனர் முதலிய வெளி நாட்டினர் யாத்திரையராய் இங்கு வந்து போனது போலவே, அவ்வடபுலத்தாரும் இங்கு வரப்போக இருந்தனர். தமிழ்மக்கள் அவர்களை அன்புடன் வரவேற்றுப் போற்றி வந்தனர். தமிழர் பெருமை அவ்வானுல கெங்கும் பரவியிருந்தது (237) வானோர், வானகம், தேவர், மேலுலகம் என்னும் இவ்வரலாற்றுண்மையே காலக்கடப்பால், தமிழ் மக்களின் கருத்திலாப் போக்கால், கற்பனை மயக்கால், உட்பகைப் பெருக்கால், சமயச் சார்பால், தன்னுணர் விழப்பால் இன்றையத் தமிழ்மக்கள் எண்ணும் இப்புதிய நிலையை அடைந்து விட்டது. வானோரும் நம்போன்ற மக்களே யாவர் என்பதைச் சிறிதும் ஐயப்பாடின்றித் தெளிக.

வள்ளுவர் நூல் செய்த முறை: வள்ளுவர் ஓர் அறிவு நூற்புலவர்; அரசியலறிஞர்; தமிழர் பண்பாட்டின் பெருமையை நன்குணர்ந்தவர்; தமிழினப்பற்றுடையவர். ஆகையால், அவ்வடபுல மக்களின் பொய்க்கூற்றுக்களும், போலிக் கொள்கைகளும் தமிழ் மக்களிடைப் பரவி வருவதைத் தடுத்து விலக்கி, மேலும் பரவாமலிருக்க, தமிழ் மக்களின் பழக்க வழக்கங்களாகிய ஒழுக்க முறைகளை அகம்புறப் பாகுபாட்டைத் தழுவி அறம் பொருளின்பம் என முப்பாலாக்கி ஒரு நூல் செய்து, தமிழர் பண்பாட்டை நிலைநிறுத்த எண்ணினார். எனவே, தமிழர் மரபுக் கொவ்வாத அயற்கொள்கைகளை மறுத்தும், அவற்றை நம்பி வாழும் பொதுமக்களுக்கு எளிதில் பொருள் விளங்குதற் பொருட்டுப் பொதுமக்களிடைப் பரவியிருந்த அவ்வயற் கொள்கைகளைக் கொண்டு கூறியும், தமிழ் மரபு சிறிதும் கெடாது, தமிழ் இலக்கிய மரபுக்கேற்றவாறு பொருள் விளங்குதற் பொருட்டு, உலக வழக்கில் உள்ள சில வழக்காறுகளை நூல் மரபாகக் கொண்டும், செய்யுள் வழக்கில் சிறிதும் குறைவு படாது, மிகச் சிறுபான்மையான மக்களிடை ஓரொருகால் நடந்து வந்த தீய ஒழுக்கங்களையும் மிகைப்படக் கூறி விலக்கியும், தமிழர் ஒழுக்கச் சட்ட நூலாகிய திருக்குறளைச் செய்து முடித்தார்.

திருக்குறளின் பெருமை: திருக்குறள் ஒரு தனித்தமிழ் நூலாகும். திருக்குறள் அயற்கொள்கை எதிர்ப்பு நூலேயன்றி எந்த ஒரு அயற் கொள்கையையும் உடன்பட்டுக் கூறும் நூலன்று. தமிழர் வாழ்வே திருக்குறள், திருக்குறளே தமிழர் வாழ்வு என்னும் அவ்வளவு இன்றியமையாச் சிறப்பினையுடைய நூல் திருக்குறள்; உள்ளதை உள்ளபடியே உயரிய முறையில் எடுத்துரைக்கும் உண்மை நூல்; தமிழர் வாழ்வின் படப்பிடிப்பு! பழந்தமிழர் நாகரிக வாழ்வை அப்படியே நமக்குக் காட்டும் களங்கமற்ற காலக் கண்ணாடி! தொன்மையும் எதிர்மையும் ஒருங்கொப்பக் காட்டும் தொலைநோக்காடி! தமிழ்மக்களின் வாழ்க்கைச் சட்டம்! தமிழ் மக்களுக்கு வள்ளுவர் வகுத்தமைத்து வைத்த பாதுகாப்புப்படை! ஏன்? தமிழர்க்கு மட்டுமன்றி, குறள் உலகப் பொது நூல்! மக்கட் பண்பாட்டுச் சரக்கறை! எக்காலத்துக்கும் உரிய நூல்! இறவா நூல்! காலங் கடந்த நூல்! எனல் மிகையாகாது. 'அகர முதல' எனத் தமிழ் மொழியின் முதலெழுத்தில் தொடங்கி, பெறின்' என ஈற்றெழுத்தில் முடிவதால், 'தமிழ் மொழியே திருக்குறள்' என்னும் குறிப்புப் பொருளுங் கொள்க.

பொருள் கொள்ளுமுறை: திருக்குறளைக் கற்போர் அதன் பால், இயல்களுக் கேற்றவாறு அதிகாரப் பொருளைக் கொள்ளுதல் வேண்டும். துறவறத்திற்குரிய புலால் மறுத்தல், தவம், நிலையாமை' முதலியன அப்படியே இல்லறத்திற்கும், அருளுடைமை, வெகுளாமை, கொல்லாமை முதலியன அப்படியே அரசியற்கும், இன்பத்துப்பால் துறவறத்திற்கும் பொருந்தா. படைச்செருக்கு, பகைமாட்சி' இவற்றின் முன் அருள் நில்லாது. "குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து மானங் கருதக் கெடும்”. (1028) என்பது, 'காலமறிதல், மானம்' என்னும் அதிகாரங்கட் கொவ்வாமை யறிக.

துறவறவியல் 25-28, 33-37 அதிகாரங்க ளும், அரசியல் 39, 55-57, 59 அதிகாரங்க ளும், உறுப்பியல் 64, 69, 75, 77, 78, 86-88 அதிகாரங்களும் நீங்கலாக மற்றவையெல்லாம் பொது. இவ்வதிகாரங்களிலும் பொதுப் பொருளுள்ள குறட்பாக்கள் சில உண்டு. ஆட்சி தமக்கே யாதலான் அரசர், அமைச்சர், ஒற்றர், தூதர் இயல்புகளும் பொதுமக்கள் தெரிந்து கொள்ளுதல் வேண்டும். உலகியல்பை யறிந்து இன்பவாழ்வு வாழ்வதற்காக இல்லறத்தாரும் துறவற அறிவைப் பெறுதல் வேண்டும். இல்லறத்தி லிருந்தே பயிலும் துறவற இயல்புகளும் சில உண்டு. மக்களைத் தமர், பிறர் என வேறுபடக் கொள்வது இல்லறம்; தமர், பிறர் என வேறுபடுத்தாது எல்லோரையும் ஒப்பக் கொள்வது துறவறம் என்பதை உணர வேண்டும். பொருட்பாலில் கூறும் அரசியல் முறை பொதுப்படையாகவே உள்ளதால், எந்த அரசியல் முறையை விரும்புவோர்க்கும் ஒப்ப வுரியதேயாகும். இறைநலம் முதலிய நான்கதிகாரங்களும் உலகியற்கு அடிப்படையானவை யாதலால் நூலுக்கு முதலுறுப்பாகும். ஊழ் முப்பாலுக்கும் பொது. எனவே திருக்குறட்கு வேண்டுவார் வேண்டாதாரின்றி எல்லா மக்களும் உரியராவர். வள்ளுவர் காலத் தமிழர் வாழ்வை நினைவுகூர்ந்தே குறளின் பொருட் பயன் கொள்ளுதல் வேண்டும்.

நூன்மரபு: பொருள், குணங்களை ஆண்பாலாகவும், பெண்பாலாகவும் கூறுதல் நூல் மரபாகும். இறை நலம்' என்னும் முதலதிகாரம் பார்க்க நிலமென்னும் நல்லாள்' (1040), அழுக்கா றெனவொரு பாவி' (168) என நிலம் என்னும் பொருளைப் பெண்பாலாகவும், அழுக்காறு என்னும் குணத்தை ஆண் பாலாகவும் கூறுதல் காண்க. பாவி - தீயோன்.

செய்யாள் (84), செய்யவள் (167), தாமரையினாள் (617) எனச் செல்வத்தையும், தவ்வை (167), முகடி (617,936) என வறுமை யையும் பெண்பாலாகக் கூறியவாறு. செய்யவள் - இளையவள். தவ்வை - மூத்தவள். செல்வந் தீர்வதே வறுமையாதலால் செல்வத்தை இளையாள் எனவும், வறுமையை மூத்தாள் எனவுங் கூறினார். மேலும், செல்வம் விரும்பப்படுதல் பற்றிச் செய்யாள் எனவும், வறுமை வெறுக்கப்படுதல் பற்றிக் கரியாள் (617) எனவும் கூறினார். தாமரையினாள் - திருமகள். கல்வியும் செல்வமும் மனத்தை விட்டகலா மாண்பொருள்களாதலால் அவற்றைப் பெண்களாக்கி, மனத்தைத் தாமரையாக்கி, அதன் மேல் உள்ளனர் என்பது மரபு

Back to blog