கல்விச் சிந்தனைகள் - பெரியார் ( ஆறாவது பதிப்பு )
‘உனக்கு நீயே விளக்கு’ என்றவர் புத்தர். அது போல் பெரியார் கல்வியின் பயன்களாக இரண்டு முக்கிய விஷயங்களைக் குறிப்பிடுகிறார். “நன்று, கல்வியால் மக்களுக்குப் பகுத்தறிவும் சுயமரியாதை உணர்ச்சியும் ஏற்பட வேண்டும். மற்றொன்று மேன்மையான வாழ்வுக்குத் தொழில் செய்யவோ அலுவல் பார்க்கவோ பயன்பட வேண்டும்.’’
‘மக்கள் விடுதலை அடைவதற்கான மார்க்கங்களில் முதலாவதாக’ இருக்க வேண்டிய கல்வி நடைமுறையில் அதற்கு எதிராக உள்ளது என்று கருதினார் பெரியார். மக்கள் தொகையில் பெரும்பாலோர் கல்வி வாய்ப்பில்லாமல் உள்ளனர். மதத்தைக் காப்பாற்றிக் கொண்டு எல்லோரும் படிக்க வேண்டுமென்பது அறியாமையேயாகும்.
அதைப் போல்தான் பெண்களுக்குக் கல்வியும் உத்தியோகமும் கொடுத்தால் ஒன்றும் குடி மூழ்கி விடாது. மாறாக பெண்களின் முன்னேற்றம் அதிகமாகி பிள்ளை குட்டி பெறும் எந்திரம் என்ற கொடுமைக்கு ஒரு முடிவும் ஏற்பட்டு விடும்.
கல்வியில் மதிப்பெண்களைப் பார்த்துத் தகுதி, திறமை குறிப்பது பெரிய முட்டாள்தனமும், மிகப்பெரிய அயோக்கியத் தனமுமேயாகும். நாம் படிப்பது உத்தியோகத்திற்காக மட்டுமல்ல, அறிவிற்காக! நாம் செய்யும் காரியம் அறிவிற்கு ஏற்றதா, உலக நடப்பிற்கு ஒத்ததா என்று பார்க்க வேண்டும். எதையும் நாம் அறிவைக் கொண்டு சிந்தித்து ஏற்க வேண்டும்.