கடவுள் ஒரு பொய் நம்பிக்கை
நான்கு வழிகளில் மக்களின் நினைவை உயர்த்த வேண்டும் என இந்நூல் முயல்கிறது. ஒன்று, எந்த மதத்தில் பிறந்தோமோ, அதை ஒட்டியே வாழ வேண்டும் என்பதில்லை; கடவுள், மற்றும் மத நம்பிக்கையற்ற வாழ்வும் சாத்தியப்படும் என்ற நினைவை ஏற்படுத்துகிறது. இரண்டாவதாக, நினைவை உயர்த்துவது அல்லது விழிப்பை உண்டாக்குவது, இப்பேரண்டம், மற்றும் உயிர்களின் தோற்றம் வளர்ச்சி ஆசியனவற்றைப் பற்றியதாகும். டார்வினிய இயற்கைத் தேர்வின் மூலம் உண்டாகும் படிநிலை வளர்ச்சி, எல்லா வகை உயிர்களும் வடிவமைக்கப்பட்டன போலக் கச்சிதமாக விளங்குவதற்கான காரணத்தைத் தெளிவாக விளக்குகிறது. அதைப் போன்றே இப்பேரண்டத்தின் தோற்றத்தையும் அறிய முடியும் எனும் வகையில் நினைவு உயர்த்தப்படுகிறது. மூன்றாவதாக, குழந்தைகளுக்கு மதம் இல்லை எனும் விழிப்பை உண்டாக்குவது பற்றியது. நான்காவதாக, நாத்திகராக வாழ்வது பெருமைக்குரிய ஒன்று என்பது, நாத்திகரின் மனம் விடுதலை பெற்றதாகவும் ஆரோக்கியமானதாகவும் திகழ்கிறது. மனித நேயத்தைப் போற்றும் நாத்திகர் பெருமையுடன் வாழத் தகுந்தவர். கடவுள் இல்லை, மதம் தேவையில்லை என மெய்ப்பிப்பதுடன், கடவுள் கருத்தாலும், மத அமைப்பாலும், இவற்றை வலியுறுத்தும் “புனித நூல்கள்” நவிலும் கொள்கை கோட்பாடுகளைக் கண் மூடி நம்பி நடப்பதாலும் நிகழும் கொடுமைகள், கேடுகள் ஆகியன குறித்தும், ஒரு படிநிலை வளர்ச்சி உயிரியலாளர் என்ற முறையில் ரிச்சர்டு டாகின்ஸ் விரிவாக எழுதியுள்ளார். புனித நூல்கள் செப்பும் அறநெறிகளின் கோணல் தன்மை குறித்தும், வாழ்வின் செம்மை அறங்களை வகுத்துக் கொள்ள கடவுள், மத நம்பிக்கை தேவையில்லை என்றும் விளக்குகிறார். - கு.வெ.கி. ஆசான்