குடி அரசு கையேடு 1925 முதல் 1938 வரை
1925 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு 1949 நவம்பர் முடிய வெளிவந்த ‘குடி அரசு’ வார ஏடு தமிழக வரலாற்றுப் போக்கையும் அதனோடு தொடர்புள்ள இந்திய வரலாற்றுப் போக்கையும் சமூகப்புரட்சிப் பார்வையில் புரிந்து கொள்ளவும்; பெரியாரின் பொதுவாழ்வில் நிகழ்ந்த இயங்கியல் மாற்றங்களையும், கொள்கை, வேலைத்திட்ட வளர்ச்சிப் போக்குகளையும் வெளிப்படுத்தவுமான மிகச்சிறந்த ஆவணமாகும்.
சுயமரியாதை இயக்கம் சுடர்விட்டுப் பரவி காட்டாற்று வெள்ளம்போல் சமுதாயக் கசடுகளை அடித்துச் சிதைத்தவாறு முழு வீச்சோடு களமிறங்கியது. 1938 டிசம்பர் இறுதி நாட்களில் சென்னையில் நடைபெற்ற மாநாட்டில் நீதிக்கட்சி என்னும் தென் இந்திய நலஉரிமைச் சங்கத்தின் தலைவராக இந்தி எதிர்ப்புக்காய் சிறைப்பட்டிருந்த நிலையிலேயே பெரியார் தேர்ந்தெடுக்கப்பட்டார். முற்று முழுதாக வேறு திசை விலகலின்றி சமுதாய சமத்துவம், பகுத்தறிவுப் பணிகளை மட்டுமே ஆற்றிவந்த அருமையான காலகட்டம் 1925 முதல் 1938 வரையிலான காலமாகும். இந்தக் கால இடைவெளியில் ‘குடி அரசு’ ஏட்டில் வெளி வந்துள்ள பெரியாரின் எழுத்துகளையும் பேச்சுகளையும் தொகுத்து பெரியார் திராவிடர் கழகம் பல்வேறு தடைகளை சந்தித்து வெளியிட்டது.
இந்த குடிஅரசு நூற்றாண்டில் தொகுப்பிலுள்ள பதிப்புரை மட்டும் சிறு கையேடாய். ஒவ்வொரு பதிப்புரையிலும் அந்த 6 மாதத்திற்கான குடிஅரசு செய்தி வழிகாட்டலும் முக்கிய கட்டுரைகளின் விளக்கமும் மறுவாசிப்பிற்கு தூண்டுகோலாய் அமையும்.