ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள் - பதிப்புரை

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/aariya-paarpanarin-alavirantha-kottangal
பதிப்புரை

பாவலரேறு ஐயா அவர்களின் நூல்கள் தமிழியக் கொள்கை நோக்கின. தமிழ் மொழி, இன, நாட்டு உரிமைகளுக்காகப் போர்ப்பறை கொட்டுவன.

அவரின் எண்ண மும், எழுத்தும் தமிழனின் அடிமை நிலைக்கெதிராக ஓயாமல் அலைவீசிக் கொண்டிருப்பன. அறிவின் பெருநெருப்பாய், ஆற்றலின் சூறைக்காற்றாய் இருந்த ஐயாவின் பேரியக்கம், அவரின் படைப்புக்களுள் இன்றும் கனன்று கொண்டிருக்கின்றன.

விடுதலை விடாய்த் தணியாத ஐயாவின் எழுத்துகள் உணர்வு சான்றன, பொய்ம்மையைச் சாய்த்து மெய்ம்மையை நிறுவச் செய்வன, ஆரிய இருள் கிழித்துத் தமிழிய ஒளி பாய்ச்சுவன, ஆளுமை அரசை வீழ்த்தும் பொதுமை வாழ்வு நோக்கியன.

எனவே அவரின் எழுத்து உயிர்ப்பாற்றல் கொண்டவை. உயிர்ப்பிக்கும் உணர்வு சான்றவை.

ஐயா அவர்களின் பாக்கள் எப்படி வீரிய ஆற்றல் சான்றவையோ அப்படி அவரின் உரைநடை நேரிய சீற்றம் கொண்டவை.

எவ்வகை அடக்குமுறைகளுக்கும் அடங்காமல் வீறிட்டுப் போர்க்குரலாய் ஒலிப்பவை.

ஆரியக் கொட்டங்கள் குறித்தும், சாதியத் தீமைகள் குறித்தும் ஐயா அவர்களின் உரைவீச்சுகள் எதிரிகளின் குலைகளை நடுங்க வைத்தன.

1995 - தம் வாழ்நாள் இறுதிநாள் வரை ஐயா அவர்களால் எழுதப்பெற்ற ஆரியப் பார்ப்பனர் குறித்த கட்டுரைத் தொகுப்புகள் யாவும் கால வரிசைப்படுத்தப்பட்டு ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்' எனும் இத் தலைப்பில் இடம் பெற்றுள்ளன.

‘ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்’ எனும் தனித் தலைப்பிட்ட கட்டுரை தென்மொழியின் ஆசிரியவுரையில் தொடராக வெளிந்தவை.

அத் தொடர் கட்டுரை சிறுவெளியீடாக மூன்று மறுபதிப்புகளோடு இதற்கு முன்னர் வெளியிடப் பெற்றிருக்கின்றன என்றாலும், ஆரியப் பார்ப்பனக் கொட்டங்கள் குறித்து ஐயா அவர்களால் எழுதப் பெற்ற அனைத்துக் கட்டுரைகளின் முழுத் தொகுப்பாக இந்நூல் இப்போதே முதல் பதிப்பாக வெளிவருகின்றது.

இத் தொகுப்புள் முதல் கட்டுரையாக ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள் அமைக்கப் பெற்று, அதைத் தொடர்ந்த கட்டுரைகள் கால வரிசைப்படி நிரல்படுத்தப்பட்டுள்ளன.

இவையன்றி, ஆரியப் பார்ப்பனியம் குறித்து எழுதப்பெற்ற ஐயா அவர்களின் பாடல்கள் யாவும் கனிச்சாறு (பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள்) தொகுப்புள் உள்ளடக்கப்பட்டதால், இக் கட்டுரைத் தொகுப்புள் இணைக்கப் பெறவில்லை.

பாவலரேறு தமிழ்க்களம் - கட்டுமானப் பணி, அலுவலக அமைப்புப் பணிச் சுமைகளின் அழுத்தத்தால் கடந்த ஈராண்டுகளாக ஐயா அவர்களின் நூல்கள் வெளிக்கொண்டுவர வேண்டிய பெரும்பணிகள் இடைநின்று போயின.

இனி, ஐயா அவர்களின் வெளிவராத நூல்கள் அனைத்தும் ஒருசேரவும், வெளிவந்த நூல்களின் மறுபதிப்புகள் அனைத்தும் ஒருசேரவும் படிப்படியாக ஓராண்டுக்குள் முழுமையாக வெளியிடப்பட வேண்டுமான முயற்சி மேற்கொள்ளப் பெற்றிருக்கிறது.

தென்மொழி பதிப்பகம் - முன்னெடுத்திருக்கிற இம் முயற்சிக்குத் துணை வேண்டி தென்மொழியில் வேண்டுகை வெளியிடப் பெற்றது.

சிலர் உடனடியாக முன் தொகை செலுத்தி யிருந்தனர். அவர்களின் பெருந்துணையைக் கொண்டும், பிற வகையில் கடன் பெற்றும் இந் நூல் உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப் பெற்றிருக்கின்றன.

ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள் - எனும் இத்தொகுப்பு நூல் உருவாகப் பெருமளவில் துணைநின்ற பேரன்பு உள்ளங்களுக்குத் தென்மொழி பதிப்பகம் தன் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது.

திருக்குறள் மணி ஐயா புலவர் இறைக்குருவனார், ஐயா புலவர் கு. அண்டிரன், திருவாளர்கள் தென்மொழி ஈகவரசன், குணத்தொகையன் - ஆகியோர் முழுமையாய் இருந்து திருத்தம் செய்து பெருந்துணை நின்றனர்.

அரசி, தமிழ்மொய்ம்பன் - ஆகியோர் காலத்தே கணிப்பொறி அச்சாக்கம் செய்தும், அச்சீடு செய்தும் பணியாற்றினர்.

அவர்கள் அனைவர்க்கும் தென்மொழி பதிப்பகம் தன் நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறது.

தமிழ் இன உணர்வாளர்கள் இந் நூலினை முழுமையாய்ப் பயன்படுத்திக் கொள்வதோடு, தமிழின முன்னேற்றத்திற்குப் பெரும்பணியாற்றிடுவதே பாவலரேறு அவர்களின் கருத்தாக்கத்திற்கு நாம் செய்யும் நன்றிக்கடனாகும்.

தி.பி. 2036, ஆடவை 4

18-6-2005

சென்னை - 601 302                                                                                                        - தென்மொழி பதிப்பகம்

 

தொடர்புடைய மற்ற பதிவுகள்:

Back to blog