பெரியார் அடுக்குச்சொல் மற்றும் சில கட்டுரைகள்
பெரியார் பெருந்தொண்டரான சு.ஒளிச்செங்கோ, பெரியார் கையாண்ட அடுக்குச் சொல் தொடர்களை அகரவரிசையில் தொகுத்து வெளியிட்டிருக்கிறார்.
கூடவே, பெரியார் நாகம்மையின் காதல் திருமணம் பற்றிய கட்டுரை; க.நா.சுப்ரமணியம் உள்ளிட்ட விமர்சகர்கள் பெரியாரின் இலக்கியத் தரமான எழுத்துநடையைப்பற்றிக் கூறிய அபிப்ராயங்கள்; பெரியாரின் தாயார், கைவிடப்பட்ட வைணவ பிராமண சிறுவனை வளர்த்து படிக்கவைத்து சார்பதிவாளராக்கியது தொடர்பான கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.
தந்தை பெரியார் பேச்சிலும் உரைநடையிலும் தனக்கே உரிய அடுக்குச் சொற்றொடர்களை தன் கருத்தை வலியுறுத்துவதற்காகப் பயன்படுத்துவார். அந்த தொடர்களைக் கூர்ந்து நோக்கி வரிசைப்படுத்தி குறுநூலாக ஆகியிருக்கிறார் சு.ஒளிச்செங்கோ. பெரியாரின் எழுத்துக்களைப் பார்த்தால் - அவசரமும் அவசியமும் ஆகும்; அடைந்தார்கள் அடைந்துவிடுகிறார்கள்; அரிது அரிதரிது- போன்ற தொடர்களை அடிக்கடிக் காணமுடியும். இதுபோன்ற தொடர்களை அகரவரிசைப்படி எழுதி இருக்கிறார் நூலாசிரியர். அதுமட்டும் அல்லாமல் பெரியார் உரைநடை பற்றி ஆய்வாளர்கள் கூறிய கருத்துகளையும் சிறு கட்டுரை வடிவில் தந்துள்ளார். மும்பையில் இருந்து வெளிவந்த ப்ளிட்ஸ் இதழில் 1968-ல் வெளியான பெரியாரின் பேட்டிக்கட்டுரையின் சுவாரசியமான தமிழாக்கமும் இந்நூலில் உள்ளது.