தமிழர் தலைவர் (பெரியார் ஈ.வெ.ரா. வரலாறு)
தமிழர் தலைவர் என்ற அருமையான தலைப்பில் சாமி. சிதம்பரனார் அவர்கள் குத்தூசி குருசாமியின் தூண்டுதலினால் 1938இல் பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை எழுதினார்கள்.
தந்தை பெரியார் அவர்கள் 1938இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டுப் பெல்லாரி சிறையில் இருந்ததால் அவர் சிறையிலிருந்து வெளிவந்த பிறகு அவருடைய ஒப்புதலைப் பெற்று 1939இல் இந்நூல் முதல் முறையாக வெளியிடப்பட்டது.
குத்தூசி குருசாமியின் மாமானார் வீட்டில் குஞ்சிதமும் குருசாமியும் அப்போது வாழ்ந்து வந்தனர். எனவே தமிழ் நூல் நிலையம் எனப் பெயரிட்டுக் குருசாமி வாழ்ந்த அவ்வீட்டு முகவரியே இந்நூலில் வெளியீட்டாளர் முகவரியாகப் பதிவு செய்யப் பட்டுள்ளது.
சாமி. சிதம்பரனாருக்குத் தந்தை பெரியார்தான் 1930இல் சிவகாமி அம்மையாரைத் தன் வீட்டில் வைத்து விதவைத் திருமணம், சாதி மறுப்புத் திருமணம், சடங்குகளற்ற திருமணமென நடத்திவைத்தார்கள்.
தந்தை பெரியாரின் மனைவி நாகம்மையும் சாமி.சிதம்பரனாரின் மனைவி சிவகாமியும் நெருங்கிப் பழகியதால் சிவகாமி அம்மையார் நாகம்மையிடம் பெரியாரைப் பற்றிய பல செய்திகளைக் கேட்டு இந்நூலில் பதிவு செய்துள்ளார்கள். ஏற்கனவே கருணானந்தம் எழுதிய பெரியாரின் வரலாற்றை 2007-இல் வெளி யிட்டேன். இப்போது சாமி. சிதம்பரனார் எழுதிய தமிழர் தலைவர் நூலை வெளியிடுவதில் பெருமகிழ் வடைகிறேன்.