இந்திய ஆட்சி மொழி
மிகச் சிறிய நாடுகளான - இலங்கை இரண்டு மொழி களையும், மலாய் நாடு மூன்று மொழிகளையும், சிங்கப்பூர் நான்கு மொழிகளையும் ஆட்சி மொழிகளாக ஆக்கியிருக்கின்ற நிலையில், உலகத்திலே பெரும்பான்மை மக்களைக் கொண்ட சீன நாட்டுக்கு அடுத்த நிலையில் நூற்றுப் பத்துக்கோடி மக்களைக் கொண்டு சீனாவுக்கு அடுத்த நிலையில் இருந்து கொண்டிருக்கின்ற மிகப்பெரிய நாடு இந்தியா. இங்கே ஆட்சி மொழிகளாகத் தகுதிபெற்ற மொழி - இருபது. இவ்வாறு இருபது மொழிகளையும் ஆட்சி மொழிகளாக ஆக்காமல் - ஒரே ஒரு இந்தி மொழியை மட்டும் ஆட்சி மொழியாக ஆக்கிவிட்டனர்.
அதனால், தமிழ்நாட்டு மொழிச் சிக்கலும் தீரவில்லை , இந்திய நாட்டு மொழிச் சிக்கலும் தீரவில்லை .
தமிழ்நாட்டு மொழிச் சிக்கலைத் தீர்த்துக்கொள்ளவும் - இந்திய நாட்டு மொழிச் சிக்கலைத் தீர்த்துக் கொள்ளவும் சரியான நெறிமுறைகளைத் தெள்ளத் தெளிவாக எடுத்து விளக்குகின்ற ஒரு கலங்கரை விளக்கம்தான் “இந்திய ஆட்சி மொழி” என்னும் இந்த நூல்.
இந்த நூலை மூதறிஞர் வ.சுப. மாணிக்கனார் இயற்றி அளித்துள்ளார். கட்டுரை வடிவில் சொன்னால் புரிந்து கொள்வரோ, என்று அய்யுற்ற மாணிக்கனார், கடித இலக்கியமாக வடித்துத் தந்துள்ளார் கருத்தில் சரியாகச் சென்று பதியும் வகையில்.