புளூ புக்
எந்த ஒரு ஆதிக்கச் சக்திக்கும் கருவியாகச் செயல்படாத, பெரிய நிலைகளில் உள்ள மனிதர்களுக்குத் துதிபாடாத, ஒரு மனிதனின் கருத்துக்கள் என்று மட்டுமே என்னுடைய கருத்துக்களைப் பற்றிக் கூறிக் கொள்ள விரும்புகிறேன்.'' என தன்னுடைய கருத்துக்களைப் பற்றி மதிப்பிடுகிறார் அம்பேத்கர். இவ்வாறான மதிப்பீடு அவரது கருத்துக்களைப் பற்றிய குறைவான மதிப்பீடே என்பதையும் உண்மையில் அவரது கருத்துக்களின் பன்முகத் தன்மை கொண்ட வீச்சை எதனுடனும் ஒப்பிட முடியாது என்பதையும் இந்நூலைப் படிக்கும் ஒவ்வொரு வாசகரும் உணர முடியும்.
தனது வாழ்நாளெல்லாம் எந்தக் கருத்துக்களையும் நடைமுறை களையும் அம்பேத்கர் எதிர்த்தாரோ அந்தக் கருத்துக்களுக்கும் நடைமுறைக்கும் சொந்தக்காரர்களாக இருப்பவர்கள் இன்று அவரது கருத்துக்களை விழுங்கத் துடிக்கிறார்கள். பிற்படுத்தப்பட்ட சாதி மக்களை மூளைச்சலவை செய்து ஏமாற்றி வருகின்ற அந்த மதவாதக் கும்பல் இன்று ஒடுக்கப்பட்ட மக்களையும் தங்களது நச்சு வளையத் திற்குள் தந்திரமாக இழுப்பதற்கு முயற்சி செய்கிறது. இது ஆபத்தானதாகும். சில இடங்களில் ஒடுக்கப்பட்ட மக்களும் அவ்வளையத்தினுள் சிக்குகின்றனர். இது அதைவிட ஆபத்தானதாகும்.