காரல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு
கார்ல் மார்க்ஸின் வாழ்க்கையும், பத்தொன்பதாவது நூற்றாண்டு ஐரோப்பிய சரித்திரமும் பின்னிக் கொண்டிருக்கின்றன. பெர்ட் ராண்ட் ரஸ்ஸல் என்ற அறிஞன் கூறுகிற மாதிரி, “மார்க்ஸூக்கு ஜெர்மனி, ஒழுங்கான ஒரு திட்டத்தை வகுக்கக்கூடிய ஆற்றலை அளித்தது; பிரான்ஸ், அவனை ஒரு புரட்சியாளனாக்கியது; இங்கிலாந்து, அவனை ஓர் அறிஞனாகச் செய்தது.” எனவே இந்த நூலில், மார்க்ஸை மையமாக வைத்துக்கொண்டு அவனுடைய வாழ்க்கையோடு ஒட்டிய ஐரோப்பிய நிகழ்ச்சிகளை ஆங்காங்கே சந்தர்ப்பத்திற்கேற்றவாறு சுருக்கிக் கூறியுள்ளேன். தமிழில் அந்நிய நாடுகளைப் பற்றிய சரித்திரங்கள் பல வெளியாக வேண்டும். ஆனால் தாய்நாட்டைப் பற்றிய சரித்திரமே இன்னும் சரியான முறையில் வெளிவரவில்லை. அந்தக் காலம் விரைவில் வரவேண்டும் என்பது என் பிரார்த்தனை.
மார்க்ஸீயத்தைப் பற்றி விரிவாகவும் தெளிவாகவும் தெரிந்து கொள்ளுமாறு, மார்க்ஸின் இந்த வாழ்க்கைச் சரிதம் நம்மைத் தூண்டுகிறது என்று இதனைப் படிப்பவர்கள் கருதுவார்களானால், அதுவே இந்த நூலைப் பொறுத்த என் உழைப்பை அவர்கள் பாராட்டியதாகும்.