செவ்வாழை
ஏழை மக்களின் உழைப்பை உறிஞ்சிக் கொழுத்து வாழும் முதலாளிகளின் பிடியில் இருந்து உழைக்கும் மக்களை விடுவிக்க வேண்டும் என்ற சிந்தனையைக் கொண்ட அண்ணா, முதலாளிகளின் வளர்ச்சி தொழிலாளிகளின் முயற்சியாலும் உழைப்பாலும் மட்டுமே ஏற்படுகின்றது என்பதைத் தன்னுடைய இலக்கியங்களில் பதிவுசெய்யத் தவறவில்லை. ஆனால் அந்த உழைப்பாளிகளை முதலாளிகள் தங்கள் அடிமைகளாகக் கருதி இழிவாக நடத்தும் செயலை அண்ணா மிகக் கடுமையாகச் சாடுகின்றார். செவ்வாழை என்னும் சிறுகதையின் மூலம் உழைப்பவர்படும் துன்பம் உணர்த்தப்படுகிறது. பாடுபட்டும் பலனை அனுபவிக்க முடியாத நிலையில் இருப்பதை எண்ணி மனவருத்தப்படும் செங்கோடனின் நிலை அன்றைய கால உழைக்கும் வர்க்கத்தினரின் நிலையாக இருப்பதை, ‘‘பாடுபட்டோம், பலனைப் பெறப்போகிறோம், இதிலே ஏற்படுகிற மகிழ்ச்சிக்கு ஈடு எதுவும் இல்லை. இதைப் போலவே, வயலிலும் நாம் பாடுபடுவது நமக்கு முழுப்பயன் அளிப்பதாக இருந்தால் எவ்வளவு இன்பமாக இருக்கும் உழைப்பவனுக்கே நிலம் சொந்தம் – பாடுபடாதவன் பண்ணையாராக இருக்கக்கூடாது என்று சொல்லும் காலம் எப்போதாவது வருமா என்றெல்லாம் கூட இலேசாகச் செங்கோடன் எண்ணத் தொடங்கினான்.” என்னும் கூற்று உணர்த்தும். அதோடு உழைப்பவனுக்கே நிலம் சொந்தம் என்ற செங்கோடனின் மனத்தில் தோன்றும் சிந்தனை வழியாக உழைப்பவர்களுக்குக் காலத்தால் ஏற்பட வேண்டிய மாற்றத்தின் வித்தை விதைக்கின்றார் அறிஞர் அண்ணா.
அண்ணாவின் பலதிற ஆற்றல் எவரையும் திகைக்க வைக்கக் கூடியது. பொதுமேடை வானில் முன்பு ஒளிர்ந்த மின்மினிகள், விண் மீன்கள், பிறைமதியங்கள் யாவும் ஒதுங்க, பேரொளி வீசிப் புதுப்பொழுது மலரச் செய்யும் 'வெங்கதிரவன்' அண்ணா அவர்களே என்பதை அறியாதவர் இலர். எழுத்துத் துறையிலும் சுவை குன்றாது, எப்பொருள் பற்றியும் அறிவுப் பயன் நிறைவுறும் வண்ணம், எத்தனைப் பக்கம் வேண்டுமானாலும் எழுதும் திறன் அவர் தனியுரிமையே ஆகும். எழுத்துக்கு ஒரு நடை மேடைப் பேச்சுக்கு ஒரு நடை, உரையாடலுக்கு ஒரு நடை என்பது அவரிடம் காணமுடியாது. இருந்தால் இருப்பார்; எழுந்தால் எதிலும் ஒரே காளமேகந்தான்.