சுரதாவின் சொல்லாட்சி
நூலாசிரியரைப்பற்றி
"சுரதாவின் சொல்லாட்சி" என்ற தலைப்பில் அய்யா முனைவர் பவெங்கடேசன் அவர்கள் "ஆய்வு நிறைஞர்" பட்டத்திற்காக செய்துள்ள இந்த ஆய்வு நூல் ஒரு முனைவர் பட்டத்திற்குரிய ஆய்வுத் தேடலுக்குரிய உழைப்போடு சிறந்து விளங்குகிறது. இவர் பரந்து பட்ட இலக்கியங்களில் பளிச்சிடும் சொல்லாட்சிகளை அறிமுகம் செய்துவைத்தப் பெருமிதத்தோடுதான் அய்யா சுரதா அவர்களின் சொல்லாட்சிகளின் பல்வேறு வகைப்பட்ட வெளிப்பாட்டு அழகுகளின் நுட்பங்களைச் சான்றாதாரங்களோடு நமக்கு வெளிப்படுத்தி மகிழ்விக்கிறார்.
முனைவர் ப. வெங்கடேசன் கல்வெட்டியல் அறிஞரும்கூட இவரது "நடுகற்கள்" பற்றிய நூல் மிகச்சிறந்த உழைப்பில் உருவான பழந்தமிழர் வீரயுக மரபின் வரலாற்றைத் தெளிய அறிவதற்கான நூலாகும். இவர் பண்பில் சான்றோர் தமிழாய்வின் பல்வேறு கிளைகளில் சோராத ஆய்வுப் பயணியாய்ப் பயணிக்கும் இவரது எழுத்துப்பதிவுகள் தமிழுக்குப் பயனுறுச் சுவடுகளாய்ப் பதியும்
"சுரதாவின் சொல்லாட்சி” என்ற இந்த நூல் கவிதை இயற்ற விருப்பமுள்ளவர் களுக்கும் ஆய்வுசெய்ய முனையும் மாணவர்களுக்குமாக விரல்பிடித்து அழைத்துப்போய் வெளிச்சம் தரும் பயன்பாட்டில் அமைந்திருக்கிறது என்பதை அழுத்தமாய்ச் சொல்லி வாழ்த்துகிறேன்.
-பாவலர் அறிவுமதி