இந்திய வரலாற்றில் பகவத் கீதை" என்ற இந்த ஆய்வு நூலை எழுதிய பிரேம்நாத் பசாஸ் அவர்கள் பிறப்பால் காஷ்மீர இந்து. காஷ்மீர் மாநிலத்தில் நுழையக்கூடாது என்று இந்திய அரசால் தடை விதிக்கப்பட்டவர். இந்து பாசிச அரசோடு சளைக்காது போராடியவர்.
வரலாறு தொடங்கிய காலத்திலிருந்து பார்ப்பனியம் இந்தியத் துணைக் கண்டத்திற்குச் செய்து வரும் கேடுகள் பற்றிய அவரது ஆதார உரைகளின் மெய்ந்நிலை சமகாலத்திலும் கண்ணெதிரே நடைபெறுவதைக் காண முடிகிறது. பகவத் கீதையின் கிருஷ்ணனையும் அருச்சுனனையும் ஒவ்வொரு தலை முறையிலும் ஏதேனும் ஒரு தீவிரவாத இந்துவின் வடிவத்தில் கண்டு கொண்டே இருக்க முடிகிறது. 'சம்பவாமி யுகே யுகே' என்று கூறிய அந்தப் பரமாத்மா, அநீதியை அழிப்பதற்கு அவதாரம் செய்வதற்குப் பதிலாகப் பார்ப்பனியத்திற்கு இக்கட்டு வரும் வேளையிலெல்லாம் இந்துத் தீவிரவாதியாக அவதரித்துக் கொண்டேதான் இருக்கிறார்.
தத்துவ நூல்களுக்கும் கலை இலக்கிய நூல்களுக்கும் மொழிப் பயன்பாட்டில் வேறுபாடு இருப்பதுண்டு. "இந்திய வரலாற்றில் பகவத் கீதை” என்ற இந்த நூல் தத்துவத் திறனாய்வு செய்வதோடு இலக்கியத் தன்மையோடு கூடிய சமகால வரலாற்று நூலாகவும் திகழ்கிறது. எனவே மொழியாக்கத்திற்காக நான் தேர்ந்து கொண்ட மொழிப் பயன்பாட்டு முறை, ஆங்கில மூல நூலில் பொதிந்துள்ள ஆசிரியரின் கூற்று நடையையும் தொனியை யும் முடிந்த அளவு துல்லியமாகப் பிரதிபலிக்க வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கிறது. அடை மொழிகள், அவை வினையடையாக இருப்பினும் அல்லது பெயரடையாக இருப்பினும் ஆங்கிலச் சொற்களின் நேரடி மொழியாக்கம் பெரும்பாலும் தவிர்க்கப்பட்டுள்ளது. தடுமாறும் அண்மையுறுப்பு (Ambiguous Immediate Constituant) அமையும் சொற்றொடர்களும், அமைப்பு மயக்கம் (Structural Ambiguity) உடைய சொற்றொடர்களும் தவிர்க்கப்பட்டுள்ளன. வேதப் பாடல் களுக்கு மரபுக் கவிதை முறையைத் தேர்ந்து கொண்டேன்.
இந்நூலின் தமிழ் மொழிபெயர்ப்பைச் செழுமைப்படுத்த உதவிய கண்ணன். எம். (பாண்டிச்சேரி பிரெஞ்சு இன்ஸ்டிடியூட்), எஸ். பாலச்சந்திரன் ஆகியோருக்கு நன்றி. கையெழுத்துப்படியைக் கணினியில் தட்டச்சு செய்ததோடு, திருத்தங்களை மீண்டும் மீண்டும் பதிவு செய்து பொறுமையுடன் பணியாற்றிய திருமதி சிவகாமி முருகானந்தம் அவர்களுக்கும் நன்றி.
- கே. சுப்பிரமணியன்