வளர்ச்சியா? வீழ்ச்சியா?
ஆசிரியர் பற்றி....
பேராசிரியர் மு.நாகநாதன், சென்னைப் பல்கலைக் கழகப் பொருளியல் துறையில் விரிவுரையாளராக, இணைப் பேராசிரியராக, பேராசிரியராக, துறைத் தலைவராக 31 ஆண்டுகள் பணியாற்றியவர். 2006 முதல் 2011 வரை மாநிலத் திட்டக்குழுவின் துணைத்தலைவராகப் பணியாற்றினார். இவரது வழிகாட்டுதலில் 27 பிஎச்.டி., 100 எம்.பில்., ஆய்வுப் பட்டங்களைப் பொருளாதார ஆய்வாளர்கள் பெற்றுள்ளனர். இவர், சீனா, இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, பிரான்சு, ஆஸ்திரேலியா, ஜெர்மனி உட்பட உலகின் பல நாடுகளுக்குச் சென்று ஆய்வுரை நிகழ்த்தியுள்ளார். சிறப்புமிக்க சாஸ்திரிகனடா ஆய்வு விருதினைப் பெற்று, கனடா நாட்டின் மாண்டிரியால் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்துள்ளார். 1999இல் கனடா அரசின் அழைப்பின் பேரில் உலகின் பல நாடுகளின் தலைவர்கள், ஆய்வாளர்கள் கலந்து கொண்ட உலகக் கூட்டாட்சியியல் மாநாட்டில் பங்கேற்று உரை நிகழ்த்தினார். கூட்டாட்சி இயங்கியல் என்ற தலைப்பில் இவர் மேற்கொண்ட ஆய்விற்காகச் சென்னைப் பல்கலைக்கழகம் மூதுமுனைவர் பட்டத்தை 2007-இல் அளித்தது.
விடுதலைப் போராட்ட வீரரும், பன்மொழி அறிஞருமான க.ரா.ஜமதக்னி மொழியாக்கம் செய்த 'மூலதனம், மிகை மதிப்பு (6 தொகுதிகள்) பதிப்பாசிரியராக இருந்து வெளியிட்டுள்ளார். 'மக்கள் சீனத்தில் மலர்ந்த எண்ணங்கள்'. 'இந்தியப் பொருளாதாரம் இருளில் ஒளி', 'பாரதியின் சமூகபொருளாதார சிந்தனைகள்', 'வானியலும் சோதிடமும் -ஒரு சமூக ஆய்வு'. 'இந்தியக் கூட்டாட்சி இயல் அதிகாரக் குவிப்பா? பகிர்வா?'. 'நீதியா? நியாயமா?'. 'நெருப்புப் பொறிகள்', 'பதிவுகள் ஆகிய நூல்களைத் தமிழிலும், பொருளாதார அமைப்புகள் ஓர் ஒப்பீடு, நிதியியல் பொருளாதாரத்தின் கூறுகள், தமிழகப் பொருளாதாரம் வளர்ச்சியும் எதிர்காலமும், இந்தியக் கூட்டாட்சி இயங்கியல் சமூக, பொருளாதார, அரசியல் கூறுகளைப் பற்றிய ஓர் ஆய்வு ஆகிய நூல்களை ஆங்கில மொழியிலும் வெளியிட்டுள்ளார். சமூகநீதி, அரசமைப்புச் சட்ட இயல், கூட்டாட்சியியல் ஆகிய தளங்களில் பல கட்டுரைகளையும் தமிழ், ஆங்கில மொழிகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.