சமயங்களின் அரசியல் - பேராசிரியர் தொ.பரமசிவன்
சமயங்களின் அரசியல் - பேராசிரியர் தொ.பரமசிவன்
பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்களின் சமயங்களின் அரசியல் நூலை வாசித்து முடித்தேன். சமயங்களின் அரசியல் எனும் ஒரு நூலும்,இவருக்கும் சுந்தர் காளிக்கும் நிகழ்ந்த சமயம் சார்ந்த உரையாடல் இன்னுமொரு நூலாகவும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. வேதம் என்பதை மறை என்றதற்கான காரணமே அதை மற்ற வர்ணத்தினருக்கு மறைக்கப்பட்டது,மறுக்கப்பட்டது என்பதே ஆகும்.
தமிழகம் நோக்கி வந்த வேதம் கற்ற பிராமணர்கள் தமிழ் பெண்களை மணந்து கொண்டதால் அவர்களின் பிள்ளைகளின் தாய்மொழி தமிழ் ஆனது என்றாலும் வழிபாட்டு இடங்களில் சமஸ்க்ருதத்தில் தான் தொடர்ந்தார்கள். வேதம் வேறு,இறைவன் வேறு என்று வைதீகத்தில் ஊறிய சம்பந்தர் சொன்னார். தன் கோத்திரத்தை பெருமையோடு வேறு கூறிக்கொண்டார். புண்ணிய நீராடல் பாவங்களை போக்கும் என்றும் அவர் சொன்னார். அப்பரோ வேதமும்,இறைவனும் ஒன்றே என்று புரட்சிக்குரல் எழுப்பினார்;சாத்திரம் பேசும் சழக்கர்காள் என்று முழங்கினார். சந்தியாவந்தனம் செய்யும் பிராமணரை நோக்கி வினா தொடுக்கிறார்,ஈசனை நினைப்பதே நீராடலை விட சிறந்தது என்றும் குறிக்கிறார். சம்பந்தரும்,அப்பரும் சந்தித்திருக்க வாய்ப்பே இல்லை;இருவரும் வெவ்வேறு காலத்தவர்கள் என்று ஆசிரியர் கருதுகிறார்