ஃபுக்குஷிமா: ஒரு பேரழிவின் கதை
ஃபுக்குஷிமா: ஒரு பேரழிவின் கதை S.A.Vengada Soupraya Nayagar
ஃபுக்குஷிமாவில் அணுஉலை வெடிப்பு நிகழ்ந்த பின்னர் நடந்தது என்ன என்பதை ‘ஃபுக்குஷிமா ஒரு பேரழிவின் கதை’ என்ற நூல் மூலம் மிக விரிவாகப் பதிவு செய்திருக்கிறார் ஃபிரெஞ்சு நாவலாசிரியரும் பேராசிரியருமான மிக்கேயில் ஃபெரியே. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பணியாற்றிவரும் மிக்கேயில் ஃபெரியே, அணுஉலை வெடிப்பு நிகழ்ந்தபோது தலைநகரில் வாழ்ந்தவர். ஃபுக்குஷிமாவிலிருந்து 239 கி.மீ. தொலைவில் டோக்கியோ இருந்த நிலையிலும் அணுஉலை விபத்தால் அந்த நகரமும் பாதிக்கப்பட்டிருந்தது. இந்த விபத்தால் புரட்டிப் போடப்பட்ட ஜப்பானிய நிலத்தையும் மக்களையும் பற்றிய நேரடி சாட்சியமாகவே ஃபெரியே இந்த நூலை எழுதியுள்ளார். புரிந்துகொள்ளக் கடினமான அறிவியல் நூலாகவோ, தகவல் தொகுப்பாகவோ இல்லாமல் கிட்டத்தட்ட ஒரு இலக்கியப் பிரதிக்கு உரிய கனத்துடன் இந்த நூலை ஃபெரியே எழுதியுள்ளார். கிரேக்க, ரோம இதிகாசங்கள், நவீன எழுத்தாளர்களின் கதைகள், கதாபாத்திரங்களுடன் ஒவ்வொரு நடப்புச் சம்பவத்தையும் உருவகமாகப் பொருத்தும் அவருடைய பாங்கு நூலுக்குப் புதிய பரிமாணத்தை அளிக்கிறது. சூழ்ந்து துரத்தும் துயரம், அரசு-ஊடகங்கள்-நிர்வாகம் போலியாகக் கட்டமைக்க முயற்சிக்கும் நம்பிக்கைகள், மக்கள் அணுஅணுவாக அனுபவிக்கும் அவலம் போன்ற அனைத்தும் இந்த நூலெங்கும் விரவிக் கிடக்கின்றன. சில இடங்களில் அவநம்பிக்கை மேலிட நாம் வாழும் உலகம் எவ்வளவு போலித்தனங்களைச் சூடிக்கொண்டுள்ளது என்பது பரிகாசமாகவும் வெளிப்படுத்தியுள்ளார்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.