திரு.வி.க.வின் சொற்பொழிவுகள்
தமிழ் இளைஞர் முதல் முதியோர் வரையுள்ள யாவர் நெஞ்சங்களிலும் வாழும் பெரியவர் இவர். இவரை அன்போடு திரு.வி.க. என அழைப்பர். இவர் தமிழ்நாட்டுக்கும், தமிழ்மொழிக்கும் எண்ணிலடங்காத் தொண்டுகள் செய்துள்ளார். இவர் செங்கற்பட்டு மாவட்டம் துள்ளம் என்னும் ஊரில் 1883ஆம் ஆண்டு பிறந்தவர். இவருடைய பெற்றோர் விருத்தாசல முதலியார், சின்னம்மாள். எனினும் இவர்தம் முன்னோர் திருவாரூரைச் சேர்ந்தவராதலின் ‘திரு’ என்ற அடைமொழியைத் தம் பெயருக்கு முன்னால் அமைத்துக் கொண்டார். முதலில் தந்தையிடமே திண்ணைப் பள்ளியிலும், பிறகு வெஸ்லி கலாசாலையிலும் பயின்றார். இவருடைய தமிழாசான் யாழ்ப்பாணம் கதிரைவேற்பிள்ளை. தனியே தம் ஆசானிடம் புராணங்களையும், யாப்பிலக்கணத்தையும்; மயிலை மகாவித்வான் தணிகாசல முதலியாரிடம் திருவருட்பயன், சிவப்பிரகாசம், சிவஞானபோதம் போன்ற நூல்களையும் வடமொழியையும் கற்றார். பாம்பன் சுவாமிகளிடம் உபநிடதங்களும், மருவூர்க் கணேச சாஸ்திரிகளிடம் சிவகீதையும், நீலகண்ட பாடியமும், அப்துல் கரீமிடம் திருக்குர்ஆனும் கற்றார். ஜஸ்டிஸ் சர்.டி.சதாசிவராவ் தொடர்பால் ஆங்கில அறிவும் பெற்றார். சான்றோர் பேசுமிடம் எங்கணும் சென்று கேள்விச் செல்வத்தைப் பெருக்கியும், பல்திற நூல்களை விடாது பயின்று அறிவை விசாலப்படுத்தியும் வந்தார். அந்நாளைப் பெருமக்கள் பெசன்ட் அம்மையார், மறைமலையடிகள் போன்றோர் தொடர்பும் இவரை உயர்த்தியது. இவ்விதமாகப் பெற்ற ஊற்றமே இவரை ஏற்றம் பெறச் செய்தது. வெஸ்லி கலாசாலையிலும், பள்ளியிலும் தமிழாசிரியராகத் திகழ்ந்தார்