பெருந்தலைவர் எம்.சி.ராஜா சிந்தனைகள் - முதல் தொகுதி
பொறுப்புள்ள சுயாட்சியைப் பெறப்போகும் வேளையில், இம்மண்ணின் மெஜாரிட்டியான சமூகத்தவருக்கு ஒரு எச்சரிக்கை விடுக்கிறேன். உங்களுடைய கைகளில் அதிகாரத்தைப் பெறும் வேளையில், அதைத் தவறாகப் பயன்படுத்தாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். வெகு விரைவிலோ அல்லது , பிற்காலத்திலோ ஒரு நாள் வரும். அந்த நாள் வராமலும் போகலாம். அதெல்லாம் ஒடுக்கப்பட்ட இனத்தவரைப் பொறுத்தமட்டில் நாட்டின் நிர்வாகத்தை நீங்கள் எவ்வாறு நடத்தப்போகிறீர்கள் என்பதைப் பொறுத்ததே, ஒடுக்கப்பட்ட இனத்தவர் தங்களுடைய சட்டபூர்வமான உரிமைகளுக்காகவும் , சலுகைகளுக்காகவும் போராடும் நாள் வரும். அப்படி ஒரு நாள் வரும்போது, அவர்களுடைய சட்டபூர்வமான கோரிக்கைகளை நீங்கள் எதிர்த்தாலோ , அல்லது ஒடுக்கினாலோ அப்பொழுது அவர்கள் உங்களுடைய அரசாங்கத்திற்கு எதிராக ஒத்துழையாமை இயக்கத்தை நடத்துவார்கள், அத்தகையதொரு நிலைமை ஏற்படும்போது இந்நாளைய பிரிட்டிஷ் அரசு உங்களுடைய ஒத்துழையாமை இயக்கத்தை எவ்விதத்தில் பார்க்க வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்களோ, அதே விதத்தில் அவர்களுடைய கோரிக்கைகளையும் அபிலாசைகளையும் நீங்களும் பார்க்கிறவர்களாக விளங்கிட கவனமாய் இருங்கள்.
தலித் வரலாற்று வரிசையில் எம்.சி.ராஜாவின் சிந்தனைகள் என்ற நூலின் முக்கியத்துவம் அறியப்பட வேண்டியது. தலித் சகோதரர்களின் விடுதலைக்காகத் தன் வாழ்நாளெல்லாம் அதிகபட்சமாக உழைத்திருக்கிற ராஜாவின் சிந்தனைகள் அலெக்ஸ் அவர்களால் கவனிக்கப்பட்டு, தொகுக்கப்பட்டு இருக்கிறது. கவனத்தில் இருந்து மறைக்கப்பட்ட ஒரு சமூகத்தின் வேதனைகள், பெற வேண்டிய அக்கறைகள், மேற்கொள்ளவேண்டிய மீட்பு முயற்சி பற்றிய எம்.சி.ராஜாவின் சிந்தனைகள், மிகவும் குறிப்பிடத்தக்க ஆய்வுப் பதிப்பு!