மகா மதுரகவிஞர் வீ.வே.முருகேச பாகவதர் படைப்புகள் - தொகுதி-1
சமுதாய சீர்திருத்தத் துறையில் நீண்ட நாட்களாக உழைத்து வரும் என் நண்பர், தோழர் வி.வி. முருகேச பாகவதர் அவர்கள் சிறந்த தமிழ்ப்பற்றும் புலமையும் கொண்டவர். அரிய பெரிய கருத்துகளை எளிய இனிய முறையில் நாட்டு மக்களுக்கு எடுத்துரைத்து மக்கள் நல்வாழ்க்கை பெறுவதற்காக பெரும் முயற்சி எடுத்துக்கொள்ளும் பண்புடையவர்.
அவர் தமது ஆழ்ந்த அனுபவத்தையும் சிறந்த கவித்திறனையும் கொண்டு 'தமிழ்ச்சோலை' என்ற நூலை வெளியிட்டிருக்கிறார். 'தமிழ்ச் சோலை'யில் அரிய கருத்துகள் கொண்ட பல மலர்கள் உள்ளன. மக்கள் எளிதில் பாடத்தக்க 'மெட்டுக்கள்' கொண்ட பாடல்களும் மற்றும் பல கவிதைகளும் கொண்ட 'தமிழ்ச் சோலை'யில் பழங்குடி மக்களின் நிலைமை பாட்டாளிகளின் துயரம், விதவைகள் விசாரம் ஆகிய பல கருத்துகளும் சமுதாய நிலைமையை விளக்கும் சிறு கவிதைக் கதைகளும் உள்ளன. இவை, மக்களுக்குப் புத்தறிவு பிறக்கவும் புது வாழ்வு பெறவும் உதவும். சிறந்த உவமைகளும் இனிய வர்ணனைகளும் கொண்டுள்ள இக்கவிதைகளைப் பெற்று தமிழர் பெரும் பயன் அடைவார்கள் என்று நம்புகிறேன்.
மூடப் முழக்க வழக்கங்கள் ஒழிந்து சாதிபேதம் நீங்கி மக்கள் புதுநிலை அடையவேண்டும் என்று பாடுபடும் சீர்திருத்தவாதி களின் வேலைக்கு இந்தக் கவிதை பெரும் துணைபுரியும். இத்தகைய நூலை மக்கள் ஆதரித்துக் கவிஞரை மேலும் மேலும் ஊக்குவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.