நான் ஓர் இந்துவாக சாக மாட்டேன்:டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்
ஜாதி என்ற முதன்மை முரணில் சிக்கித் தவிக்கும் இந்தியாவின் பெரும்பான்மையினரான தலித் மக்கள், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர் அனைவரும் 'இந்துக்கள் அல்லர்' என்று தன்னுடைய ஆய்வின் மூலம் நிறுவிய அம்பேத்கர், இம்மக்களை 'இந்துக்கள் அல்லாதவர்' களாக்கவே பெரும் முயற்சிகளை மேற்கொண்டார். இந்துமயமாக்கல் தீவிரமடைந்து வரும் இன்றைய காலகட்டத்தில் அம்பேத்கரின் இச்செயல்திட்டமே அதைத்தடுத்து நிறுத்தும். இம்மாபெரும் புரட்சிக்கான வித்துக்கள் காலத்தின் அவசியம் கருதி தொகுக்கப்பபட்டுள்ளன. அதுமட்டுமல்ல, ஈராயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் ஜாதியை நியாயப்படுத்தி தங்களை நிர்வாணமாக்கிக் கொள்ளும் 'மனிதர்' களின் எண்ணிக்கை பெருகி, கடும் அச்சுறுத்தலை உருவாக்கி வருகிறது. இப்பேராபத்தையும் தடுத்து நிறுத்தும் ஆயுதமே இந்நூல்.
”ஜாதி அமைப்பின் வேரைக் கண்டறிந்து அதை நிர்மூலமாக்குவதற்கான வழிகளை "சாதி ஒழிப்பு' நூலில் முன்மொழிந்த பாபாசாகேப் அம்பேத்கர், திராவிட தொல்குடி மக்களின் பிறவி இழிவை முற்றாக ஒழிக்கும் நோக்கில் – "நான் ஓர் இந்துவாக சாகமாட்டேன்' என்ற விடுதலை முழக்கத்தை 1935 இல் அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக, 1956 இல் அந்த உறுதிமொழியை பத்து லட்சம் மக்களுடன் இணைந்து அவர் நிறைவேற்றியது வரையிலான பயணமே இந்நூல். இச்செயல் திட்டத்தை வலியுறுத்தி 21 ஆண்டுகளாக அதை ஓர் இயக்கமாகவே அவர் முன்னெடுத்துச் சென்றார். அம்பேத்கர் முன்னெடுத்த இவ்வியக்கம் தலித் மக்களுக்கு மட்டுமே உரியது என்ற கருத்து பரவலாக நிலைப்பெற்றிருக்கிறது. ஆனால் அதில் உண்மை இல்லை என்பதை இந்நூல் உணர்த்துகிறது.”