காகிதப்பூ
தமிழ் இலக்கண மரபில் கூறப்படும் பத்துக் குற்றங்களில் ஒன்று, ‘மற்றொன்று விரித்தல்’ ஒன்றைச் சொல்லத் தொடங்கி இடையில் அதை விட்டுவிட்டு வேறொன்றுக்குள் நுழைந்துவிடுதல் அது. உரையாடலில், சொற்பொழிவுகளில் இது சாதாரணமாக நிகழும். ஆனால் இதை நூலுக்குக் குற்றம் என்று இலக்கணம் வரையறுக்கிறது. நம் மரபில் ‘நூல்’ என்றால் அது இலக்கண நூலையே குறிக்கும். மற்றொன்று விரித்தல் என்னும் குற்றம் இலக்கண நூலுக்கே உரியது என்று கொண்டு அதை இலக்கியத்தில் ஓர் உத்தியாகப் பயன்படுத்துவது உண்டு.
மற்றொன்று விரித்தல் தெரிந்தே செய்யப்படுகிறது. வழக்கமான கதை சொல்லும் முறையைத் தவிர்த்து வெவ்வேறு விதமான முறைகளைப் பரீட்சித்துப் பார்க்கும் காலம் இது. குறிப்பாக எவையெல்லாம் கூடாது, தவிர்க்கப்பட வேண்டும் எனக் கருதப்பட்டதோ அவற்றையெல்லாம் கைக்கொள்ளும் காலம். காலத்தைச் சரியாக உணர்ந்து இப்படியோர் இலக்கிய உத்தியை இந்த நாவலுக்குப் பயன்படுத்தியிருக்கிறார்.
சமகாலப் பிரச்சனை ஒன்றை கையிலெடுத்து அதை நாவலாக்கியிருக்கிறார். நாவலுக்கு இப்படிப்பட்ட வடிவம்தான் இருக்கவேண்டும் என்னும் வரையறைகள் தகர்ந்து போய்விட்டன. பல்வேறு பரிசீலனைகளுக்கும் இடம் தரும் இலக்கிய வகைமையே நாவல். சீனிவாசன் எழுதும் நாவல்கள் எல்லாம் அப்படியான பரிசீலனைகளாக அமைவது தற்செயல் அல்ல.‘காகிதப்பூ’ மனதைக் கிளர்த்தும் ஒரு பரிசீலனை.